வீழ்ந்த இடத்தில் இருந்தே மிளிரத் தொடங்கிய தன்னம்பிக்கை மனிதனின் பயணம் குறித்த கதையை இங்கு பார்க்கலாம்.
வயநாடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடந்த கோர நிலச்சரிவில் சிக்கி தனது மனைவி, குழந்தைகள் உள்ளிட்ட 11 பேரை இழந்தை நௌஃபல் என்பவர் தற்போது ‘ஜூலை 30’ என்ற பெயரில் உணவகம் நடத்தி வருகிறார். எந்த இழப்பும் முடிவல்ல வேறு ஒன்றின் தொடக்கம் என்பதை காட்டுவதாக சமூக வலை தளங்களில் இவர் குறித்த செய்திகள் வைரலாகி வருகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் அழகான மலைப்பாங்கான மாவட்டம் கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டம். இங்குள்ள முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட இடங்களில் கடந்த ஆண்டு ஜூலை 30ம் தேதி நள்ளிரவில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயினர்.

ஒரே நாளில் மண்ணுக்குள் புதைத்த வாழ்க்கை!
இந்தியாவையே அதிர செய்த இந்த நிலநடுக்கத்தில் தன் குடும்பத்தின் 11 உயிரை பறி கொடுத்தவர் யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாத துயரத்திற்கு தள்ளப்பட்டார் நௌஃபல்.
அவரது ஒட்டு மொத்த வாழ்க்கையும் இயற்கையின் கோர தாண்டவத்தால் சின்னா பின்னமானது. நிலச்சரிவு நடந்த போது ஓமனில் தன் குடும்பத்தினரின் நல்வாழ்விற்காக பணியாற்றி வந்தார். செய்தி அறிந்து அதிர்ச்சியில் அலறியடித்து சொந்த மாநிலத்திற்கு திரும்பினார். கேரளா திரும்பியவருக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி. நௌஃபல் தனது வீட்டை தேடி சென்றபோது அங்கு அவர் பார்த்தது வெறும் கட்டட இடிபாடுகளை மட்டும் தான்.
நௌஃபல் தனது வீட்டை மட்டும் நிலச்சரிவுக்கு பறிகொடுக்கவில்லை. தனது அன்பு மனைவி 3 குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் 11 பேரை ஒட்டு மொத்தமாக பறிகொடுத்தார். தனது வாழ்க்கை முழுவதும் கேள்விக்குறியானதை எண்ணி கதறினார்.
பின்னர் தன்னை தானே தேற்றிக்கொண்டு மீள்வதற்கான வழியை தேடி எஞ்சிய வாழ்க்கைக்கான பயணத்தில் நம்பிக்கையோடு காலடி வைத்தார். தற்காலிகமாக ஒரு வீட்டை எடுத்து தங்கி மீண்டும் தனது வாழ்வை தானே செதுக்க ஆரம்பித்தார்.

ஒட்டு மொத்த வாழ்வாதரத்தையும் இழந்து போராடிக் கொண்டிருந்த நௌஃபலுக்கு நட்வத்துல் முஜாகிதீன் என்ற முஸ்லிம் சமுதாய அமைப்பு 7 லட்சம் நிதி திரட்டி கொடுத்தது.
‘ஜூலை 30’ உணவகம்!
தள்ளாடிய நௌஃபல் வாழ்வில் கிடைத்த இந்த சிறு வெளிச்சத்தை பிடித்து அடுத்தகட்டத்திற்கு தனது வாழ்வை நகர்த்த தொடங்கினார். கடந்த ஜனவரி 25ம் தேதி தனது வாழ்வை புரட்டிப்போட்ட நிலச்சரிவை நினைவு கூறும் வகையில் நிலச்சரிவு நடந்த நாளான ‘ஜூலை 30’ என்ற பெயரில் ஒரு புது உணவகம் ஒன்றை தொடங்கி உள்ளார். உணவகம் அவரது மறைந்த மனைவி சஜ்னாவின் ஆசை.

என் வாழ்க்கை ஒரு பாடம்!
மறைந்த மனைவியின் ஆசையை நிறைவேற்றுவதில் தொடங்கி தன் வாழ்வின் எதிர்காலத்தை தற்போது வடிவமைத்து வருகிறார். இதற்கிடையில் கேரள முஸ்லிம் கலாச்சார மையம் அவருக்கு ஒரு நிலம் வாங்கி வீடு கட்டி அதன் சாவியை நௌஃபலிடம் ஒப்படைத்துள்ளது. இதற்கிடையில் நௌஃபல், சாஃப்னா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து நௌஃபல் இந்தியன் எஸ்க்பிரஸ்க்கு அளித்த பேட்டியில் “எனக்குத் தெரியாத நிறைய பேர் என் வாழ்க்கையை மீண்டும் சரியான பாதையில் கொண்டு வர உதவியிருக்கிறார்கள். அந்த உதவியவர்கள் பெரும்பாலோரை நான் பார்த்தது கூட இல்லை. இது கேரளாவில் மட்டுமே நடக்கிறது. இப்போது, அந்த அதிர்ச்சிகரமான நாட்களை நான் பின்னுக்குத் தள்ளிய விதம், துயரத்தில் எல்லாவற்றையும் இழந்தவர்களுக்கு என் வாழ்க்கை ஒரு பாடம் என்று மக்கள் கூறுகிறார்கள்” என்று அவர் கூறினார்.
இன்னும் 4 நாட்களில் அந்த கோரச் சம்பவம் நடந்து ஓராண்டு ஆக உள்ள நிலையில் தற்போது நௌஃபல் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.