கடந்த தேர்தலை விட இந்த முறை கூடுதல் தொகுதிகளை திமுகவிடம் கேட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதற்கு, அந்தந்த கட்சியினருடன் திமுக தொகுதி பங்கீடு குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (மார்ச் 10) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சண்முகம் மற்றும் கனகராஜ், சாமுவேல்ராஜ், கண்ணன் ஆகியோர் திமுக பேச்சுவார்த்தை குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த பெ. சண்முகம், “2ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் திமுக சொன்ன தொகுதிகளின் எண்ணிக்கை ஏற்புடையதாக இல்லை. புதிய பல கட்சிகள் இந்த கூட்டணியில் சேர்ந்து இருக்கிறது என்ற நியாயமான விஷயத்தை ஏற்றுக்கொள்கிறோம். அவர்களுடைய தலைமை இடத்திலே பேசிவிட்டு மீண்டும் நாளை சந்திக்கலாம் என்ற முறையிலே சொல்லியிருக்கார்கள்” என்றார்.
அவரிடம், கடந்த முறை கொடுத்த 6 தொகுதிகள் கொடுத்தால் ஓகேவா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பெ.சண்முகம் சிரித்துக்கொண்டே, “இங்கேயே ஒரு நெகோஷியேஷன் நடத்திக்கிட்டு இருக்கீங்களே. கூடுதல் தொகுதி… கூடுதல் தொகுதின்னா கடந்த முறையை விட கூடுதல்னு தானே அர்த்தம்” என்றார்.
மேலும் அவர், “முதலில் எத்தனை தொகுதிகள் என்று முடிவு செய்த பிறகு எந்தெந்த தொகுதிகள் வேண்டும் என்ற பட்டியலை கொடுப்போம்” எனவும் தெரிவித்தார்.
நாளையும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
