ரசிகர்களை சிறை பிடிக்குமா ‘சிறை’ ? — விமர்சனம்

Published On:

| By Minnambalam Desk

Sirai Tamil Movie Review

காவல்துறையின் ஒரு பிரிவான ஏ ஆர் (A R ) எனப்படும் ஆர்ம்டு ரிசர்வ் (ARMED RESERVE) பிரிவில் ஏட்டாகப் பணியாற்றும் நபர் கதிரவன்(விக்ரம் பிரபு). அவனது மனைவி மரியமும் (ஆனந்தா தம்பிராஜா) காவல்துறையில் பணியாற்றுபவள்தான்.

விசாரணைக் கைதிகளை பொதுப் போக்குவரத்தில் சிறையில் இருந்து அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணைக்குப் பிறகு மீண்டும் கொண்டு வந்து சேர்க்கும் பணியில் ஒருமுறை கதிரவன் மற்றும் இரண்டு காவலர்கள் ஒரு கைதியை அழைத்துக் கொண்டு போவதற்கு, பேருந்தில் அமர்ந்து இருக்க,

ADVERTISEMENT

கைதிக்கு ஆதரவான ஒரு கும்பல் வந்து மிளகாய் பொடிக் கரைசலை, போலீஸ் மீது அடித்து, கைதியை காப்பாற்றி விட முயல, அந்த முயற்சியில் கைதி தப்பி ஓட, வேறு வழியின்றி கதிரவன் சுட, தப்பி ஓட முயன்ற அந்தக் கைதி செத்து விடுகிறான்.

விசாரிக்கப்பட்டு மேலதிகாரிகளால் கண்டிக்கப்படுகிறான் கதிரவன்.

ADVERTISEMENT

பொதுவாக இதுபோல கைதிகளைக் கோர்ட்டுக்கு கொண்டு போய் மீண்டும் சிறைக்குக் கொண்டு போய் சேர்க்கும் எஸ்கார்ட் பணியில் கதிரவன் உடன் வரும் இரண்டு போலீஸ்காரர்களில் ஒருவன் கோபக்காரன். இருவருமே தண்ணி வண்டிகள்.

இந்த நிலையில் கதிரவனின் நண்பன் ஒருவனுக்கு ஒரு விசாரணைக் கைதியை கோர்ட்டுக்கு கொண்டு போய் மீண்டும் கொண்டு வரும் பணி விதிக்கப்பட, அம்மாவுக்கு உடம்பு சரியில்லாத நிலையில் அவன் ஊருக்குப் போக விரும்ப,அவனுக்காக அந்தப் பணிக்கு கதிரவன் போகிறான். கூடவே கோபக்கார குடிகார காவலர்கள் இருவரும்.

ADVERTISEMENT

அழைத்துக் கொண்டு போகும் இளைஞனான கைதி அப்துல் ரவூப் (எல் கே அக்ஷய் குமார்) அப்பாவியாகவும் தோன்றுகிறான். நல்லவனாக நடிக்கிறான் என்றும் தோன்றுகிறது. அதே நேரம் காவலர்களுக்கு நல்ல ஒத்துழைப்பும் கொடுக்கிறான்.

Sirai Tamil Movie Review

பேருந்தில் ஏறுவதற்கு முன்பு சக காவலர்கள் இருவரும் குடித்துவிட்டு உடன் வர, விக்கிரவாண்டியில் பஸ் நிற்கும் போது, மஃப்டியில் இருக்கும் கோபக்கார காவலருக்கும் பயணி ஒருவருக்கும் சண்டை வர, காவலர் என்று தெரியாமல் அந்த பயணியின் நண்பர்கள் குடிகார காவலரை அடிக்க, அதில் கவனம் போக, சில நிமிடங்களில் கைதி எங்கே என்று பார்த்தால்.. துப்பாக்கியோடு எஸ்கேப்!

கைதி என்ன ஆனான்? கதிரவனுக்கு தண்டனை என்ன என்பது… இந்தப் படத்தின் கதை அல்ல!

சிவகங்கை மாவட்ட கிராமம் ஒன்றில் ஒரே ஒரு முஸ்லீம் வீடு மட்டும் இருக்கும் ஊரில், அப்பா இறந்த நிலையில் அம்மாவுடன் (மலையாள நடிகை ரெம்யா சுரேஷ்) வாழும் இஸ்லாமிய இளைஞன் அப்துல் ரவூப்.

