மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்றால், பொங்கல் வைத்துக் கொண்டாடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தான் போராட்டங்கள் நடத்தி அவர்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
தவெக தலைவா் விஜய்யின் நிா்வாகிகள் சந்திப்பு, தோ்தல் பிரசாரக் கூட்டம், இன்று (பிப்ரவரி 13) சேலம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பேசிய விஜய், “அனுபவம் இல்லாதவர்கள் எப்படி ஆட்சி அதிகாரத்தை செய்ய முடியும் என்று ஒரே விஷயத்தை சொல்கிறார்களே.. அதிகாரத்தை வைத்து கொள்ளையடித்ததை தாண்டி ஏதாவது ஒரு பெரிய அனுபவம் இவர்களுக்கு இருக்கிறதா?
அடுத்தவர்கள் அட்ரஸில் அரசியல்வாதியாக இருக்கும், இவர்கள் எல்லோருக்கும் ஒரு சவால். என்னைப் போல் தனியாக, சொந்தமாக ஒரு கட்சி ஆரம்பித்து, அட்லீஸ்ட் ஒரு சதவீதம் வாக்கு வாங்கி காட்டும் தில் இருக்கிறதா? திராணி இருக்கிறதா? 30 ஆண்டுகளாக மக்கள் இயக்கமாக இருந்து, மிகப்பெரிய அரசியல் கட்சியாக வளர்ந்து, கூட்டணிக் கட்சிகளை மட்டும் நம்பி கொண்டிருக்கிற 75 வருட கட்சி, 50 வருட கட்சி என ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டிருக்கும் இவர்கள் எல்லோரையும் மீறி, இன்று களத்தில் தனியாக நின்று, இந்த இரண்டே வருடத்தில் முதன்மை சக்தியாக வளர்ந்து, 30 சதவீதத்தையும் தாண்டி, இன்று மக்கள் ஆதரவைப் பெற்றிருக்கும் நமக்கு அனுபவம் இல்லையா?
அனுபவம் இல்லை
உங்களுடைய அனுபவம் என்ன என்று சொல்லட்டுமா? கட்சி ஆரம்பித்த அண்ணாவை மறந்தது, கட்சி ஆரம்பித்த எம்ஜிஆர் அவர்களை மறந்தது, கட்சியை வளர்த்த ஜெயலலிதா மேடத்தை மறந்தது. இவர்கள் எல்லோரும் சொன்ன விஷயங்கள் எல்லாவற்றையும் மறந்து விட்டார்கள். இவர்கள் நமக்கு அனுபவம் இல்லை என்கிறார்கள். நமக்கு அனுபவம் இல்லை தான். கொள்ளையடிப்பதில் எல்லாம் எங்களுக்கு அனுபவம் இல்லை தான். அதெல்லாம் எங்களுக்கு சுட்டுப் போட்டாலும் வராது. கொள்கையை பெயருக்கு மட்டும் வைத்துக்கொண்டு, நேரடியாக சரண்டராகுவது, மறைமுகமாக சரண்டராகுவது இதில் எல்லாம் எங்களுக்கு அனுபவம் இல்லை தான். அது சுட்டுப் போட்டாலும் வராது.
மக்களை நேசிக்கும் நல்ல குணம் இருந்தால் போதும். சூப்பரான ஒரு நல்ல ஆட்சி கொடுக்கலாம். நல்ல ஆட்சி கொடுக்க, மெத்தப் படித்த மேதாவிகளாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. காமராஜர் மாதிரியே, எம்ஜிஆர் மாதிரியே, மக்கள் சக்தியின் துணையால், மக்கள் மேல் அக்கறையாக இருக்கக்கூடிய நல்ல அதிகாரிகளின் துணையால், சூப்பரான ஒரு நல்ல ஆட்சி என்னால் கொடுக்க முடியும்.
