ADVERTISEMENT

செல்லமே முதல் மத கஜ ராஜா வரை : 21 ஆண்டுகளை நிறைவு செய்த விஷால்!

Published On:

| By christopher

vishal thanked for 21 year of his journey in cinema

தமிழ் திரையுலகில் 2004ஆம் ஆண்டு வெளியான செல்லமே படத்தின் மூலம் கதாநாயகனாக திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகர் விஷால்.

அதன்பின்னர் சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, சத்தியம் ஆகிய வெற்றிப் படங்களுடன் முன்னணி நடிகராக உருவெடுத்தார்.

ADVERTISEMENT

எனினும் அடுத்தடுத்து வெளியான அவரது படங்கள் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றபோதும், வசூல் ரீதியாக பின்னடைவை சந்தித்தன.

கடந்த 2023ஆம் ஆண்டு விஷால் இரட்டை வேடத்தில் நடித்த மார்க் ஆண்டணி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நூறு கோடி வசூலை எட்டியது. அதனைத் தொடர்ந்து இந்தாண்டு வெளியான மத கஜ ராஜாவும் அவரது வெற்றிப்படமாக அமைந்தது. இந்த மகிழ்ச்சிக்கு நடுவே நீண்ட ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் நடிகர் சங்க கட்டிடமும் இந்தாண்டு இறுதிக்குள் திறக்கப்பட உள்ளதாகவும், அங்கேயே தனது திருமணம் நடைபெறும் எனவும் உறுதிபட தெரிவித்துள்ளார் விஷால்.

ADVERTISEMENT

இந்த நிலையில் திரையுலகில் தான் 21 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை அடுத்து நடிகர் விஷால் நன்றி தெரிவித்து இன்று (செப்டம்பர் 10) அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “இன்று நான் நடிகனாக திரையுலகில் பயணித்து 21 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளேன். இந்த தருணத்தில் என் பெற்றோர்க்கும், என் குருநாதர் ஆக்சன் கிங் அர்ஜுனுக்கும், லயோலா கல்லூரி ஆசிரியர் பாதர் இராஜநாயகத்திற்கும், மேலும் என்னை உயர்த்தி அழகு பார்த்த அனைவருக்கும் வணக்கத்துடன் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

ADVERTISEMENT

பல கனவுடன் திரையுலகில் அடியெடுத்து வைத்த நான், இன்று உங்கள் அன்பினால், உங்களின் நம்பிக்கையில், உங்கள் கரகோஷத்தில் வாழும் நடிகனாக மாறியிருக்கிறேன். இந்த வெற்றி பயணத்தில் என்னுடைய வெற்றியாக இல்லாமல் நமக்கான வெற்றியாக பார்க்கிறேன்.

எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர்கள், என்னை செதுக்கிய இயக்குனர்கள் என்னுடன் ஒவ்வொரு படத்திலும் உழைத்த இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், துணை நடிகர்கள் மற்றும் தொழிலாளர்கள் மேலும் என் படங்களை உங்களிடம் கொண்டு சேர்த்த திரையரங்கு உரிமையாளர்கள், வெளியீட்டாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு ஆப்பரேட்டர்கள் மற்றும் எனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பத்திரிகை நண்பர்கள், ஊடக நண்பர்கள், சமூக ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

ஆனால்… இவைகளை எல்லாம் விட பெரிய சக்தியாக நான் கருதுவது என் உயிரான என் ரசிகர்கள். தமிழ் நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களான உங்கள் அன்பே என் உயிர்.
உங்கள் நம்பிக்கையே என் வலிமை. “நான் விழுந்தாலும் என்னை எழவைக்கும் எழுச்சி குரல்” நீங்கள் தான். என் நம்பிக்கையும் நீங்கள் தான்.

இந்த இருபத்தொன்று ஆண்டுகளில் எத்தனை சோதனைகளும், எத்தனை சவால்களும் வந்தாலும், எனக்கு துணையாக நின்று, என் அருகில் தோள் கொடுக்கும் தோழனாக இருந்தது நீங்கள் தான்.

நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு படியும், நான் தேர்வு செய்யும் ஒவ்வொரு கதையும், நான் வாழும் ஒவ்வொரு நொடியும், உங்களுக்காகவே இருக்கும். உங்களை மகிழ்விக்கவே இருக்கும்.
இந்த பயணம் முடிவடையவில்லை… இது ஒரு தொடக்கமே.

நான் வெறும் நன்றி என்ற வார்த்தைகளால் முடிக்காமல் உங்களால் அடையாளம் காட்டப்பட்ட நான் எனது “தேவி அறக்கட்டளை” மூலம் ஏழை, எளிய பெண் கல்விக்கும் மாணவ, மாணவிகள் முன்னேற்றத்திற்க்காக செயல்படுத்தி வருகிறோம், எம்மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை நானும் என் இயக்கமும் என்றென்றும் செய்வோம். நான் உங்களில் ஒருவன், உங்களுக்காக எப்போதும் குரல் கொடுப்பேன் என்பதை உறுதியளிக்கிறேன்” என விஷால் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share