அந்த ஊரைச் சேர்ந்த கலையரசி ( மலையாள நடிகை அனிஷ்மா அனில்குமார்)க்கும் அவனுக்கும் காதல். கலையரசியின் அக்காவை அவளது அம்மாவின் தம்பிக்கு( தாய் மாமனுக்கு) கல்யாணம் செய்து கொடுத்து இருக்கிறார்கள். அந்தத் தாய் மாமன் குடித்துவிட்டு பொண்டாட்டியை அடிப்பது, நீலப்படம் பார்ப்பது என்று வாழ்பவன். (அந்த, ‘கோழி கொத்தும்’ வசனம் செம!)

வீடியோ கேசட் கடையில் வேலை செய்யும் அப்துல் ரவூப்பிடம் அந்த குடிகாரத் தாய்மாமன்(இசக்கி) நீலப்பட கேசட் கேட்க, அப்துல் இல்லை என்று சொல்ல, அப்துலை தாய்மாமன் அடிக்கிறான். பிரச்னை பெரிதாகிறது.

ஒருமுறை அந்தத் தாய்மாமன் தன் மனைவியைக் குடிபோதையில் அடித்துக் கொலை செய்யப் போக, கலையரசி தடுக்கப் போக, அவளையும் தாய்மாமன் தாக்க, உள்ளே நுழையும் அப்துல் ரவூப் தாய்மாமனை தடுக்க,

‘என்ன இருந்தாலும் ஒரு முஸ்லிம் பையன் எப்படி வீட்டுக்குள் நுழையலாம்” என்று அப்துல் ரவூப் மீதுதான், கோபப்படுகிறதாம் கலையரசியின் குடும்பம்.

அப்துல் ரவூப்பும் கலையரசியும் காதலிப்பது தெரிய வர, கலையரசியின் அப்பா அப்துல் ரவூப்பின் அம்மாவை தாக்க, அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களால் அப்துல் ரவூப் கைதி ஆகி இருக்கிறான் என்பது கதிரவனுக்கு தெரிகிறது.

அவனுக்கு என்று வக்கீல் யாரும் ஆஜராகாத காரணத்தால், வக்கீல் வைக்க முயன்ற கலையரசியும் அவளது தாய்மாமனால் தாக்கப்பட்ட, அப்துல் ரவூப் வழக்கு ஒழுங்காக விசாரிக்கப்படாமல், அரசு எந்திரத்தின் அலட்சியத்தால் தொடர்ந்து வாய்தாவிலேயே போய்க் கொண்டு இருக்க, ஒருவேளை குற்றம் நிரூபிக்கப்பட்டால் அப்துலுக்கு என்ன தண்டனை கிடைத்து இருக்குமோ… அதை விட அதிக நாட்கள் அவன் ஜெயிலில் இருந்து விட்டதும் தெரிகிறது.

அவன் கோர்ட்டுக்கு வரும் நாளில் எல்லாம் கலையரசி அந்த கோர்ட்டுக்கு வந்து நின்று அவனைப் பார்த்து விட்டு அழுவதும், அப்படியே போவதுமாக அவர்கள் காதல் கண்ணீரில் கரைகிறது.

கோர்ட்டுக்கு அப்துல் வரும்போது ஒரு முறை கலையரசி பார்க்க வர முடியாமல் போய் விட்டாலும்,அப்புறம் அவர்கள் சந்திக்கவே முடியாது என்ற நிலை.

இளகிய மனம் கொண்ட கதிரவன் அப்துல் ரவூப்புக்கு உதவ முயல, விசாரணைக் கைதியை ‘அழைத்துக் கொண்டு போய் அழைத்துக் கொண்டு வரும் வேலையை மட்டும் செய்’ என்று காவல் துறை உட்பட, அனைத்து அரசு எந்திரங்களும் கதிரவனை உருட்ட,

அப்துல் ரவூப்புக்கு என்ன நடந்தது? கலையரசியுடனான அவனது காதல் சிறையில் இருந்து விடுதலை ஆனதா இல்லையா என்பதே..

