’வெண்ணிலா கபடி குழு’ படத்தில் அறிமுகமான விஷ்ணு விஷால் ‘நீர்ப்பறவை’, ‘முண்டாசுப்பட்டி’, ‘ராட்சசன்’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’, ‘கட்டாகுஸ்தி’ போன்ற படங்களின் வழியே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
சமீபத்தில் அவர் நடிப்பில் ‘ஓஹோ எந்தன் பேபி’ வெளியானது. இது போக ‘இரண்டு வானம்’, ‘மோகன்தாஸ்’ படங்கள் காத்திருப்பிலும் ‘கட்டாகுஸ்தி’ படப்பிடிப்பு நிலையிலும் உள்ளன. இந்த நிலையில், தற்போது ‘ஆர்யன்’ பட டீசர் வெளியாகியிருக்கிறது. இன்வெஸ்டிகேட்டிவ் சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தை பிரவீன் கே இயக்கியுள்ளார். ஜிப்ரான் இதற்கு இசையமைத்துள்ளார்.
ஸ்ரத்தா ஸ்ரீநாத், செல்வராகவன் உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர்.’சைக்கோ’ கொலையாளிகள் குறித்து காவல் துறையில் பின்பற்றப்படும் சில அடையாளக் கணிப்புகளுக்கு மாறாகச் செயல்படுகிற ஒரு குற்றவாளியை நாயகன் கண்டறிவது போன்று இப்படம் அமைந்திருப்பதைச் சொல்கிறது டீசர்.
கொலை செய்யப்படுகிற நபர் குறித்த தகவலை ஒரு மணி நேரத்திற்கு முன்னரே வெளியிட்டு, அவரை அந்த கொலையாளி கொல்கிற மாதிரியான கதையமைப்பினைக் கொண்டிருப்பதாக உணர்த்துகிற இந்த டீசர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. நிச்சயமாக, இப்படம் ராம்குமாரின் ‘ராட்சசன்’ உடன் ஒப்பிடப்படும். காரணம், இந்தக் கதையின் அடிப்படை அம்சம். அதைத் தாண்டி, ’ஆர்யன்’ எந்தளவுக்கு ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தப் போகிறது என்பதில் இருக்கிறது இப்படத்தின் வெற்றி..