அனைத்து மக்களின் அமோக ஆதரவுடன், தீர்க்கமுடன் ஒற்றுமையாகக் களமாடி, ஆட்சி பீடத்தைக் கைப்பற்றும் ஜனநாயக இலக்கை உறுதியாக வெல்வோம் என நடிகரும் தவெக தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கினார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காக வைத்து செயல்பட்டு வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி கரூரில் விஜய் கலந்துகொண்ட பரப்புரை நிகழ்ச்சியில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தால் அக்கட்சியின் செயல்பாடுகள் சற்று முடங்கின. இந்நிலையில் கரூர் துயரச் சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், வரும் தேர்தலை இலக்காக வைத்து தவெக நிர்வாகிகள் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தவெக இன்று மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இந்நிலையில் நடிகரும் தவெக தலைவருமாக விஜய் இன்று (பிப்ரவரி 2) தனது எக்ஸ பதிவில், “நம் உயிரனைய இயக்கமான தமிழக வெற்றிக் கழகத்தின் மகிழ்ச்சிகரமான மூன்றாம் ஆண்டு, இன்று தொடங்குகிறது. இரண்டு ஆண்டுகளை இயல்பாகவும், இயல்பு தாண்டியும் நிறைவு செய்து, நீள்கிறது நம் அரசியல் பெரும்பயணம்.
முதன்மை அரசியல் சக்தியாகப் பரிணமிக்கும் முன்பே மக்கள் இயக்கமாக, மக்களோடு மக்களாகக் கலந்து நின்றவர்கள் நாம். இதை நாடறியும். நல்லவர்கள் அறிவார்கள்.
ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். சலனங்களைப் புறந்தள்ளி, சமநிலை தவறாத, அளக்கவியலாத ஆழ்கடல் த.வெ.க.; எவராலும் விலக்க இயலாத விரிவானம் த.வெ.க.; அத்தனை இலக்குகளையும் அர்ப்பணிப்புடன் வெல்லும், சாமானிய மக்களுக்கான அதிகார அரசியலின் வெற்றிப் போர்முரசம் த.வெ.க.
2026 சட்டமன்றத் தேர்தல் களம், இதுவரை இல்லாத புதிய சூழலைச் சுமந்து நிற்கிறது. இதற்கு ஒரே காரணம் நமது அரசியல் வருகை மட்டுமே என எல்லோரும் சொல்கின்றனர். எனவே இச்சூழலில், களத்தை நமதாக்கி, தேர்ந்த தெளிவுடனும் திறன்மிக்க நுட்பத்துடனும் தேர்தல் அரசியல் வெற்றியின் வாயிலாக, அதிகார அரசியல் அங்கீகாரம் நோக்கிச் செல்வோம். அனைத்து மக்களின் அமோக ஆதரவுடன், தீர்க்கமுடன் ஒற்றுமையாகக் களமாடி, ஆட்சி பீடத்தைக் கைக்கொள்ளும் ஜனநாயக இலக்கை உறுதியாக வெல்வோம்.
நல்லதே நடக்கும்.
வெற்றி நிச்சயம்.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