Sirai Tamil Movie Review

செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்எஸ் லலித் குமார் தயாரிக்க, விக்ரம் பிரபு, எல் கே அக்ஷய் குமார், அனிஷ்மா அனில்குமார், ஆனந்தா தம்பிராஜா , ரம்யா சுரேஷ், இசக்கி நடிப்பில் இயக்குனர் தமிழ் கதை வசனம் எழுத, அவரோடு சேர்ந்து திரைக்கதை எழுதி சுரேஷ் ராஜகுமாரி இயக்கி இருக்கும் சிறை.

ஆனந்தி பிலிம்ஸ் சார்பில் மோகன் தயாரிக்க, ராஜேஷ், லட்சுமி நடிப்பில் அனுராதா ரமணன் எழுதிய நாவலின் அடிப்படையில் ஆர்.சி சக்தி இயக்கி 1984 ஆம் ஆண்டு வெளியான படத்தின் பெயரும் சிறைதான்.

விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பாராட்டப்பட்ட படம் அது. இந்த சிறை. எப்படி இருக்கு?

டாணாக்காரன் படத்தை இயக்கியவரும் நடிகருமான தமிழ், காவல் துறையில் பணியாற்றியவர். அவனது பணி அனுபவத்தில் இருந்து விசாரணைக்கு கைதிகளுக்கு எஸ்கார்ட் ஆகப் போகும் காவலர்கள் மற்றும் கைதி சம்மந்தப்பட்ட நிகழ்வுகளை வைத்து எழுதிய கதை என்பதால், அந்த நடைமுறைகள், உரையாடல் வார்த்தைகள், சூழல் உருவாக்கம் யாவும் மிக சிறப்பாக அமைந்து நாம் பார்ப்பது ஒரு சினிமா இல்லை . நிஜ நிகழ்வு என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

அப்துல் ரவூப்பின் காதலுக்கு எதிர்ப்பு ஒரு நீலப்பட வீடியோ கேசட் விஷயத்தில் இருந்து ஆரம்பிப்பதும் அதன் நீட்சியும் கவனிக்க வைக்கிறது.

ஆதிக்க சாதி என்ற பெயரில் அதே சாதி வெறி காரணமாக பெற்ற மகள்களை, சொந்தம் என்பதை மட்டுமே பார்த்து நல்லவனா கெட்டவனா என்று பாராமல் பெண்களைக் கட்டிக் கொடுத்து. பெற்ற பிள்ளைகளின் வாழ்க்கையை அழிப்பதையும் அப்போதும் பெண்களுக்குள் இருக்கும்- அடங்காத– சாதி வெறியை படம் சொல்லும் விதம் அபாரம்.

கதாபாத்திரங்களுக்கு ஏற்படும் பதைபதைப்பு நம்மையும் தொற்றிக் கொள்ளும் வகையில் , இயக்குனராக ஜெயிக்கிறார் சுரேஷ் ராஜகுமாரி .

மனசாட்சியின் முனகல்களுக்கு காது கொடுக்கும் கதிரவன் கதாபாத்திரத்துக்கு, சற்றே கூச்ச சுபாவமும் தயக்கமும் ஒரு சல்லாத் துணி போல மென்மையும் கொண்ட, விக்ரம் பிரபுவின் நடிப்பு அற்புதமாக பொருந்துகிறது.

இதுவரை அவர் நடிப்பில் எதைக் குறை என்று சொன்னார்களோ அதையே இந்தப் படத்துக்கு பலமாக காட்டிய விதத்திலும் இயக்குனரின் திறமை ஜொலிக்கிறது.

முதல் படம் என்பதே தெரியாத அளவுக்கு அற்புதமாக நடித்துள்ளார் எல் ஏ அக்ஷய் குமார்.

“சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்….. ” என்ற அவரது உயிர் நடுங்கும் ஓலக்குரல் இதயத்தை அதிர வைக்கிறது.

உப்புமா படங்களில் சிலர் நடிப்பதைப் பார்க்கும்போதே , ‘இவரு புரடியூசருக்கு வேண்டப்பட்டவர் போல..” என்பது உடனே புரிந்து விடும். கடுப்பாக இருக்கும்.

