விளாத்திகுளம் மாணவி வழக்கு : சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published On:

| By Kavi

விளாத்திகுளம் மாணவி விவகாரத்தில், 5 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் காவல்துறை சார்பில் வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் கடந்த மார்ச் 10ஆம் தேதி இயற்கை உபாதைக்காக காட்டுப்பகுதிக்குச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று மாணவியின் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ADVERTISEMENT

இந்தசூழலில் மாணவியின் உடல் மட்டும் அவரது உறவினர்களாலே மீட்கப்பட்டது.

இந்த சம்பவம் தென் தமிழகத்தையே உலுக்கியிருக்கும் நிலையில், அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மாரீஸ்வரி  தாக்கல் செய்த மனுவில்,  “மாணவியின் பெற்றோர் அளித்த புகாருக்கு போலீசார் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த சம்பவத்தை தவிர்த்திருக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (மார்ச் 16)  நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதி ராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

ADVERTISEMENT

அப்போது போலீசார் சார்பில்,  “இந்த வழக்குத் தொடர்பான ஆய்வக பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.  5 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளைக் கொண்டு சந்தேகத்திற்கு உரியவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செல்போன் சிக்னல் மூலம் 1,600 செல்போன்களை பரிசோதனை செய்து கண்காணித்து வருகிறோம். 212 நபர்கள் சாட்சிகளிடம் விசாரணை நடத்தி உள்ளோம். மாணவியின் வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவில் அவரது உடல் மீட்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து நீதிபதிகள்,  “இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்காத போலீசார் மீது  கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினர். 

மேலும்,  “மாணவியின் பெற்றோர்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். . வாக்குமூலத்தை வீடியோ, ஆடியோவாக பதிவு செய்ய வேண்டும்.  அறிவியல் முறையில் விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.  இதுதொடர்பான நிலை அறிக்கையை ஏப்ரல் 2ஆம்  தேதி தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்தனர். 

மாணவியின் பெற்றோர் அளித்த புகார் மீது போலீசார் அலட்சியம் காட்டிருக்க கூடாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share