அதிமுகவில் கலகக் குரல் எழுப்பிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கோபிச்செட்டிபாளையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இன்று (செப்டம்பர் 23) உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்பது செங்கோட்டையனின் கோரிக்கை. இதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார் செங்கோட்டையன்.
ஆனால் இந்த கெடுவை நிராகரித்த எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனின் கட்சி பதவிகளைப் பறித்தார். இதனையடுத்து டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம், அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை பற்றி செங்கோட்டையன் புகார் செய்தார். பின்னர் எடப்பாடி பழனிசாமியும் டெல்லி சென்று, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க முடியாது’ என திட்டவட்டமாக கூறியிருந்தார்.
அதிமுகவின் உட்கட்சி பிரச்சனையில் பாஜகவும் மத்திய அமைச்சர் அமித்ஷாவும் தலையிடுவது விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நீலகிரி செல்லும் வழியில், செங்கோட்டையனின் தொகுதியான கோபிச்செட்டிபாளையத்துக்கு இன்று சென்றார் எடப்பாடி பழனிசாமி. செங்கோட்டையன் ஆதரவு பகுதியாக இருந்த போதும் எடப்பாடி பழனிசாமிக்கு நூற்றுக்கணக்கான அதிமுகவினர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது, எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தியும், “கோபி எங்கள் கோட்டையடா”என்றும் அதிமுகவினர் விண்ணதிர முழக்கங்களையும் எழுப்பினர். இந்த நிகழ்ச்சியை செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் முழுமையாகப் புறக்கணித்தனர்.