ஆனால் இவ்வளவு பெரிய தயாரிப்பாளரின் மகன் என்றாலும் , அந்த கேரக்டருக்கு உரிய நியாயம் செய்யும் வகையில் அதை புரஃபஷனலாக அணுகி, நியாயம் செய்திருக்கும் அக்ஷய் குமார் பாராட்டப்பட வேண்டியவர். (படத்தில் காட்டப்படும் விக்கிரவாண்டி அக்ஷய் பவன்ல நம்பி சாப்பிடலாமா அக்ஷய்?)

இவர்களுக்கு இணையாக கலையரசி கேரக்டர் மூலம் படத்தை தூக்கிச் சுமக்கிறார் அனிஷ்மா அனில்குமார். இயலாமை, அதே நேரம் வைராக்கியம், அம்மா மற்றும் அக்கா முன்னிலையிலேயே, அக்காவின் கணவனான தாய்மாமன் எட்டி உதைத்து அடிக்கும்போது…

ஆதரவு இல்லாத நிலையில் இறுகிய முகத்தோடு கண்ணீர் வடிக்கும் கல்லாக சமைந்து உட்கார்ந்திருக்கும் விதம்..

அனிஷ்மா …. ஸோ நைஸ் மா!

படம் ஆரம்பிப்பதற்கு முன்பு அட்டகாசமான பின்னணி இசையிலேயே படத்தை தூக்கிப் பிடிக்கிறார் ஜஸ்டின் பிரபாகரன். அதுவும் பஸ்ஸில் இருந்து அப்துல் ரவூப் தப்பிக்கும் காட்சி உட்பட பல காட்சிகளில் அவரது பின்னணி இசை அசத்தல். படத்தை ஒரு கியர் எக்ஸ்ட்ரா போட்டு தூக்குபவர் அவர்தான்.

அடுத்து மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு, பிலோமின் ராஜ் எடிட்டிங் இவையும் படத்துக்கு பாதுகாப்பான ஆக்கப்பூர்வமான சின்சியரான எஸ்கார்ட் ஆக கூடவே போகிறது.

இது கற்பனைக் கதை அல்ல. பேண்டஸி படம் அல்ல.

ரத்தமும் சதையும் கண்ணீரும் வியர்வையும் அலறலும் கதறலுமாய் நிகழும் யதார்த்தம். இதில் லாஜிக் முக்கியம். அது ரசிகனுக்கு புரியும் லாஜிக் ஆகவும் இருக்க வேண்டும் என்பதும் அப்படித்தான் சொல்லப்பட வேண்டும் என்பதும் ரொம்ப ரொம்ப முக்கியம்.

Sirai Tamil Movie Review

படத்தில் அது இருக்கிறதா?

பொதுப் போக்குவரத்தில் விசாரணைக் கைதிகளை இப்படி அழைத்துப் போவது இப்போது எந்த அளவுக்கு நடைமுறையில் இருக்கிறது என்பதில் கூட, ‘பெனிஃபிட் ஆஃப் டவுட் ‘ முறையில் படைப்பாளிக்கு சாதகமாகவே தீர்ப்பளிப்போம். நடைமுறையில் இப்போது மிகக் குறைவு என்றாலும் கூட சுவாரஸ்யத்துக்காக ஓகே.

பொதுவாக ஒரு பேருந்தில் ஒரு கைதியை போலீஸ் எஸ்கார்ட் ஆக கொண்டு சொல்கிறார்கள் என்றால் ,அந்த பஸ்ஸின் டிரைவர் கண்டக்டருக்கு அது தெரிவிக்கப்படும். அது அவர்கள் கடமை அல்ல என்றாலும் அரசுப் பேருந்து எனில் அது அவர்களுக்கும் பொறுப்பு.

அப்படி ஒருமுறை ஒரு கைதி தப்பித்த போது, அந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் நடத்துனருக்கும் கூட கேள்வி போனது என்று படித்த ஞாபகம் கூட இருக்கிறது.

பொதுவாக அப்படி பயண வழியில் வண்டியை நிறுத்தி மீண்டும் எடுக்கும் போது,எல்லோரும் ஏறி விட்டார்களா என்று பார்த்து விட்டுத்தான் வண்டியை எடுப்பார்கள். சிலர் அலட்சியமாக எடுப்பதும் உண்டு. ஆனால் கைதிகள் கொண்டு செல்லப்படும் பஸ்களை அப்படி எடுக்க மாட்டார்கள்.

