டாப்பா? டூப்பா?
சூப்பர்ஹிட்டான திரைப்படங்களின் அடுத்த பாகங்களை உருவாக்கக்கூடாது என்பது சில கலைஞர்களின் எண்ணம். ஏற்கனவே வெற்றி பெற்ற ஒரு படைப்பை மூலதனமாக வைத்து ஏன் இன்னொரு வெற்றியைச் சுவைக்கக் கூடாது என்பது திரையுலகில் தொடர்ந்துவரும் இதரர்களின் கருத்து. மேற்சொன்னதில் இரண்டாவதைப் பற்றிக்கொண்டு, ‘வசூல் கணக்கோடு’ களம் இறங்கியிருக்கிறது ‘தேசிங்குராஜா 2’. vimal desingu raja 2 movie review
இயக்குனர் எழில் உடன் இந்த படத்திலும் கைகோர்த்திருக்கிறார் நாயகன் விமல். அவருடன் ஜனா, பூஜிதா பொன்னாடா, ஹர்ஷிதா பண்ட்லமுரி, புகழ், ரவி மரியா, சிங்கம்புலி, சாம்ஸ், வையாபுரி, சுவாமிநாதன், ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
முதல் பாகத்தில் சூரி, ரவி மரியாவின் ‘மாமா.. மாப்ளே’ காமெடியும் விமல் – பிந்து மாதவியின் ‘ரொமான்ஸ்’ஸும் ‘ப்ளஸ்’ ஆக இருந்தன. ‘தேசிங்குராஜா 2’வில் அப்படி நம்மை வசீகரிப்பது எது?

‘எழில்’ கொஞ்சாத கதை!
’என்னோட லிமிட்டை தாண்டி நீ வராதே. உன் லிமிட்டுக்குள்ள நான் வரமாட்டேன்’ என்று சண்டையிட்டுக் கொள்கிற இரண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள். அதிலொருவர் பெண். இவர்களிடையே தொழில் போட்டி (?!) நிலவுகிறது.
இன்னொரு பக்கம், தங்களுக்கு வாடகைப்பணம் தராமல் ‘டிமிக்கி’ தருவதாக அதிலொரு காவல்நிலையத்தைச் சூறையாட வருகின்றனர் சிலர். சிசிடிவி கேமிராக்கள் சகிதம் அவர்களைக் கண்காணித்து, மைக்கில் ‘கலாசல்’ பாணியில் பேசி மோதலைத் தவிர்க்கின்றனர் அங்கிருக்கிற போலீசார்.
இந்த இரண்டு விஷயங்களே ‘எழில்’ கொஞ்சுகிற கதையாக ‘தேசிங்குராஜா 2’ இல்லை என்பதைச் சொல்லிவிடும்.
இன்ஸ்பெக்டரின் கல்லூரிக் கால காதலியே அவரது மேலதிகாரியாக வருவதாக ஒரு கதை உண்டு.
அமைச்சர் ஒருவரின் மகனைக் கொல்ல ஒரு ரவுடி முயற்சிப்பதாகவும், அதனைத் தடுக்க இன்ஸ்பெக்டர் – பெண் உயரதிகாரியின் தயவை நாடுவதாகவும் ஒரு கதை உண்டு.
அதே அமைச்சர் தனது சகாக்களின் அந்தரங்கத்தைப் பொதுவெளியில் அம்பலப்படுத்துவேன் என்று மிரட்டுவதாக இன்னொரு கதை உண்டு.
இவற்றுக்கு நடுவே, மார்க்கெட் பாண்டி எனும் ரவுடியின் சடலம் தலையில்லாமல் கிடைப்பதாகவும், அதனைத் தேடி போலீசார் அலைவதாகவும் கூட ஒரு கதை உண்டு.
‘எத்தனை கதை.. இதையெல்லாம் ஒண்ணா சேர்த்து தரையில உருண்டு சிரிக்க வேண்டியிருக்கும் போலிருக்கே’ என்றே மனதில் தோன்றும். ‘வேலையில்லா பட்டதாரி’யில் வரும் விவேக் போன்று ‘உங்களுக்கும் அப்படித்தானே தோணுச்சு’ என்றே கேட்க வேண்டியிருக்கிறது. அந்தக் காட்சியில் அவர் ‘பல்பு’ வாங்குவது போலவே நாமும் ‘தேசிங்குராஜா 2’ படம் பார்க்க வேண்டியிருக்கிறது.
இது போதாது என்று ‘முடிஞ்சா சிரி பார்ப்போம்’ என்று ரசிகர்களுக்குச் சவால் விடுகிற வகையில் ஒவ்வொரு காட்சியையும் இழைத்திருக்கிறார் (?!) இயக்குனர் எழில்.
முதல் காட்சியிலேயே இப்படம் எப்படிப்பட்ட அனுபவத்தைத் தரக்கூடும் என்ற முன்கணிப்பு சட்டென்று சுடுகிறது. ஆனாலும், ‘துள்ளாத மனமும் துள்ளும், பெண்ணின் மனதைத் தொட்டு தொடங்கி மனம் கொத்திப் பறவை, தேசிங்குராஜான்னு எத்தனை படம் கொடுத்த டைரக்டர் எழில். அவருக்கு எப்படிப் படமெடுக்கணும்னு தெரியாதா’ என்ற மனதின் குரல் அதனை அடக்கிவிடுகிறது.
அதனால் பட்ட பாட்டை வார்த்தைகளில் விளக்குவது கடினம்.

