கரூர் பெருந்துயரத்தில் பாதிக்கப்பட்டவர்களிடமும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடமும் விஜய் வீடியோ கால் மூலம் பேசி ஆறுதல் கூறி வருவதாக தகவல்கள் வருகின்றன.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவரைக் காண ரசிகர்களும், தொண்டர்களும் குவிந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த பெருந்துயரத்தை தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களையும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினர்.
ஆனால் தற்போது வரை விஜய் நேரில் செல்லவில்லை. இந்த துயரம் தொடர்பாக இதுவரை அவர் ஒரு பேட்டி கூட கொடுக்கவில்லை. வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், பழிவாங்க வேண்டும் என்றால் என்னை பழிவாங்குங்கள். அவர்களை விட்டு விடுங்கள் சிஎம் சார்’ என்று அரசியல் ரீதியாக பேசியிருந்தார்.
இந்த நிலையில் இன்று( அக்டோபர் 6) மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கரூருக்கு சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி தலா ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளார்.
அதே சமயம், சம்பவம் நடந்து ஒரு வாரம் கடந்துவிட்ட நிலையில் விஜய் எப்போதுதான் கரூர் செல்வார் என்று எதிர்பார்ப்பும் கேள்வியும் எழுந்துள்ளது.
ஆனால் கரூர் செல்வது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைமை இன்னும் குழப்பத்திலேயே இருந்து வருகிறது.இது தொடர்பாக விஜய் தொடர்ந்து முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறார்.
இந்நிலையில், ‘ தமிழக வெற்றி கழக அரசியல் வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமி, கரூர் சென்றால் விஜய்யின் உயிருக்கு ஆபத்து. அவருக்கு பாதுகாப்பு இல்லை. அதனால் அங்கு போக வேண்டாம் என கூறி இருக்கிறார். அதேசமயம் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ்… நீங்கள் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தால் தான் எல்லாம் சரியாக வரும் என்று சொல்லி இருக்கிறார்.
இந்த சூழலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கரூர் சொல்கிறார் என்ற தகவலும் விஜய்க்கு தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அருண்ராஜ் கரூருக்கு அனுப்பப்பட்டுள்ளார். அங்கு பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து வருகிறார்.
அப்போது வீடியோ கால் வாயிலாக விஜய்யும் பாதிக்கப்பட்டவர்களுடன் பேசி ஆறுதல் கூறி வருகிறார் ‘ என்கிறார்கள் விஜய்க்கு நெருக்கமான வட்டாரத்தில்.
தொடர்ந்து, ‘ விஜய் கரூருக்கு வர உள்ளார். அவரை இங்கு வர அனுமதித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்’ என்று காவல்துறையினருடனும் அருண்ராஜ் பேசி வருகிறார்.
இதன் மூலம் விஜய் விரைவில் கரூர் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.