ஆனால் இந்தப் படத்தில் போலீஸ் ஏறுவதற்குள் ஏன் பஸ்ஸை எடுத்தீர்கள் என்று கேட்கும்போது, பஸ் டிரைவர் கண்டக்டர் பேசுவது போல எல்லாம் பேச முடியாது.

பாதிக்கப்பட்ட கைதியின் உண்மை நிலை உணரும் ஒரு நீதிபதி, ”நீ குற்றத்துக்கு மேலாக தணடனை அனுபவித்து விட்டாய். அடுத்த விசாரணையில் உன்னை விடுதலை செய்து விடுகிறேன்”என்று சொல்கிறார்.ஆனால் அடுத்த விசாரணை வரும்போது நீதிபதி மாறி விடுகிறார். வந்த புதிய நீதிபதிக்கு முந்தைய நீதிபதி சொன்னதே தெரியவில்லை. விடுதலை செய்ய முடியாது என்கிறார்.

எனில் முந்தைய நீதிபதி குறிப்பு எதுவும் எழுதி வைக்க மாட்டாரா? அது புதிய நீதிபதிக்கு தெரியாதா? ஆலமர பஞ்சாயத்து கூட இது போன்ற விஷயங்களில் கரெக்ட்டாக இருக்குமே.?

தவிர விக்கிரவாண்டி அக்ஷய் பவன் போன்ற ஒரு ஹோட்டல் நிறுத்தத்தில், பல பஸ்கள் நிற்கும் நேரத்தில், என்னதான் போலீஸுக்கு பிரச்னை என்றாலும், கை விலங்கு போடப்பட்ட ஒருவன் கையில் துப்பாக்கியோடு பஸ்ஸில் இருந்து இறங்கி தப்பி ஓடுவது எல்லாம் பக்கா சினிமாத்தனம்.

சரி அது கூட சுவாரஸ்யம் என்று வைத்துக் கொள்வோம்.

தப்பி ஓடியவனிடம், ” ஏன்டா திரும்பி வந்த ?” என்று கேட்கும்போது, “கை விலங்கோட கையில் துப்பாக்கியோடு நான் எங்க போய் தப்பிக்க முடியும். நான்தான் முஸ்லீம் ஆச்சே ..” என்கிறான். (அப்ப மத்தவன் எல்லாம் தப்பிக்க முடியுமா?

கதை எங்கே நடக்குது? வேலூர், சிவகங்கை ஏரியாவில்!

அதே போல கதிரவனுக்கே தெரியாமல் அந்த துப்பாக்கியில் தோட்டா லோட் செய்யப்பட்டு இருக்கிறது. காரணம் கைதி முஸ்லிம். என்பதால், அவனை சுட்டு விட மறைமுகக் கட்டளை, கதிரவனோடு கூட வரும் போலீசுக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறதாம். காரணம் அவன் ஒரு முஸ்லீம் என்பதாம்.

கதை எங்கே நடக்குது ? தமிழ்நாட்டில்!

ஈழத்துக்காக தீக்குளித்த முதல் தமிழ்நாட்டுத் தமிழன் ஒரு முஸ்லீம் என்பதை ஆயிரம் முறை சொல்வோம். குன்றேறி நின்று முழங்குவோம். நியாயம்..

அதேபோல தமிழகத்தில் சில மேல்மட்ட அமைப்புகளுக்கு இஸ்லாமிய வன்மம் இருக்கலாம். ஆனால் ஒருவன் முஸ்லீம் என்பதற்காக அவனை அவன் குடும்பத்தை வெறுக்கும் மறுக்கும் தள்ளி வைக்கும் கிராமம் சிவகங்கை பக்கம் எங்கேப்பா இருக்கு?

(ஹெச் ராஜா, ப.சிதம்பரம் மேல் கோபம் இருக்கலாம். அதற்காக சிவகங்கையையா அசிங்கப்படுத்துவது? ஹைதர் அலியின் சகோதர பாசத்துக்குப் பாத்தியமான வேலுநாச்சி ஆண்ட மண் இல்லையா அது?)

எங்கள் சாதிப் பெண்ணை முஸ்லிம் பையன் காதலிப்பது பிடிக்கவில்லை என்று சொல்லும் சமூகங்கள் உண்டு என்று கதை சொல்லுங்கள். நியாயம்.

