கடந்த சில நாட்களாக இணைய உலகில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையில் ’காதலர் தினம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ரோஜா ரோஜா’ பாடல் தான் வைரலாகி வருகிறது. அந்த பாடல் ஏற்கெனவே எவர்கிரீன் ஹிட் தானே என்றால், வைரலானது பாடலுக்காக அல்ல… பாடியவருக்காக.
ஆம், 26 வருடங்களுக்கு முன்பு 1999ஆம் ஆண்டு நடந்த ஒரு மேடை நிகழ்ச்சியில், எந்தவிதமான பில்டப்களும் இன்றி மிக இயல்பாக அந்த அழகான பாடலை பாடியவரை குறிப்பிட்டு, யார் இவர் என்ற கேள்வியை முன்வைத்தனர் நெட்டிசன்கள்.
இந்த தேடல் காரணமாக 26 ஆண்டுகளுக்கு பிறகு அந்த பாடலை பாடியவர் பின்னணி பாடகரான சத்யன் மகாலிங்கம் என்பது தெரியவந்தது. தனது உழைப்பை இந்த உலகம் கண்டுக்கொண்ட மகிழ்ச்சியில், மீண்டும் தனது குரலில் ரோஜா ரோஜா பாடலைப் பாடி, பாராட்டு தெரிவித்த அனைவருக்கும் உருக்கமாக நன்றி தெரிவித்திருந்தார் சத்யன்.
அதனைத் தொடர்ந்து அவரது திரைப்பயணம் குறித்த ஆர்வம் அனைவரையும் ஈர்த்து வருகிறது.
90 இறுதிகளில் மேடை பாடகராக தனது பயணத்தை தொடங்கிய சத்யன், பின்னர் திரையுலகில் கோரஸ் பின்னணி பாடகராக அடியெடுத்து வைத்தார்.
தனது தொடர் முயற்சியின் பலனாக 2004ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த ‘ வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தில் ‘கலக்க போவது யாரு’ பாடல் மூலம் பின்னணி பாடகராக உருவெடுத்தார்.
அதன்பின்னர் ‘சரோஜா’ படத்தில் ‘தோஸ்து படா தோஸ்து’, பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ‘அட பாஸு பாஸு’, கழுகு படத்தில் ‘ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்’, மாற்றான் படத்தில் ‘தீயே தீயே’, துப்பாக்கி படத்தில் ’குட்டிப்புலி கூட்டம்’ போன்ற 200க்கும் மேற்பட்ட ஹிட் பாடல்களை பாடியுள்ளார் சத்யன்.
இந்த நிலையில் தற்போது ஊடகங்களுக்கும், யூடியூப் சேனல்களுக்கும் அடுத்தடுத்து பேட்டி அளித்து வருகிறார் சத்யன் மகாலிங்கம்.
அந்த வகையில் கலாட்டா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “நான் வயது வித்தியாசமின்றி அனைவரிடமும் இப்போதும் வாய்ப்புக் கேட்டு வருகிறேன். அவர்கள் பார்ப்பார்களா என்று தெரியாது. ஆனால் நான் கேட்டுக்கொண்டே இருப்பேன்.
தற்போதுள்ள பல பிரபல இசை கலைஞர்களின் ஆரம்ப காலத்தில் அவர்களோடு இருந்துள்ளேன். ஆனால் இப்போது அவர்கள் தங்களுக்கென ஒரு குரூப் ஃபார்ம் செய்து அவர்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கின்றனர். கொரோனா காலத்திற்கு பிறகு எனக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை.
யுவன் சங்கர் ராஜாவுக்கு என்மீது எப்போதும் பெரிய நம்பிக்கை உண்டு. நான் பாட வந்தால் என் மீதுள்ள நம்பிக்கையால் நான் அனைத்தையும் பார்த்துக்கொள்வேன் என்று அவர் வேறு வேலையைக் கூட பார்க்க சென்றிருக்கிறார்.
ஆரம்ப காலங்களில் பலப் படங்களில் நான் பாடிய பாடலுக்கு கிரெட்டே கிடைக்கவில்லை. வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் இடம்பெற்ற ’கலக்கபோவது யாரு’ தான் என்னுடைய முதல் பாடல். ‘அவர் வாய்ஸ் எனக்கு செட் ஆகுது அதனால அவரே பாடட்டும்’ என்று கமல்ஹாசன் வழிவிட்டதால் மட்டுமே எனக்கு அந்த பாட்டு கிடைத்தது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் மெலடி பாடல்கள் மீது பெரும் காதல் கொண்டுள்ள சத்யன், தான் பாடிய பாடல்களிலே தனது மனதுக்கு மிக நெருக்கமான பாடல் என்றால் ’நேபாளி’ படத்தில் இடம்பெற்ற ‘கனவிலே கனவிலே’ என்ற பாடலை குறிப்பிடுகிறார்.