பூந்தமல்லி அருகே தாறுமாறாக ஓடிய தண்ணீர்லாரி மோதி பெண் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடியில் இருந்து பூந்தமல்லி நோக்கி சென்னை குடிநீர் வாரிய ஒப்பந்த லாரி ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது.
இதை மதுரையைச் சேர்ந்த அழகுராஜா (31) என்ற ஓட்டுநர் ஓட்டி சென்றார்.
பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதியது.
அந்த இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த திருவேற்காடு அடுத்த சுந்தர சோழபுரத்தை சேர்ந்த தேவி மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.
அதோடு, அந்த லாரி வேறு ஒரு இருசக்கர வாகனம் மற்றும் கார்களை இடித்து தள்ளிவிட்டு சாலையோரத்தில் இருந்த மின்கம்பம் மீது மோதி நின்றது.
அப்போது அந்த மின்கம்பமும், மின்கம்பிகளும் கீழே சாய்ந்தன.
இந்த பயங்கர விபத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சேலத்தைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளி தனபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்தில் சிக்கியவர்களை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
லாரி ஓட்டுநரை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர்.
இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார், உயிரிழந்த தனபாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சூழலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்த கிருஷ்ணனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் உயிரிழந்த தேவி அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற கிருஷ்ணனிடம் லிப்ட் கேட்டு சென்றது தெரியவந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.