தெரு நாய்களை விட இந்த நாய் லவ்வர்ஸ்தான் ரெம்ப ஆபத்தானவர்கள் என விஜய் தொலைக்காட்சியில் நடந்த நீயா நானா விவாத நிகழ்ச்சியில் கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தெரு நாய்கள் கடிப்பது அதிகரித்து வருவது குறித்த விவாதம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றமும் தலையிட்டுள்ளது. இந்த சூழலில் தான் தெரு நாய்கள் இல்லாத நகரம் வேண்டும் Vs தெரு நாய்களுக்கும் நகரத்தில் உரிமை உள்ளது என்ற தலைப்பில் விஜய் தொலைக்காட்சியில் கோபிநாத் ஒருங்கிணைத்த நீயா நானா விவாத நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நாய் கடித்து தன் குழந்தையை பறிகொடுத்த தந்தை, நாய் குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்தில் தன் குழந்தையைக் கண் முன்னே பறி கொடுத்த தந்தை, மற்றும் தனது பையனை 3 நாய்கள் சுற்றி வளைத்து கடித்த கொடூரத்தை கடும் கோபத்துடன் வெளிப்படுத்திய தந்தை என பலரும் தங்களது பாதிப்புகளை முன் வைத்தனர். தன் குழந்தை படித்துக்கொண்டிருந்த நிலையில் திடீரென தெரு நாய் வீட்டிற்குள் வந்த போது கழிவறையில் தஞ்சம் அடைந்த தாய் தமது பரிதவிப்பை கண் கலங்க வெளிப்படுத்தினார்.
மேலும் தமிழகத்தில் சுமார் 6 கோடி நாய்கள் உள்ளதாகவும், அதன் கழிவுகளால் ரேபிஸ் தவிர்த்து ஏராளமான நோய் பாதிப்புகள் பரவுவது குறித்தும் கருத்துகள் முன் வைக்கப்பட்டன. மேலும் நாய்க்கு தடுப்பூசி செலுத்துவதற்கான செலவு மற்றும் பாதிப்புகளை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மருத்துவர்கள், ஊடகவியலாளர்கள் என பல தரப்பினரும் ஆதாரங்களுடன் முன் வைத்தனர்.
நாய் லவ்வர்ஸ் தான் பிரச்சனை
நாய் மீது அன்பு என்ற பெயரில் நாய் லவ்வர்ஸ் அதிகமாக உணவு வைப்பதும், குழந்தைகள் உள்ளிட்டவர்களை நாய்கள் விரட்டி கடிக்க காரணம் என கூற்றுச் சூழல் ஆர்வலர் ஒருவர் முன் வைத்தார்.
இந்த விவாதத்தில் நாய்களை முறையாக தடுப்பூசி செலுத்தி உணவளித்து பாதுகாக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் பேசினர்.
அப்போது பேசிய சீரியல் நடிகை அம்மு, “நான் என் நாய்களை என் குழந்தைகளை போல் வளர்க்கிறேன்” என்றார்.
இதற்கு எதிர் தரப்பில் இருந்தவர், “உங்க நாய் என்பதற்கு என்ன வரையறை?” என்றார். அதற்கு அம்மு, “எங்கள் தெருவில் இருக்கும் நாய்களை நாங்கள் எங்கள் நாய்கள் என்கிறோம்” என்றார்.
அப்போது எதிர் தரப்பில் பேசியவர், “நீங்கள் நல்ல நாய் எல்லாவற்றையும் எங்கள் நாய் என்கிறீர்கள். அவர் வீட்டு பையனை கடித்த நாய் உங்கள் நாயா என்று கேட்டால் இல்லை என்று சொல்கிறீர்கள். இது ஏ செக்சன் பசங்க என் பசங்கள், டி செக்சன் பசங்கள் என் பசங்கள் இல்லை என்று சொல்வது போல் உள்ளது” என்றார்.இதற்கு அம்மு “நாய்க்கு அரசு அமைக்கும் செல்டர்கள் எப்படி இருக்க வேண்டும்” என்பது குறித்து அடுக்கடுக்கான கருத்துகளை முன்வைத்தார்.
நான் கேட்க உரிமை இல்லையா
அப்போது கோபிநாத் தலையிட்டு, “ஏதோ ஒரு நாய்க்கு செல்டர் அமைக்க இத்தனை உத்தரவாதத்தை கேட்கிறீர்கள். ஏதோ ஒரு நாய்க்கே நீங்கள் இத்தனை உத்தரவாதம் கேட்க உரிமை உள்ளது என்றால் என் சொந்த பிள்ளையை பாதுகாக்க நான் கேட்க உரிமை இல்லையா?” என்று கேள்வி எழுப்பினார். கோபியின் இந்த கேள்வி குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் “உங்க ஏரியாவில் இருக்கும் நாய்கள் எல்லாம் உங்கள் நாய்கள் தானே. அது யாரையாவது கடித்தால் நீங்கள் பொறுப்பு எடுத்து கொள்வீர்களா?” என்றார். அதற்கு அம்மு . “கண்டிப்பாக முடியாது. அதை அரசுதான் ஏற்று கொள்ள வேண்டும்” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட படவா கோபி,”நாய்கள் வழக்கமாக வந்து செல்பவர்களை கடிக்காது. ஆனால் இரவு 9 மணிக்கு பிறகு புதிதாக தன்னுடைய இடத்திற்கு யாரோ ஒருவர் வருகிறார் என்றால் அவர் நல்லவரா கெட்டவரா என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகக் குரைக்கும்” என்றார்.
“இதனால் இரவு 11 மணிக்கு இதுபோன்ற இடங்களுக்குச் செல்கிறீர்கள். அப்படி சென்றால் உரிய பாதுகாப்போடு செல்லுங்கள்” என்றார். இதைக்கேட்டு கடுப்பான கோபிநாத், “இது ஒரு பதிலா நான் எங்கு செல்ல வேண்டும். எந்த நேரத்திற்கு செல்ல வேண்டும் என்பதை நான் தான் முடிவு எடுக்க வேண்டுமே தவிர, நாய் முடிவு செய்யக் கூடாது” என்றார்.
நிறைவாக நாயால் பாதிக்கப்பட்ட பணக்கார வீட்டைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் என்று கேள்வி எழுப்பினார் கோபிநாத். அப்போது “யாரும் இல்லை ஏன் என்றால் அவர்கள் தெருக்களில் நடப்பது இல்லை” என்று நடிகை அம்மு தெரிவித்தார். உடனே, “பிரச்சனை என்னுடையதாக இருக்கும்போது, தீர்வு எப்படி உங்களுடையதாக இருக்க முடியும்? ” என்றார் கோபி. இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.