முஸ்லிம்களுடன் இயல்பாகப் புழங்காத சமூகங்கள் உண்டு என்று சொல்லுங்கள் இருக்கிறது. ஆனால் முஸ்லீம் என்பதால் அவர்களை தமிழகம் தாழ்த்தப்பட்டவர்களாகப் பார்க்கிறது என்பது என்ன கதை?

வட இந்தியாவில் மிரட்டப்பட்ட காரணத்தால் பலர் முஸ்லிம்களாக மாறினார்கள். ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை முஸ்லிம்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் மாறிய தாழ்த்தப்பட்ட மக்கள், அதன் மூலம் சாதிய இழிவைத் துடைத்து எறிந்தார்கள் என்பதுதானே தமிழகத்தின் கம்பீர வரலாறு?

ஒரு பர்தா அணிந்த இஸ்லாமிய பெண், ஊர்வலத்தில் வரும் முருகக் கடவுளை மனமுருகி வழிபட, அலகு குத்திக் கொண்டு தொங்கியபடி வரும் முருக பக்தர், அந்த இஸ்லாமியக் குழந்தையின் நெற்றியில் விபூதி வைக்கும் காட்சியை வேறு எந்த மாநிலத்திலாவது திராணி இருந்தால் நடத்திக் காட்டுங்கள் பார்ப்போம்.?

நீங்கள் கதை விடும் கதை, தமிழ்நாட்டில் எங்கே நடக்கிறது? பொதுவாக கோவை குண்டு வெடிப்புக்குப் பிறகு இஸ்லாமிய கைதிகள் மிகவும் கடுமையாக கண்காணிக்கப்பட்டார்கள். அவர்களில் விசாரணைக் கைதிகளாக இருந்தால் அவர்களின் விசாரணை சீக்கிரம் முடியாமல் இழுத்தடிக்கப்பட்டது உண்மைதான்.

ஒரு ஊரில் உள்ள தெருக்களில் இரவு முழுக்க விளையாடலாம் . நேரம் காலம் தெரியாமல் இருக்கலாம் என்று வைத்துக் கொள்வோம். அதே அந்த ஊரில் ஒரு கொலை விழுந்தால் போலீஸ் சும்மா இருக்காது . அடிக்கடி ரோந்து வரும். அப்போது தெருவில் மூன்று பேர் நின்று பேசிக் கொண்டு இருந்தால் கூட திட்டும். துரத்தும். கொஞ்ச நாளைக்குப் பிறகு மீண்டும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். தமிழ் நாட்டில் முஸ்லிம்கள் என்பதால் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் கூட அப்படித்தான்.ஆனால் எப்போதுமே அதே கட்டுப்பாடுதான் என்பது என்ன நியாயம்? இப்போது சிக்கந்தர் மலை விவகாரம் வரை பொது மக்களும் அரசும் யாருக்கு ஆதரவாக இருக்கிறது?

அப்படி இருக்க தமிழ் நாட்டில் முஸ்லிம் என்றால் எவ்வளவு கஷ்டம் பாருங்கள் என்று பொய்யாக கட்டமைப்பது எதற்கு?.

இல்லாத வெறுப்புணர்வை அல்லது இந்தியாவிலேயே மிகக் குறைவான மத வெறுப்பு தமிழ்நாட்டில்தான் இருக்கிறது என்ற உண்மையை மறைத்து, உங்கள் சுயலாபத்துக்காக சுயநலத்துக்காக ஏன் இந்த மண் மீது வீண்பழி சுமத்துகிறீர்கள்?

முஸ்லீம் மீது வெறுப்பு விஷயத்தில் தமிழ் நாடும் மோசம் என்று சொல்வதன் மூலம் யாருக்கு ஜால்ரா அடிக்கிறீர்கள்?

எங்கோ உத்திரப்பிரதேசத்திலும் குஜராத்திலும் சொல்ல வேண்டிய கதையை தமிழ்நாட்டில் நடப்பதாகச் சொல்லி என்ன சாதிக்க விரும்புகிறீர்கள்? தைரியம் இருந்தால் அங்கே போய்ச் சொல்லுங்கள்.

