ஒரு முதிர்கன்னனின் ‘கல்யாண’ கனவு!
குறிப்பிட்ட வயதைத் தாண்டியும் காதல், கல்யாணத்தைக் காணாமல் இருக்கிற பெண்களை ‘முதிர்கன்னி’ என்கிறது சமூகம். அப்படியானால், அப்படி வாழ்கிற ஆண்களை ‘முதிர்கன்னன்’ என்று சொல்லலாம் அல்லவா? அப்படியொரு முதிர்கன்னனின் கல்யாணக் கனவுகளை, அதனை நிறைவேற்றத் துடிக்கிற முயற்சியில் எதிர்கொள்கிற இடர்களைப் பேசுகிறது ‘லவ் மேரேஜ்’ திரைப்படம். vikram prabhu love marriage review june 27
சண்முக பிரியன் இயக்குனராக அறிமுகமாகிற இந்தப் படத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், கஜராஜ், அருள்தாஸ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு, யாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சத்யராஜ் கௌரவத் தோற்றத்தில் ஒரு காட்சியில் வந்து போயிருக்கிறார். ஷான் ரோல்டன் இதற்கு இசையமைத்திருக்கிறார்.
’லவ் மேரேஜ்’ தருகிற திரையனுபவம் எத்தகையது? vikram prabhu love marriage review june 27

’லாக் டவுன்’ காதல்! vikram prabhu love marriage review june 27
மதுரை வட்டாரத்தில் வாழ்கிற ஒரு இளைஞன் முப்பதைத் தாண்டியும் திருமணமாகாமல் இருக்கிறார். அதனால் உறவினர்களின் கேலி, கிண்டல் பேச்சுக்கு அந்த இளைஞன் ஆளாகிறார்.
ஒருகட்டத்தில், ‘ஏதேனும் பெண் கிடைத்தால் நல்லது’ என்று வேறு சாதியில் தேடுகிற நிலைக்கு அந்த இளைஞனின் குடும்பம் ஆளாகிறது. கோபிச்செட்டிபாளையத்தில் ஒரு பெண் இருப்பதாகத் தரகர் சொல்ல, அவரைக் காண உறவினர்களுடன் செல்கிறார் அந்த இளைஞன்.
பெண்ணைப் பார்த்ததும் அந்த இளைஞருக்குப் பிடித்துப் போகிறது. ஆனால், அப்பெண்ணுக்குச் சம்மதம் இருக்கிறதா, இல்லையா என்று தெரியவில்லை.
பெண் வீட்டாரிடம் கேட்டால், ‘அவர் கொஞ்சம் கூச்ச சுபாவம் உள்ளவர்’ என்கின்றனர்.
இந்த நிலையில், அந்த இளைஞனின் குடும்பத்தினர் அவ்வூரை விட்டுச் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. கொரோனா கால ஊரடங்கினால் எங்கும் நகர முடியாது என்பதே யதார்த்தம்.
அதனால், திருமணத்திற்கு முன்னரே பெண் வீட்டில் அவர்கள் அனைவரும் தங்குகின்றனர். அது சில சிக்கல்களை ஏற்படுத்துகிறது. அதனை எப்படிச் சமாளிப்பது என்று பெண் வீட்டார் திகைக்கின்றனர்.
இந்த நிலையில், பெண் திடீரென்று வீட்டை விட்டு எங்கோ சென்றுவிடுகிறார். அவர் எங்கு சென்றார்? ஏன் சென்றார்?
பெண் வீட்டார் பதில் சொல்ல முடியாமல் திகைத்து நிற்க, அந்த இளைஞனோ தனது திருமணக் கனவு சிதைந்ததை எண்ணி விக்கித்துப் போகிறார்.
அப்படி அந்தப் பெண் எங்குதான் சென்றார்? இறுதியில் அந்த இளைஞருக்கு அவருடன் திருமணம் ஆனதா? இந்த கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது படத்தின் இரண்டாம் பாதி.
’கல்யாணத்திற்குப் பிறகாவது காதலிக்கிற நிலை வருமா’ என்றிருக்கிற ஒரு முதிர்கன்னனின் வாழ்வில் ’லாக்டவுன்’ கொண்டுவந்த காதலைப் பற்றிப் பேசுகிறது இப்படம்.
மூன்றாண்டுகளுக்கு முன்னர் தெலுங்கில் வெளியான ‘அசோக வனம்லோ அர்ஜுனா கல்யாணம்’ திரைப்படத்தின் ரீமேக் இது.
அந்த தகவல் தெரியாதவர்களை இப்படம் நிறையவே ஆச்சர்யப்படுத்தும், திகைக்க வைக்கும். அதுவே இதன் யுஎஸ்பி. vikram prabhu love marriage review june 27

விக்ரம் பிரபுவுக்கு வெற்றியா? vikram prabhu love marriage review june 27
படத்தில் முப்பதைத் தாண்டிய இளைஞராக வருகிறார் விக்ரம் பிரபு. தான் ஏற்ற ராம் எனும் பாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கிற அளவில் நடித்திருக்கிறார்.
