ADVERTISEMENT

எடப்பாடியை முதல்வராக்கியதே நாங்கள் தான்… சசிகலாவை சந்திக்க தைரியம் இருக்கிறதா? டிடிவி தினகரன் விளாசல்!

Published On:

| By Pandeeswari Gurusamy

TTV VS EPS

எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே நாங்கள் தான் என்று டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று (செப்டம்பர் 18) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ” 2011ஆம் ஆண்டு அம்மா என்னை கட்சியில் இருந்து நீக்கியது உலகமே அறிந்த விஷயம். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் நான் 10 ஆண்டுகளாக நான் யாருடனும் தொடர்பில் இல்லை.

ADVERTISEMENT

எடப்பாடி பழனிசாமிக்கும் எனக்கும் தனிப்பட்ட பகை எதுவும் இல்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் 2017 பிப்ரவரி 14-ஆம் தேதி சசிகலா பொதுச்செயலாளராக்கப்பட்டார். அவர் பெங்களூரு சிறைக்குச் சென்றதால் அனைவரும் சேர்ந்துதான் கட்சியில் இணைத்து என்னை துணைப் பொதுச் செயலராக்கினர்.

எடப்பாடி பழனிசாமியை நாங்கள் தான் முதல் அமைச்சர் ஆக்கினோம். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நான் போட்டியிடுவதாக அவரிடம் கூறவேயில்லை. ஏன்… ஜெயலலிதா இருக்கும் காலத்திலேயே நான் மதுரை, தேனி பகுதியில் அரசியலில் இருந்தவன்.

ADVERTISEMENT

சசிகலா சிறையில் இருந்தபோது வேட்பாளர்கள் பட்டியலைத் தயார் செய்ய இப்போது எடப்பாடி பழனிசாமி அணியில் இருக்கும் தளவாய் சுந்தரம், ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோரும் என்னுடன் வந்தனர்.

தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு ஃபார்ம் ஏ, ஃபார்ம் பி-யில் கையெழுத்திடும் அதிகாரம் துணைப் பொதுச் செயலரான எனக்கு கிடையாது. இருந்தாலும் அப்போது என்னை தேர்தலில் போட்டியிட சொன்னவர் சசிகலா. இதைப்பற்றி என்னுடன் வந்தவர்களிடமே கேட்டுக்கொள்ளலாம். அதன் அடிப்படையில்தான் போட்டியிட்டேன்.

நான் ஆர்கே நகர் தேர்தலில் வெற்றி பெற்றால் முதல்வர் ஆகிவிடுவேன் என்று எடப்பாடி பழனிசாமி நினைத்தார். அச்சப்பட்டார். நான் தாமரை இலை தண்ணீர் போல இருப்பவன். பதவி ஆசை இருந்திருந்தால் நான் அம்மா காலத்திலேயே பல்வேறு பதவிகளுக்கு வந்திருப்பேன்

ADVERTISEMENT

எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியது நாங்கள்தான். நான் நினைத்தால் சித்தி சசிகலா சிறைக்குச் செல்லும் போது அந்தப் பதவியை வாங்கியிருக்க முடியும். அன்றைக்கு பழனிசாமியை முதல்வராக்கி அவரது பதவியை பாதுகாக்க வேண்டிய வேலையை நான் பார்த்திருக்க வேண்டியது இல்லை. கூவத்தூரில் இருந்து பலர் காய்கறி வண்டியில் ஏறி வெளியேற நினைத்தனர்; பலரும் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்க தயங்கினர் என்பதுதான் உண்மை. இப்போது தைரியம் இருந்தால் சசிகலாவை போய் நேருக்கு நேராக பழனிசாமியால் பார்க்க முடியுமா? என்னையே பார்க்க தயங்குகிறவர்தான் எடப்பாடி பழனிசாமி.

பழனிசாமி முகம் வாடியுள்ளது. அவரை விட்டுவிடுங்கள் பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை அவரை ஏற்றுக்கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு போக மோட்டோம். இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share