முகத்தில் பருக்கள் ஏற்படுவது தற்போதைய காலகட்டத்தில் பொதுவான பிரச்சனையாகவே மாறிவிட்டது. மோசமான உணவுப் பழக்கம், மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள், சருமத்தை பராமரிக்காமல் இருப்பது ஆகியவை பருக்கள் உண்டாக முக்கிய காரணமாக உள்ளன. முகப்பருக்களுக்கு வெளிப்புற சருமப் பிரச்சனை மட்டும் காரணம் அல்ல. அவை உடலுக்குள் ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறியாகவும் கூட இருக்கலாம்.
சில அத்தியாவசிய வைட்டமின் குறைபாடுகள் சரும ஆரோக்கியத்தை நேரடியாக பாதித்து பருக்கள், முகப்பரு, தழும்புகள் தோன்றுவதற்கு வழிவகுக்கின்றன. பருக்கள் நீண்ட காலமாக நீடித்து வந்தால் உடலுக்கு சில அத்தியாவசிய வைட்டமின் போதிய அளவு கிடைக்கவில்லை என்பதற்கான அறிகுறிகளாகக் கூட இருக்கலாம்.
வைட்டமின் ஏ குறைபாடு (Vitamin A deficiency) : வைட்டமின் ஏ குறைபாடு பருக்களை ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. வைட்டமின் ஏ சரும செல்களை உருவாக்குவதிலும் அதனை சரிசெய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் வைட்டமின் ஏ குறைவாக இருந்தால் சருமம் வறண்டு, துளைகள் அடைக்கப்பட்டு, பருக்கள் வர வாய்ப்புகள் அதிகமுள்ளன.
வைட்டமின் ஏ சருமத்தில் எண்ணெய் உற்பத்தியை சமப்படுத்தவும் உதவுகிறது. இந்த குறைபாடு சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் தேங்க காரணமாக அமைகிறது. இதனால் கூட பருக்கள் வரலாம். இதனைத் தவிர்க்க வைட்டமின் ஏ அதிகமுள்ள கேரட், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கீரை, பச்சை காய்கறிகளை சாப்பிடலாம்.
பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் (B complex vitamins) : வைட்டமின் பி2, பி3, பி6 மற்றும் பி12 ஆகியவற்றின் குறைபாடுகளும் முகப்பரு வருவதற்கு வழிவகுக்கின்றன. வைட்டமின் பி உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை பராமரிக்கவும், ஆரோக்கியமான சருமத்தை பராமரிக்கவும் உதவுகின்றன.
வைட்டமின் பி12 குறைபாடு என்பது முகப்பரு ஏற்பட முக்கிய காரனமான ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கச் செய்யும். முழு தானியங்கள். பருப்பு வகைகள், முட்டை, பால், பச்சை காய்கறிகள் ஆகியவற்றில் பி12 வைட்டமின் அதிகளவில் உள்ளது.
வைட்டமின் சி (Vitamin C deficiency) : வைட்டமின் சி என்பது சருமத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. இது ஒரு சக்திவாய்ந்த ஆக்சிஜனேற்றியாக செயல்படுவதோடு, சருமத்தை ப்ரீ ரேடிக்கல்களில் இருந்து பாதுகாக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வைட்டமின் சி குறைபாடு காரணமாக பருக்கள் சரியாவது தாமதமாவதோடு, வடுக்கள் நீண்ட காலம் நீடிக்கிறது. வைட்டமின் சி கொலஜன் உற்பத்தியை அதிகரிப்பதால் சருமத்தை தெளிவாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்கிறது. நெல்லிக்காய், ஆரஞ்சு, எலுமிச்சை, கொய்யாவில் அதிகமான வைட்டமின் சி உள்ளது.
வைட்டமின் டி (Vitamin D For Skin) : பருக்கள் ஏற்படுவதற்கு வைட்டமின் டி மறைமுக காரணமாக உள்ளது. இது சரும வீக்கத்தை குறைத்து முகப்பருவை மோசமாக்க வாய்ப்புகள் உள்ளன. வெயிலில் அதிகமாக இருப்பது, பால், முட்டை மற்றும் தயி சாப்பிடுவது வைட்டமின் டி குறைபாட்டை சரிசெய்யும்.சமச்சீரான உணவுகளை சாப்பிடுவது, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம் பருக்கள் பிரச்சனையை கட்டுப்படுத்தலாம். பருக்கள் தொடர்ச்சியாக இருந்தால் சரும நிபுணரை அல்லது ஊட்டச்சத்து நிபுணரை அணுகுவது மிகவும் முக்கியமானது.