மக்களின் கனவு
ஆட்சி ஆரம்பித்து நான்கரை ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இப்போது ஒவ்வொரு வீட்டுக் கதவையாக தட்டி, “உங்கள் கனவுகளை சொல்லுங்கள். நாங்கள் அதை நிறைவேற்றிக் காட்டுகிறோம்” என்று சொல்கிறார்கள். ஸ்டாலின் சாருக்கு மக்கள் சார்பாக ஒரு கேள்வி. மக்களுடைய கனவு என்ன என்று உங்களுக்கு தெரியுமா சார்?
அது சரி, அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியாது. அப்புறம் எப்படி அவர்கள் கனவுகளைப் பற்றி உங்களுக்கு தெரியும்? மக்களுடைய கனவு என்ன என்று நான் சொல்லட்டுமா சார்? 2019, 2021, 2024 என மூன்று தேர்தல்களிலும் மக்கள் உங்களுக்கு வாக்களித்ததற்கு காரணம், நீங்கள் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்வீர்கள் என்று நம்பி தான். ஆனால் நீங்கள் மக்களுக்கு கொடுத்த பரிசு, மக்களுக்கு பாதுகாப்பே இல்லாத மக்கள் விரோத ஆட்சி. அந்த மக்கள் விரோத ஆட்சியை அகற்றி விட்டு, அந்த இடத்தில் தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சிப் பீடத்தில் அமர்த்த வேண்டும் என்பதுதான் மக்களின் ஒரே கனவு. மக்கள் விரோத அரசு நிலைக்கக் கூடாது என்பதுதான் மக்களுடைய ஒரே கனவு.
டெல்லிக்கு மட்டுமா “Out of Control”
100 சதவிகிதம் தூய சக்தி டி.வி.கே. ஆட்சி அமைக்கும். அதில் உங்களுடைய கனவுகள், எல்லாம் நிஜமாகும். தமிழ்நாடு எப்போதும் டெல்லிக்கு “Out of Control” என்று ஸ்டாலின் சார் அடிக்கடி சொல்வார். ஸ்டாலின் சார், எதில் எல்லாம் “Out of Control” என்று நான் சொல்லட்டுமா?
முதலில் சட்டம் ஒழுங்கில் “Out of Control” பெண்கள் பாதுகாப்பில் “Out of Control”, இளைஞர்கள் வேலைவாய்ப்பில் “Out of Control”, மொத்தத்தில் அவருடைய ஆட்சியே ஒரு “Out of Control”.
இந்த ஆண்டு ஆரம்பத்தில் சட்டசபையில் பேசும்போது, “மக்கள் எல்லோரும் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதனால் நானும் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்கிறார். மக்கள் சந்தோஷமாக இருப்பதைப் பார்ப்பது கூட ஒரு சந்தோஷம் தான் சார், அதை யாரும் இல்லை என்று சொல்லவில்லை.
வேற லெவல் சார்
உண்மையிலேயே மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்றால், விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள், தூய்மை பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் என பல தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது ஏன்?
உங்கள் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதற்காக நடக்கும் போராட்டமா சார் இது? எனக்குத் தெரிந்து, மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்றால், பொங்கல் வைத்துக் கொண்டாடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உங்கள் ஆட்சியில் தான் போராட்டங்கள் நடத்தி அவர்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள் என்று நினைக்கின்றேன்.
இருக்கும் இடம், பார்க்கும் வேலை, தொழில், தண்ணீர், பஸ்வசதி, ரோடு சரியில்லை, மருத்துவமனை சரியில்லை என தீரவே தீராத பல்வேறு அடிப்படைப் பிரச்சனைகள் இருந்தால், ஆளும் கட்சி என்று ஒன்று எதற்காக இருக்கிறது என்று தானே மக்களுக்கு மனதில் தோன்றும்? ஆட்சிக்கு வருவதற்கு முன்னாடி தான் பொய் பொய்யாக அடித்து விட்டீர்கள். ஆட்சியை விட்டுப் போகும் போதும் கூட பொய் பொய்யாகப் பேசுகிறீர்களே. மாற்றி மாற்றிப் பேசுவதே நீங்கள் வேற லெவல் தான் சார்” என தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரடியாக விமர்சித்தார்.