விளக்கம் தேவையா..?
’தேசிங்குராஜா’ படத்தில் விமலின் பாத்திரப் பெயர் இதயக்கனி. இந்தப் படத்தில் அவரது பாத்திரத்தின் பெயர் குலசேகர பாண்டியன். அப்படியிருக்க, எதனால் இப்படத்திற்கு ‘தேசிங்குராஜா 2’ என்று டைட்டில் வைக்கப்பட்டது? இந்தக் கேள்விக்கு மட்டுமல்ல, வேறு என்ன கேள்வி கேட்டாலும் இப்படத்தில் அவற்றுக்குப் பதில் கிடைக்காது.
ஏனென்றால், ‘இப்போ இருக்குற நிலைமையில விளக்கம் எல்லாம் தேவையா’ என்று ரசிகர்கள் தங்களையே நொந்துகொள்ளும் அளவுக்கு இப்படம் சிறப்பான (?!) அனுபவத்தைத் தருகிறது.
பெண்ணாக நடித்திருக்கும் புகழ் உடன் நேருக்குநேர் மோதுவது போன்ற காட்சி வழியே திரையில் அறிமுகம் ஆகிறார் விமல். அவர்களோடு சாம்ஸ், வையாபுரி, சிங்கம்புலி, சுவாமிநாதன் உட்படப் பலர் நடித்திருக்கின்றனர். அக்காட்சிகளில் சத்தம் மிக அதிகம்.
அதனை ஒருவழியாகக் கடந்தால் ரவிமரியா, ஆர்.வி.உதயகுமார் என்று சிலர் அரசியல்வாதிகளாகத் தோன்றுகின்றனர். ’பவேரியா’ திருடர்களாகச் சிலர் திரையில் வந்து போகின்றனர்.
இவர்களோடு ஜனா, பூஜிதா பொன்னாடா, ஹர்ஷிதா பண்ட்லமுரி ஆகியோரும் நடித்திருக்கின்றனர். இரண்டு நாயகன், நாயகிகள் எனும்போது, பார்க்கும்படியாக (?!) ஓரிரு டூயட்டாவது வரும் என்று பார்த்தால், அந்த எதிர்பார்ப்பிலும் துண்டு விழுகிறது.
இன்னும் ராஜேந்திரன், மதுரை முத்து, மதுமிதா என்று இரண்டு டஜன் பேராவது திரையில் முகம் காட்டியிருப்பார்கள்.
தாங்கள் நடித்த காட்சிகளை டப்பிங் பணியின்போதோ அல்லது படம் வெளியான தியேட்டரிலோ பார்த்தபிறகு அவர்களது ‘மைண்ட்வாய்ஸ்’ என்னவாக இருந்தது என்பதைக் கொண்டு இன்னொரு படமே எடுக்கலாம்..
இதில் ஒளிப்பதிவாளர் ஆர்.செல்வா, படத்தொகுப்பாளர் ஆனந்த லிங்ககுமார், கலை இயக்குனர் பி.சிவசங்கர் என்று பல தொழில்நுட்பக் கலைஞர்கள் இதில் பணியாற்றியிருக்கின்றனர்.
இசை வித்யா சாகர் என்கிறது டைட்டில் கார்டு. அவரே நேரில் வந்து சொன்னாலும் நம்பமுடியாத அளவுக்குத் திரையில் இசை ஒலிக்கிறது.
முத்தாய்ப்பாக, இப்படத்தின் கதை திரைக்கதை எழுதி எழில் இயக்கியதாகச் சொல்கிறது ‘தேசிங்குராஜா 2’.

‘எந்த ஆங்கிள்ல இருந்து பார்த்தாலும் அதை நம்ப முடியலையே’ எனும்விதமாகப் படம் அமைந்திருக்கிறது. அவர் இயக்கிய முந்தைய படங்கள் மேற்கொண்டு விமர்சிக்கவிடாமல் நம்மைத் தடுக்கின்றன.
திரையுலகில் நாயகன், நாயகி உள்ளிட்ட சிலருக்குச் சில ஷாட்களின்போது ‘டூப்’ பயன்படுத்துவது வழக்கம். ஆபத்தான மற்றும் அபாயகரமான விஷயங்களை நிகழ்த்துவதாக இருந்தாலோ, சில தவிர்க்க முடியாத காரணங்களாலோ, ‘டூப்’ கலைஞர்களை பயன்படுத்துவார்கள். கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் அதனைக் கண்டுபிடிக்க முடியும். அவர்களுக்குப் பின்னாலும் பெரும் உழைப்பு இருப்பதை மறுக்க முடியாது.
அந்த உழைப்பு கூட இல்லாமல், புகழ் வாய்ந்த சில தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயரை மட்டும் பயன்படுத்தி சில ‘டூப்’களை கொண்டு ‘தேசிங்குராஜா 2’ உருவாக்கப்பட்டது என்று யாராவது சொன்னால் எவ்வளவு நன்றாக இருக்கும்? குறிப்பாக, தேசிங்குராஜா படத்திற்கும் இதற்கும் எள்ளளவும் சம்பந்தம் இல்லை என்றால் எத்தனை இதமாக இருக்கும்? இப்படித்தான் நம்மை நாமே ஆற்றுப்படுத்த வேண்டியிருக்கிறது.
சிரித்து மகிழலாம் என்ற பெரும் நம்பிக்கையுடன் தியேட்டருக்கு சென்று, புண்பட்ட மனதோடு திரும்பி வந்தபிறகு ‘இந்த விளக்கம்’ கூட அதீதம் தான். இதற்கு மேலும் ‘படம் டாப்பா இருக்குதா’ என்று கேட்பவர்களிடம் என்ன சொல்ல..? தேசிங்குராஜா 2 ஒரே ஒரு தடவை பாருங்க..!