மோடியுடன் சேர்ந்து விஜய் நடிக்கிறார் என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அரசியல் கட்சியினரின் நகர்வுகள் மற்றும் பேச்சுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் சினிமாவை விட்டு அரசியலில் மோடியுடன் சேர்ந்து விஜய் நடிக்கிறார் என்று அப்பாவு கூறியுள்ளார்.
‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ் நெல்லை மாவட்டத்தில் இரண்டாவது கட்டமாக லேப்டாட் வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஜனவரி 28) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கிய பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சபாநாயகர் அப்பாவு, விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவாருக்கு சபாநாயகர் என்ற முறையில் இரங்கல் தெரிவித்தார்.
மேலும் அவர், “நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் மற்றும் பாஜக ஆகிய இரண்டும் இணைந்து டிராமா செய்கிறது.
கரூர் விவகாரத்தில் தமிழக போலீஸ் விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டு, பிரதமர் கீழ் இருக்கும் சிபிஐ விசாரணை கேட்டு பெற்றனர். தனி விமானம் மூலம் விஜய் விசாரணைக்கு சென்று வருகிறார்.
முதல்வர் தனக்கு விரோதமாக இந்த விவகாரத்தை எடுத்துச் சென்றுவிடுவார், பிரதமர் தனக்கு விரோதமாக எடுத்துச் செல்லமாட்டார் . அவர் சொல்லித்தானே கட்சி ஆரம்பித்திருக்கிறோம் என்று விஜய் சிபிஐ விசாரணை கேட்டுள்ளார்.
ஓவைசியின் கட்சி பாஜகவுக்கு ஆதரவான கட்சி என்று சொல்வார்கள். அதுபோன்றுதான் இங்கு சிறுபான்மை வாக்குகளை பிரிக்க பாஜக சொல்லி விஜய் கட்சி ஆரம்பித்திருக்கிறார்.
தமிழகத்தில் சிறுபான்மையினர் மற்றும் திமுக எதிர்ப்பு வாக்குகளைப் பிரிக்க விஜய்யைப் பயன்படுத்துகிறது பாஜக. புஸ்ஸி ஆனந்தும் அமித்ஷாவும் நண்பர்கள். அவர்கள் சொல்லித்தான் கட்சி ஆரம்பித்திருக்கிறார்கள்.
விஜய்யும் மோடியும் சேர்ந்து திட்டமிட்டு நடத்தும் நாடகம். சினிமாவில் விட்டுவிட்டு தற்போது அரசியலில் மோடியுடன் விஜய் நடிக்கிறார்” என்று கூறினார்.
