விளாத்திகுளம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டது குறித்து மாவட்ட எஸ்.பி மதன் விளக்கமளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, கடந்த 10ஆம் தேதி மாலை இயற்கை உபாதை கழிப்பதற்காக காட்டுப்பகுதிக்குச் சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குளத்தூர் காவல் நிலையம் மற்றும் விளாத்திகுளம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்தநிலையில் உறவினர்களே மாணவியை தொடர்ந்து தேடியபோது அவரது உடல் ஒரு முட்புதர் பகுதியில் கிடந்தது. இதன்பின்னரே சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
தேர்தல் சமயத்தில் தமிழகத்தையே உலுக்கிய இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையும் காவல்துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்தசூழலில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தியதில், இன்று (மார்ச் 19) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியைச் சேர்ந்த 30 வயதான தர்ம முனீஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 9 நாட்களாக எந்தவொரு துப்பும் கிடைக்காமல் போலீசார் திணறி வந்த நிலையில், மாணவி இறந்து கிடந்த சுற்றுவட்டார பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
இதில் அந்த பகுதியில் இருந்த காற்றாலை ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில், சந்தேகத்திற்கிடமாக ஒருவர் பைக்கில் சென்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த பைக்கின் பதிவு எண்ணை கொண்டு, அந்த நபர் யார் என தேடினர். இதில் அந்த பைக் ராமநாதபுரம் மாவட்ட பார்த்திபனூர் பகுதியில் இருந்து திருடப்பட்ட பைக் என்பது தெரியவந்தது.
அந்த இருசக்கர வாகனம் திருட்டு போயிருப்பதாக காவல் நிலையத்திலும் புகார் செய்யப்பட்டு இருந்தது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பைக்கை திருடி வந்த சாயல்குடியை சேர்ந்த மாவீரன் என்ற தர்மமுனீஸ்வரன் (30) சிக்கினான். இவனது உடலில் பல இடங்களில் நகக்கீறல்கள் இருந்துள்ளது.
அவனிடம் எதற்காக அந்த காட்டுப்பகுதி சென்று வந்தாய் என போலீசார் விசாரிக்க, முன்னுக்கு பின் முரணாக பதில் வந்துள்ளது.
இது போலீசாருக்கு சந்தேகத்தை வலுப்படுத்திய நிலையில், மாணவியின் தசை துனுக்குகளுடன் இவனின் உடல் பாகங்களில் இருந்து மாதிரிகள் எடுத்து டி.என்.ஏ. பரிசோதனை செய்தனர். இதில் தர்மமுனீஸ்வரன்தான் கொலையாளி என்பது உறுதியாகியிருக்கிறது.
இந்த தர்மமுனீஸ்வரன் மீது ஏற்கனவே பாலியல் வழக்குகள், கொலை வழக்குகள் உள்ளன. 2020-ம் ஆண்டு கோவில்பட்டி அருகே கீழ ஈரால் பகுதியில் 65 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளான். இந்த வழக்கில் 2 ஆண்டுகளாக போலீசாருக்கு தண்ணீ காட்டி வந்த தர்மமுனீஸ்வரன் 2022 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டான்.
இதில் தர்மமுனீஸ்வரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் , உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் கேட்டிருந்தான் . இந்த வழக்கில் தூத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் தினசரி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.
அதன்படி ஜாமீனில் வந்த தர்மமுனீஸ்வரன், அந்த பைக்கை திருடியதும், அதை வைத்து தினசரி நீதிமன்றத்துக்கு சென்று கையெழுத்திட்டு வந்ததாகவும் தகவல்கள் வருகின்றன. இவன், தனது அப்பாவையே அடித்து கொன்றதாகவும், அம்மாவை வீட்டைவிட்டு அடித்து துரத்திவிட்டதாகவும் அந்த ஊர் மக்கள் கூறுகிறார்கள்.
தர்மமுனீஸ்வரனை கைது செய்தது குறித்து மாவட்ட எஸ்.பி மதன் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார்.
