மணிப்பூரில் இனக் குழுக்களிடையேயான மோதல் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில் பிரதமர் மோடி முதல் முறையாக செப்டம்பர் 2-வது வாரத்தில் அம்மாநிலத்துக்கு பயணம் மேற்கொள்ளக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
மணிப்பூரில் குக்கி- மைத்தேயி இனக் குழுக்களிடையே 2023-ம் ஆண்டு மோதல் வெடித்தது. இந்த மோதலில் சுமார் 500 பேர் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்தனர்.
இந்த மோதலைத் தொடர்ந்து குக்கி இன மக்கள் தனி சுயாட்சி நிர்வாக அமைப்பு கோரி ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். மணிப்பூர் வன்முறையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மேற்கொண்ட முயற்சி எதுவும் பலனளிக்கவில்லை. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் சென்று நிலைமைகளை ஆய்வு செய்த பின்னரும் இயல்பு நிலை திரும்பவில்லை.
மணிப்பூரில் வன்முறைகள் தொடரும் நிலையில் பிரதமர் மோடி, அம்மாநிலத்துக்கு சென்று மக்களை சந்தித்து ஆறுதல் கூறாமல் இருந்தது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கி இருந்தன.
தற்போது மணிப்பூரில் அமைதி திரும்பிக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் செப்டம்பர் மாதம் 2-வது வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மிசோரம் மாநிலத்துக்கு பயணம் மேற்கொள்கிறார். அப்போது மணிப்பூர் மாநிலத்துக்கும் மோடி செல்லக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.