இலங்கையில் 200-க்கும் மேற்பட்டோருடன் மற்றொரு ஈரானிய கப்பல் தஞ்சமடைந்துள்ளது. ஈரான் கப்பலில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்; ஈரான் கப்பல் தற்போது திருகோணமலை துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க கூறுகையில், சர்வதேச மோதல்கள் எதிலும் நமது நிலைப்பாடு நடுநிலையானது. நமது நிலப்பரப்பு, கடல் அல்லது வான் எல்லையை எந்தவொரு நாடும் தனது போர்த் தேவைகளுக்காகவோ அல்லது மற்றொரு நாட்டிற்கு அழுத்தம் கொடுக்கும் விதமாகவோ பயன்படுத்த நாம் ஒருபோதும் இடம் தரமாட்டோம்.
இதுவே நமது தெளிவான கொள்கை. அதனால்தான், மோதல்கள் தொடங்கிய காலத்திலிருந்தே நாம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் வெளியிட்ட அறிக்கைகள் அனைத்தும் இந்த அடிப்படை நிலைப்பாட்டை ஒட்டியே அமைந்திருந்தன.
ஈரானின் இரண்டு கப்பல்கள் தொடர்பான விவகாரம் எழுந்தபோதும், இதே நடுநிலைமையையே நாம் கடைபிடித்து வருகிறோம்.
அதே சமயம், ஒரு தேசமாகவும் அரசாகவும் நமது நடுநிலைமையைப் பாதுகாக்கும் வேளையில், மனிதநேயத்திற்கே நாம் முதலிடம் வழங்குகிறோம். எனவே, மனிதநேயத்தைப் பாதுகாப்பதற்கும் மனித உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் தேவையான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க நாம் ஒருபோதும் தயங்க மாட்டோம்.
ஒரு நாடு பின்பற்ற வேண்டிய மிகச்சிறந்த கொள்கை இதுதான் என்று நான் கருதுகிறேன். இந்தக் கொள்கையின் அடிப்படையிலேயே நாம் தற்போது செயல்பட்டு வருகிறோம் என்றார்.
முன்னதாக இலங்கை கடற்பரப்பு அருகே இந்திய பெருங்கடலில் 100-க்ல்கும் மேற்பட்ட கடற்படை வீரர்களுடன் சென்ற ஈரான் போர்க் கப்பலை நீர்மூழ்கிக் கப்பல் மூலம் கண்காணித்து தாக்கியது அமெரிக்கா. இதில் 30 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 87 பேரது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில் ஈரானின் இன்னொரு கப்பல் இலங்கையில் தஞ்சமடைந்துள்ளது அந்நாட்டையும் போர் மேகம் சூழ்கிறதா? என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
