தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் இன்று (நவம்பர் 5) மாமல்லபுரத்தில் நடைபெற்றது.
கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கரூர் மக்கள் சந்திப்பின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பரிதாபமாக உயிரிழந்த 41 பேருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
கட்சியின் எதிர்கால செயல்பாடுகள் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான வியூகங்கள் குறித்து இக்கூட்டத்தில் முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன.
இதற்கிடையே அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் வரவேற்புரை ஆற்றி பேசினார்.
அவர் கூறுகையில், “பல சவால்களைக் கடந்து விஜய் இன்று அரசியலின் மையத்தில் இருக்கிறார். 30 ஆண்டுகால கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் கொண்ட அவரை அசைப்பது எளிதல்ல. அவர் தாய்மார்களின் நம்பிக்கையையும், தமிழ் மண்ணின் அடையாளத்தையும் பிரதிபலிக்கிறார். தொண்டர்களின் கடின உழைப்பால் கட்டப்பட்ட தவெக ஒரு இரும்புக்கோட்டை. நாம் எதிர்ப்பாளர்களை அம்பலப்படுத்தி, புதிய உத்வேகத்துடன் பணியாற்ற வேண்டும்,” என்று பேசினார்.
2026-ல் விஜய் முதல்வராக சபதம் ஏற்போம் என்றும் புஸ்ஸி ஆனந்த் தவெகவினருக்கு அறைகூவல் விடுத்தார்.
