பிக்பாஸ் ஒன்பதாவது சீசன் போய்க் கொண்டிருக்கிறது. இந்த ஒன்பது சீசன்களிலும் போட்டியாளர்களில் பல தில்லாலங்கடிகள் கில்லாடிகள் ஏழரைகள் இருந்திருக்கின்றனர் .
முடிந்தவரை கோபத்தைக் காட்டாத கமல்ஹாசன் கூட , பாலாஜி முருகதாஸ் என்ற போட்டியாளர் நடிகர் ஆரியை ‘ வெளிய வா. உன்னை வச்சுக்கறேன் ” என்று சொன்னபோது , கோபத்தின் உச்சிக்குப் போய் . ” உங்களுக்குத்தான் ஆள் இருக்கா? வெளிய வந்தா உங்களை வச்சுக்க எங்களால முடியாதா ? வெளிய வந்த உடனே பார்ப்போமா?. ஒழுங்கா பேசணும் ஜாக்கிரதை ” என்று கொந்தளித்த சம்பவமும் உண்டு. அதன் பின்னர் கமல் அந்த அளவுக்கு வேறு யாரையும் பேசவில்லை.
ஆனால் வாட்டர் மெலன் ஸ்டார் என்கிற டாக்டர் திவாகர் BPT என்கிற போட்டியாளர் போல அசிங்கப்பட்ட அவமானப்பட்ட அடித்துத் துவைக்கப்பட்ட , கலாய்க்கப்பட்ட நபர் இதுவரை யாரும் இல்லை . இனியும் வருவார்களா என்று தெரியவில்லை. (வராமல் இருந்தால் பிக்பாஸ் பார்வையாளர்களுக்கு நல்லது. விஜய சேதுபதிக்கு கூட நல்லது )
”நாnதான் நடிப்பு அரக்கன். நான் நடிக்கப் பிறந்தவன்.சிவாஜிக்கு அப்புறம் நாnதான் . நானும் கமலும் ஒண்ணு . …” என்ற ரீதியில் அவர் பேசியதைக் கண்டு ஒருமுறை பத்திரிகையாளர் சந்திப்பில் அவரை பிய்த்துப் போட்டார்கள். பல யூடியூப் சேனல்களிலும் கூப்பிட்டுக் கூப்பிட்டுக் குமட்டில் குத்தி கும்மியடித்தார்கள் .
அதன் காரணமாகவே அவர் பிக் பாஸுக்கும் போனார் . ஆனால் போன இடத்தில் அவர் ஆடிய ஆட்டத்தில் பிக்பாஸே ஆடிப் போனார்.
கோபமாகவும் கிண்டலாகவும் அழாத குறையாகவும் நொந்து நூலாகியும் விஜய் சேதுபதி திவாகரிடம் “சொன்னா புரியாதா? நீங்க நாகரீகமாna மனிதர் இல்லையா? ஏன் மனசுல இவ்வளவு வக்கிரம் ஆபாச எண்ணம்? எதுக்கு எடுத்தாலும் படிச்சவன் படிச்சவன்னு சொல்றீங்களே? நீங்க உண்மையில படிச்சவர் தானா? நீங்க பண்ணுன தப்பை சொன்னா ஏன் சிரிக்கீறிங்க. அந்த புன்னகை என்னமோ எங்களை மயக்குதுன்னு நினைக்கறீங்க. ஆனா அது அப்படி இல்ல. நல்லாவே இல்ல “என்று பேசாத பேச்சு இல்லை.
ஒரு முறை விஜய் சேதுபதி ஒரு கேள்வி கேட்க , திவாகர் அமைதியாக இருக்க, நீங்க பதில் சொல்ற வரை நான் ஒன்னும் பேசப்போறது இல்ல என்று அமைதியாக இருந்தார் . அப்போதும் அந்த அழிச்சாட்டிய அரக்கன் அசரவில்லை. கடைசியில் விஜய் சேதுபதி உட்கார்ந்தே விட்டார்யா. அப்போதும் பதில் சொல்லவில்லை . கடைசியில் விஜய் சேதுபதி சவாலில் தோற்றுப் போய் எழுந்து நின்று நிகழ்சியைத் தொடர்ந்தார்.
இது கூடப் பரவாயில்லை. பிக்பாஸில் இடம்பெறும் போட்டியாளர்களின் முக்கியத்துவமே அவர்களில் யார் என்ன செய்தாலும் கேமரா அவர்களை பின் தொடரும். அவர்களை விட்டு விடாது என்பதுதான். . ஆனால் திவாகர் பெரும்பாலும் எதையாவது செய்து விட்டு கேமரா முன்பு வந்து நின்று , “தமிழக மக்களேய்ய்ய்ய்ய்…நான் உங்கள் நட்ட்ட்ட்டிப்ப்ப்ப்ப்பு அர்ர்ர்ர்ர்ர்ரக்க்க்க்கன் …” என்று பேசியதை பார்த்து, பிக் பாஸ் கேமராக்களே (அதாவது கேமராவுக்குப் பின்னால் இருந்து அந்த கேமராக்களை இயக்குபவர்களே) எரிச்சலாகி கடுப்பாகி அவர் பக்கம் கேமரா போகாமல் திருப்பப்பட்டன.
அதாவது அவர் ஏதாவது கேமரா அருகில் பேசப் போனால் கேமரா வேறு பக்கம் திரும்பி விடும் . உடனே அவர் கேமராவிடம் ஓடிப் போய் மீண்டும் நிற்க கேமரா மறுபக்கம் திரும்பும் .

”ஹலோ நான் பேசலாமா குளோசப் வைக்க மாட்டீங்களா” என்று அவர் கெஞ்சிக் கொண்டே இருக்க, கேமரா அவரைப் பார்க்காமல் வெவ்வேறு பக்கங்களில் திரும்பிக் கொண்டே இருந்தது.
இந்த அவமானம் இதுவரை பிக் பாஸில் யாருக்கும் நடந்தது இல்லை.
இத்தனைக்கும் அவர் சற்று தள்ளி நின்று பேசினாலே கேமரா பதிவு செய்யும்; இது கூட தெரியாமல் ”குளோஸ் அப் வைங்க ,, குளோஸ் அப் வைங்க” என்று கெஞ்சியவர்தான் இந்த நடிப்பு அரக்கன்.
உண்மையில் இந்த வாரம் பிக்பாஸில் இருந்து அவர் நீக்கப்பட ரசிகர்கள் காரணமாக இருந்திருக்க முடியாது .
திவாகரின் இந்த செயல்பாடுகளும் ராஜா ராணி டாஸ்க்கில் அவர் கிரீடத்தை தூக்கி எறிந்து விட்டு வெளியேறியது உள்ளிட்ட மேலே சொன்ன செயல்பாடுகளும்தான் காரணமாக இருக்கும் .
எதற்கும் திவாகருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுப்பது நல்லது .
— ராஜ திருமகன்