Sirai Tamil Movie Review

யதார்த்தத்தில்…

‘ரவூப்பை கலையரசி காதலித்தால் கலையரசிதான் பாத்திமாவாக -முஸ்லிமாக மதம் மாற வேண்டும் . அதே ஒரு கலையரசன் மெஹருன்னிசாவைக் காதலித்ததால் அவள் மெஹ்ருன்னிஸாவாகவே கலையரசன் வீட்டில் வாழலாம். முருகனை அவளும் கும்பிடலாம். முருகன் கோவித்துக் கொள்ள மாட்டார் இதுதானே உண்மை? இஸ்லாம் போலவே கிறிஸ்தவத்திலும் அதே மத வெறிக் கட்டுப்பாடுதானே?

தமிழகத்தில் இந்துத்வா வளர்வதற்கு இப்படி இஸ்லாமிய கிறிஸ்தவர்களின் மத வெறியும் ஒரு காரணமா இல்லையா?

பொதுவான தமிழ் சமூகம் மத அடிப்படையிலும் பலரையும் தாழ்த்தப்பட்டவனாகவே பார்க்கிறது என்று உண்மைக்குப் புறம்பாகச் சொல்லி தமிழ்ச் சமூக உணர்வை பலவீனப்படுத்துவதில் உங்களுக்கு ஏன் இவ்வளவு ஆர்வம்?

இன்றைக்கும் வட இந்தியாவில் ஒரு தாழ்த்தப்பட்டவன், பிற்படுத்தப்பட்டவன், எவ்வளவு அறிவாளியாக செல்வந்தனாக அதிகாரம் மிக்கவனாக இருந்தாலும் ஒரு பிராமணன் கட்டும் வீட்டை விட, உயரமாக வீடு கட்ட முடியாது.

ஆனால் தமிழ்நாட்டில் படித்து அறிவாளியாகி சம்பாதித்து உயர்ந்தால், எந்த உயர் சாதி முன்னாலும் கால் மேல் கால் போட்டு கம்பீரமாக உட்காரலாம்.

ஒரு முக்கியமான இந்திய பாகிஸ்தான் பகை உணர்வுச் சூழலில் , இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியபோது, பாகிஸ்தான் வீரர்கள் கிரவுண்டை சுற்றி ஓடி வர, கைதட்டி உற்சாகப்படுத்திய பெருந்தன்மை கொண்டவன் தமிழன்.

பாகிஸ்தான் கிரிக்கெட்டர் ரமீஸ் ராஜா அதைப் பார்த்து வியந்து போய், ‘ என்னால் நம்பவே முடியவில்லை. எனக்கு கராச்சி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இருப்பது போல இருக்கிறது” என்றார்

திருவல்லிக்கேணியில் உட்கார்ந்து கொண்டு பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று சொன்னவனிடம் கூட ”அப்படி சொல்வது தவறு” என்று கருத்தியலாக உரையாடியவன் தமிழன்.

தமிழ்நாட்டில் நடக்கும் தவறுகளை நியாயமாக சொல்லுங்கள் . அது பாதிக்கப்படுபவனின் உரிமை. ஆனால் தமிழ்நாட்டில் இல்லாததை எல்லாம் இருப்பது போல ஆக்கி, ஏன் தமிழ் நாட்டையே முதுகில் குத்திக் கொண்டு இருக்கிறீர்கள்?

இங்கே இல்லாத பிரச்னைகளையும், ” இருக்குது” இருக்குது…” என்று பொய்யாகக் கூவிக் கொண்டு இருந்தால் அப்புறம் இருக்கிற பிரச்னைகளை எப்போது எப்படி சரி செய்வது?

தமிழ் நாட்டையும் வட இந்தியா போல ஆக்க வேண்டும் என்பதுதான் உங்கள் நோக்கமா?

எனில் உங்களுக்கு பின்னால் இருப்பது காவி சங்கிகளா? இல்லை பச்சைச் சங்கிகளா?

சிறை படைப்பாக பால். கருத்தியலாக விஷம்.

விஷம் கலந்த பாலை நீங்கள் பால் என்று சொல்லலாம். அதன் வெண்மையில் மயங்கலாம்

ஆனால் பானம் என்று பார்த்தால் அது விஷம் தானே?

— ராஜ திருமகன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share