சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மேலும் சில கட்சிகளுடன் பேசிக்கொண்டிருக்கிறோம் என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இதையொட்டு என்.டி.ஏ. கூட்டணியில் பாஜக, அதிமுக, பாமக, அமமுக ஐஜேகே, தமாகா, புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன.
தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்கள், தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்க்காணல் நடத்தி வருகின்றனர்.
அந்தவகையில் இன்று (ஜனவரி 27) பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் பாமக தலைவர் அன்புமணி நேர்காணல் நடத்தி வருகிறார். காலை 10 மணி முதல் மாலை 6 மணி நேர்காணல் நடைபெறுகிறது.
இதற்கிடையே மதிய இடைவெளியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையவுள்ளன” என்றார்.
அப்போது அவரிடம் ஓபிஎஸ் இணைவாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அன்புமணி, ‘அவரிடம் பேசிக்கொண்டிருக்கிறோம். அவர் எந்த மனநிலையில் இருக்கிறார் என்று அவரிடம் தான் கேட்க வேண்டும்’ என்று பதிலளித்தார்.
இதற்கிடையே மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ” அதிமுகவில் பிரிந்து கிடக்கின்ற சக்திகள் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்பதே எனது கோரிக்கை. ஒன்றிணைவோமா என்பது ஆண்டவன் கையில் தான் இருக்கிறது” என்றார்.
மேலும் டிடிவி தினகரன் உங்களை கூட்டணிக்கு அழைத்தாரா என்ற கேள்விக்கு, ”என்னை யாரும் கூப்பிடவில்லை” என்று பதிலளித்தார்.
இதற்கிடையே ஓபிஎஸ் ஆதரவாளரான ஐயப்பன் எம்.எல்.ஏ, இன்று டிடிவி தினகரனை சந்தித்து பேசியுள்ளார். ஆனால் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று டிடிவி தினகரன் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
