ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை காரமடை மற்றும் கடலூரில் தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை நகராட்சியில் பிரணவ் செக்யூரிட்டி ६ மேன் பவர் சர்வீஸ் என்ற தனியார் நிறுவனம் மூலம் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிறுவனம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தூய்மை பணியாளர்கள் சங்க நிர்வாகி விஸ்வநாதன் தலைமையில் ஊதிய உயர்வு கோரி நேற்று ஆகஸ்ட் 13-ந் தேதி காலை முதல் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதனையடுத்து அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் நேற்று மாலை போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் காரமடையில் இன்றும் தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே இன்று காரமடை நகராட்சி ஆணையாளர் முன்னிலையில் தனியார் ஒப்பந்ததாரர் மற்றும் தொழிலாளர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
கடலூரில் போராட்டம்
இதேபோல, தனியார் நிறுவனத்தின் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு இரண்டு மாத ஊதியம் வழங்க கோரி கடலூர் மாநகராட்சி அலுவலக வாயில் முன்பு இன்று காலை முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது.
கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகளில் சிட்டி கிளின் என்ற நிறுவனம் தூய்மைப் பணி செய்து வருகிறது. இந்த நிறுவனமானது, தூய்மைப் பணியாளர்களுக்கு இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என்றும் பி.எஃப் பிடித்தம் தொடர்பான எந்தவித சான்றும் வழங்கவில்லை எனவும் கூறி விஜயா என்பவர் தலைமையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். இதில் விசிக மாநில தொண்டர் அணி செயலாளர் பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.