இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் SIR-க்கு எதிராக திமுக தொடர்ந்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று (நவம்பர் 11) விசாரணை நடைபெற உள்ளது.
தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கையால் பீகாரில் 65 லட்சம் பேர் வாக்குரிமையை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் தற்போது SIR நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ வழக்கு தொடர்ந்தார்.
அம்மனுவில், “எஸ்.ஐ.ஆர். நடைமுறைப்படுத்த உகந்த காலம் இதுவல்ல என்றும்; தேர்தல் ஆணையத்துக்கு இந்த நடைமுறையை செயல்படுத்துவதற்கு அதிகாரம் இல்லை என்றும்; அரசிலமைப்புச் சட்டம் தந்த அதிகாரங்களை மீறி தேர்தல் ஆணையம் செயல்படுவதாவும்; தகுதி உள்ளவர்கள் நீக்கப்படுவதற்கும் – தகுதியற்றோர் சேர்க்கப்படுவதற்கும் ஏதுவான வகையில் இந்த நடைமுறை அமைந்துள்ளதாகவும்; இந்த எஸ்.ஐ.ஆர்.-ஐ நடைமுறைபடுத்தினால், இலட்சக்கணக்கான தமிழ்நாடு வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை இழக்கும் அபாயம் ஏற்படும்” என்பது உள்ளிட்ட காரணங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