அவர் கூறுகையில், “ குளத்தூர் காவல்நிலைய குற்ற எண் :118/2026. 11.03.2026 அன்று பதிவானது. இந்த வழக்கு புலன் விசாரணையில் உள்ளது. இதில் பாதிக்கப்பட்ட சிறுமி மைனர் என்பதால் எனது பொறுப்புகளையும் , கடமைகளையும் கருத்தில் கொண்டு சொல்ல வேண்டிய தகவல்களை சட்டப்படி சொல்கிறேன்.
சம்பவம் நடந்ததை கேள்விப்பட்டவுடன், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றோம். 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதில் 4 டிஎஸ்பி, 6 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 150 காவலர்கள் இருந்தார்கள். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி , தென்மண்டல ஐஜி ஆகியோர் 3 நாட்கள் தூத்துக்குடியிலேயே முகாமிட்டு வழிகாட்டுதல்களை வழங்கினார்கள்.
சம்பவம் நடந்த நாள் முதல் இந்நாள் வரை டிஐஜி சரவணன் தினசரி அந்த கிராமத்துக்கும் காவல்நிலையத்துக்கும் வந்து எனக்கு உதவிகரமாக இருந்தார்.
விசாரணை அறிவியல் பூர்வமாக நடத்தப்பட்டது. தடயவியல் துறை, கைரேகை நிபுணர்கள் மோப்ப நாய் எல்லாம் சம்பவம் நடந்த அன்று வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு ரிப்போர்ட் பெறப்பட்டது. சம்பவ இடத்தில் சிசிடிவி இல்லை. அதனால் சுற்று வட்டார பகுதிகளில் இருக்கக் கூடிய சிசிடிவிகளை ஆராய ஒரு தனிப்படை அமைத்தோம்.
நடந்த சம்பவம் பதிவாகும் வகையில் எந்த சிசிடிவி காட்சியும் கிடையாது. ஆனால் சுற்றியிருந்த 98 சிசிடிவி காட்சிகள் ஆராயப்பட்டது. அடுத்தது டவர் டம்ப் மேற்கொள்ளப்பட்டது. அதாவது 2574 நம்பர்களின் கால்பதிவீடுகள் ஆராயப்பட்டன. இதற்கு தனியாக தனிப்படை அமைக்கப்பட்டது.
பழைய குற்றவாளிகள், சிறையிலிருந்து விடுதலையானவர்கள் எனப் பல கோணங்களில் விசாரித்தோம். வேடநத்தம் கிராமத்தில் மட்டும் சுமார் 800 ஆண்கள் உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரையும் விசாரித்து, சம்பவம் நடந்த நேரத்தில் அவர்கள் எங்கே இருந்தார்கள் என்பதை ‘அலிபை’ மூலம் உறுதி செய்தோம்.
சந்தேகத்திற்குரிய 461 பழைய குற்றவாளிகளை நேரடி மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் மூலம் ஆய்வு செய்து, அவர்கள் இதில் ஈடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்தி அவர்களைப் பட்டியலிலிருந்து நீக்கினோம்.
இவ்வளவு தீவிரமான புலனாய்விற்குப் பிறகே, கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தற்போது ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உட்சபட்ச தண்டனை வாங்கித் தரப்படும்
இந்த வழக்கில் பணியாற்றிய காவலர்கள் முதல் எஸ்.ஐ வரையிலான அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். அவர்கள் இரவு பகல் பார்க்காமல், அந்த கிராமத்திலேயே தங்கி, வாகனங்களிலேயே உறங்கி இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வர உழைத்தனர். இது தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.
சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களுக்கு ஒரு வேண்டுகோள். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்துவது சட்டப்படி குற்றம். இதுவரை இது தொடர்பாக 6 வழக்குகள் பதியப்பட்டுள்ளன (போக்சோ சட்டம் பிரிவு 23). இனிமேல் யாராவது இதைப் பயன்படுத்தினால் அல்லது அதற்குத் தூண்டுகோலாக இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க, ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது 10 சிசிடிவி கேமராக்களாவது இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம். பெண் போலீசார் மூலம் கிராமங்களில் ரோந்துப் பணிகள் அதிகரிக்கப்படும். பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்று கூறினார்.
