டெல்லியில் இன்று (பிப்ரவரி 10) தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் அக்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தேர்தல் கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை குழு அமைக்க வலியுறுத்தி நாளையோ நாளை மறுதினமோ முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசவிருக்கிறோம் என்று கூறினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தமிழகப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், ‘கடந்த நவம்பர் மாதமே தமிழக காங்கிரஸ் கமிட்டிக்காக 5 பேர் கொண்ட ஒரு குழுவை காங்கிரஸ் தலைவர் அமைத்தார். இதைத்தொடர்ந்து இக்குழு கடந்த டிசம்பர் 3ஆம் தேதி முதல்வரைச் சந்தித்து பேசியது. இந்த சந்திப்பு நடந்து 70 நாட்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையிலும், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
எந்தத் தொகுதிகளில் போட்டியிடப் போகிறோம், எத்தனை இடங்கள் என்பது குறித்துத் தெளிவு கிடைத்தால் மட்டுமே எங்களால் முழுமையாகத் தயாராக முடியும் என்ற நம்பிக்கையுடன், அவர்கள் உடனடியாகப் பேச்சுவார்த்தையைத் தொடங்குவார்கள் என்று காத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் குழு அமைக்காமல், கூட்டணிப் பேச்சுவார்த்தைகளும் தொடங்காமல் இருப்பது எங்கள் தமிழக தலைவர்களிடையேயும் தொண்டர்களிடையேயும் வருத்தைத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள எங்கள் தலைவர்கள், ஏன் இந்தக் கூட்டணிப் பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை என்று எங்களிடம் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாங்கள் தாமதப்படுத்தவில்லை. நாங்கள் குழு அமைத்துவிட்டோம். தொடர்ந்து பேச்சுவார்த்தை குழு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை” என்றார்.
நாங்கள் யாரையும் குற்றம் சொல்லவில்லை , மாறாக உண்மையான நிலவரத்தை விளக்குவதற்காகவே இதைச் சொல்கிறோம் என்று கூறிய அவர், “நாங்கள் தொடர்ந்து இது குறித்துக் கேட்டு வருகிறோம். 70 நாட்களாக காத்திருக்கிறோம். தேர்தல் நெருங்கி வருகிறது. எங்களுக்கு போதுமான நேரம் தேவைப்படுகிறது” என்று குறிப்பிட்டார்.