அம்பிகா எனும் பாத்திரத்தில், இதில் நாயகியாக வரும் சுஷ்மிதா பட்டுக்கு பெரிதாக வசனங்கள் இல்லை. அதேநேரத்தில், அவரது தோற்றமோ, நடிப்போ பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் இல்லை.
இப்படத்தில் ராதா என்ற பாத்திரத்தில் மீனாட்சி தினேஷ் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட ‘காவலன்’ படத்தில் வரும் மித்ராவைப் போலவே அவரது இருப்பு இதில் அமைந்திருக்கிறது. ரசிகர்களுக்கு அவரது காட்சிகள் பிடித்துப் போனால், தமிழில் ஒரு சுற்று வர வாய்ப்புகள் உண்டு.
படத்தில் ‘ஹைலைட்’ ஆக அமைந்திருப்பது அருள்தாஸின் பாத்திரம். மனிதர் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார். எதற்கெடுத்தாலும் குறைகள் சொல்கிறவராக, அவர் வருகிற காட்சிகளே இப்படத்தின் ஆதார நாடி.
ரமேஷ் திலக், யாசர், கோடாங்கி வடிவேலு, கே.ஜி.மோகன், முருகானந்தம் இவர்களோடு சத்யராஜும் ஒரு காட்சியில் தோன்றி கிச்சுகிச்சு மூட்டியிருக்கிறார்.
இன்னும் கஜராஜ், வின்னர் ராமச்சந்திரன் உட்படப் பலர் இப்படத்தில் உண்டு.
’எப்பவும் அரிசியும் பருப்பும் தானா’ என்பது போன்ற வசனங்கள் கோவை வட்டாரத்தைச் சேர்ந்தவர்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். பிற வட்டாரத்தினருக்கு அது எந்தளவுக்கு ‘வொர்க் அவுட்’ ஆகும் என்று தெரியவில்லை.
இது போன்ற விஷயங்கள் ’மூலப்படத்தில்’ எப்படி கையாளப்பட்டதென்று தெரியவில்லை. போலவே, ‘லாக்டவுன்’ சம்பந்தப்பட்ட டீட்டெய்லிங் குறைவாக இருக்கிறதோ என்ற எண்ணத்தையும் தவிர்க்க முடியவில்லை. vikram prabhu love marriage review june 27
கதை முழுக்கப் புதிது இல்லை என்றபோதும், ‘லாக்டவுன் காதல்’ என்றொரு விஷயத்தை நம்பிக் களமிறங்கியிருக்கிறார் இயக்குனர் சண்முக பிரியன்.
நன்றாகச் சிரிக்க வைக்கிற நடிப்புக் கலைஞர்கள் படத்தில் இருப்பதால், அவர்களிடம் தன்னால் இயன்ற அளவுக்கு வேலை வாங்கியிருக்கிறார். அது திரையில் சரியாக வெளிப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி. vikram prabhu love marriage review june 27
ஷான் ரோல்டனின் பின்னணி இசை சில இடங்களில் நகைச்சுவையை அதிகப்படுத்தியிருக்கிறது. சில இடங்களில் இளையராஜாவின் பாடல்களை நினைவுபடுத்துகிறது பின்னணி இசை. ‘வேலையில்லா பட்டதாரி’ பாடலை நினைவூட்டுகிறது ஒரு பாடல். அவை வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டதா என்பதைப் படக்குழு தான் தெளிவுபடுத்த வேண்டும்.
குறிப்பிட்ட இடங்கள், பாத்திரங்களே திரையில் தோன்றுகிற கதை என்றபோதும், காட்சியாக்கம் போரடித்துவிடாமல் இருக்க மெனக்கெட்டிருக்கிறது படக்குழு.
மதன் கிறிஸ்டோபரின் ஒளிப்பதிவு, பரத் விக்ரமனின் படத்தொகுப்பு, எம்.முரளியின் தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் இதர பல தொழில்நுட்ப அம்சங்கள் அதற்குத் துணை நின்றிருக்கின்றன.
கல்யாணம் குறித்த கற்பிதங்கள், சமூகத்தில் நிலவும் சாதி வேறுபாடுகள், குறிப்பிட்ட வயதைத் தாண்டித் திருமணம் செய்தல் உட்படப் பல விஷயங்களைப் பேசுகிறது ‘லவ் மேரேஜ்’. அதில் நிறைகளைப் போலவே குறைகளும் இருக்கின்றன.
அனைத்தையும் தாண்டி, ‘இவனுக்கெல்லாம் கல்யாண ராசியே இல்லை’ என்று சொல்லப்படுகிற நாயகன் எப்போது காதலில் விழுந்தார் என்று சொன்ன வகையில் நல்லதொரு கமர்ஷியல் திரைப்படத்திற்கான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறது இப்படம். அதனை மட்டுமே கவனத்தில் கொள்பவர்களுக்கு ‘லவ் மேரேஜ்’ பிடிக்கும்..!