விஜய் பிரிக்க போகும் வாக்குகள்.. தமிழ்நாட்டில் பிராமணர்கள் இனப்படுகொலையா? கார்த்தி சிதம்பரம் சொன்னது என்ன?

Published On:

| By Mathi

Karti Chidambaram

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் பிரிக்க இருப்பது எந்த வாக்குகள்? சனாதன தர்மம் குறித்த தமிழ்நாட்டின் பார்வை என்ன? என்பது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் விரிவாக விவரித்துள்ளார்.

ANI செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளதாவது: அதிமுக, திமுக என பெரிய கூட்டணிகளில் விஜய் சேரமாட்டார். அவர் தனித்தே கூட்டணி அமைப்பார். திமுக கூட்டணிக்கு விஜய் வர முடியாது.

ADVERTISEMENT

விஜய், திமுக மற்றும் பாஜகவை தமது எதிரிகளாக தெளிவாகவே அடையாளப்படுத்தியுள்ளார். ஆகையால் இந்த இரண்டு கூட்டணிகளில் விஜய் இடம் பெறமாட்டார். 3-வது அணியாகத்தான் விஜய் இருப்பார்.

விஜய் பிரிக்கும் வாக்குகள்

ADVERTISEMENT

விஜய், மதச்சார்பற்ற வாக்குகளைப் பிரிப்பார் (Secular Votes). அதாவது திமுக, அதிமுக வாக்குகளில்தான் விஜய் கை வைப்பார். விஜய் மிகவும் பிரபலமான திரைப்பட நட்சத்திரம். அவருக்கு நிச்சயமாக ஒரு வலுவான ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த ரசிகர் பட்டாளம் ஒரு ஆதரவு தளமாக மாறலாம். அந்த ஆதரவு தளம் வாக்குகளாக மாற வாய்ப்புள்ளது. ஆனால் அந்த வாக்குகள், வெற்றிக்கான இடங்களாக மாறுமா என்பது ஒரு பெரிய கேள்விக்குறி.

பிராமணர்கள் இனப்படுகொலையா?

ADVERTISEMENT

பிராமணர்கள் தாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்பது போன்ற பொய்யான தோற்றத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு எதிராக எந்த இனப்படுகொலையும் நடக்கவில்லை; அவர்களுக்கு எதிராக எந்த வன்முறையும் இல்லை; அவர்களின் பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. தமிழ்நாட்டில் பிராமணர்களின் எந்த சடங்குகளையோ அல்லது வழிபாட்டு முறைகளையோ யாரும் சீர்குலைக்கவில்லை.

உதயநிதியின் சனாதன ஒழிப்பு பேச்சு

சனாதனம் என்றால் என்ன? தமிழ்நாட்டில் யாரும் அந்த வார்த்தையைப் பயன்படுத்துவதில்லை. வட இந்தியாவை ஒப்பிடுகையில் நாங்கள்தான் வலிமையான இந்துக்கள். தமிழ்நாட்டில் அதிகக் கோயில்கள் உள்ளன. நாங்கள் அதிகமாகவே தேங்காய்களை உடைக்கிறோம். பாஜகவில் உள்ள பலரை விட நான் அதிகக் கோயில்களுக்குச் செல்கிறேன். நெற்றியில் விபூதி அல்லது குங்குமம் வைக்காமல் நான் ஒரு நாளும் வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை.

உதயநிதி ஸ்டாலின் ’சனாதன ஒழிப்பு’ என பேசியது பெரிய சர்ச்சையானது. ஆனால் தமிழ்நாட்டில் ’சனாதனம்’ என்ற வார்த்தையானது சாதி படிநிலையைக் குறிக்கிறது. அப்படித்தான் சனாதனத்தை பற்றி நாங்கள் பேசுகிறோம். ஒருபோதும் இந்து மத வழிபாட்டு முறைகளைப் பற்றி யாரும் நாங்கள் பேசவில்லை.

தமிழ்நாட்டில் ’எனது வழிபாட்டு முறை முடக்கப்பட்டுள்ளது’ என்று எந்த ஒரு குழுவுமே சொல்லவே முடியாது. இங்கே சுதந்திரமான வழிபாட்டு முறை இருக்கிறது. இவ்வாறு கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.

Karti Chidambaram on the Dravidian model
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share