சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
இன்று (மார்ச் 30) காலை வியாசர்பாடி சென்ற விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
பின்னர் அங்கிருந்து பெரம்பூர் பணிமனை பகுதிக்கு வந்த விஜய் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில், “எல்லோருக்கும் வணக்கம், ஒரு நல்ல காரியத்தை தொடங்குவதற்கு முன், எங்கிருந்து தொடங்கலாம், நம்மை பிடித்தவர்கள் இருக்கும் இடத்திலிருந்து தொடங்கலாமா என மனதில் நிறைய தோன்றியது. நமக்கு தமிழ்நாடே மிகவும் பிடித்த இடம்தான்.
தமிழ்நாட்டில் எங்கிருந்து வேண்டுமானாலும் ஸ்டார்ட் பண்ணலாம், ஆனால் நம்ம வீட்டு வாசலில் இருந்து ஸ்டார்ட் பன்றதுனு ஒன்னு இருக்குல, நம்மல பெத்த அம்மா இருக்கிற இடத்தில இருந்து அவங்களோட ஆசியோட தொடங்கனும். இதுதான் மைண்டில் இருக்கும்.
அதனால் தான் உங்கள் விஜய் நம்ம பெரம்பூர் தொகுதியில் இருந்து பிரச்சாரத்தை ஸ்டார்ட் பன்னனும்னு முடிவு பன்னேன்.
வடசென்னைக்கு அடையாளமாக பெரம்பூர் தொகுதி இருக்கிறது. லூட்ஸ் அன்னை சர்ச், பிரசன்ன லக்ஷ்மி நரசிம்மர் கோயில், பல புகழ் பெற்ற மசூதிகள் உள்ள இந்த தொகுதிக்கு ஏன் வந்தேன் தெரியுமா?
உன்னை மனசார நேசிக்கிற, உன்னோட மக்கள் இருக்கிற, உழைப்பின் வாசனை இருக்கிற ஒரு பகுதியில் இருந்து உன் பிரச்சாரத்தை ஸ்டார்ட் பன்னு என என் மனசு சொல்லுச்சு… அதனால் தான் இங்கு வந்தேன்.
என் நெஞ்சில் குடியிருக்கும் பெரம்பூர் தொகுதி மக்களே… பெண்கள் பாதுகாப்பு இல்லாத, சட்டம் ஒழுங்கு சரியில்லாத நிலை இருக்கிறது. நமது தமிழ்நாட்டை நாம் பாதுகாத்தே ஆகணும்.
நம் தமிழ்நாட்டை இப்படி ஒரு நிலைமைக்கு கொண்டு வந்தது யார் என்று நான் சொல்லிதான் தெரிய வேண்டுமா… திமுக என்கிற தீய சக்திதான் காரணம். ஒன்றுக்குமே உதவாத ஆட்சியை நடத்திவிட்டு விரைவில் விடை பெறபோகும் ஸ்டாலின் சார்தான் காரணம்.

இந்த 5 வருஷத்துல ஆட்சியை நடத்தினார்களா… வேறு எதையாவது நடத்தினார்களா…
அடிப்படை வசதி கூட இல்லை. நம்ம பொம்பள பிள்ளைங்க எல்லாம் ராத்திரில டாய்லெட் கூட போக முடியல. போய்ட்டு வர கேப்புல என்னென்ன நடக்குமோ என பயந்துகொண்டே இருக்க வேண்டிய நிலை இருக்கு.
ஒரு பாட்டிக்கு கூட பாதுகாப்பு இல்லை. டீ கடையில நிம்மதியா உட்கார்ந்து டீ குடிக்க முடியல. போதைய போட்டுட்டு வந்து எல்லாரையும் வெட்டிட்டு போய்டுறாங்க.
இது என்ன நாடா இல்ல காடா. அரசாங்கம்னு ஒன்னு இருக்கா இல்லையா… காவல்துறையை கையில் வைத்திருக்கும் ஸ்டாலின் சார், அடிப்படை வசதியை கூட ஏற்படுத்தி தர முடியவில்லை எனில் எதற்கு இந்த ஆட்சி, எதற்கு இந்த அதிகாரம்,
அதனால் என்னுடைய அம்மா, அக்கா, தங்கை, தோழர்களே, இளைஞர்களே உங்களை பார்த்து கேட்கிறேன். இந்த ஆட்சியில் பாதுகாப்பு இருக்கிறதா?
திமுக ஆட்சியில குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? நீங்கள் நிம்மதியாக இருந்தீர்களா?
ஸ்டாலின் சாருக்கு மக்களும் அவர்களுடைய பாதுகாப்பும் முக்கியமல்ல.குடும்பத்தோடு சேர்ந்து கொள்ளையடிப்பது தான் முக்கியம்.
நான் முன்னாடியே சொன்ன மாதிரி டாஸ்மாக்கில் மட்டும் 1000 கோடிக்கு மேல் ஊழல் நடந்திருக்கிறது. இது வெளியில தெரிஞ்சது. வெளியில தெரியாமல் எவ்வளவு இருக்கிறதோ தெரியவில்லை. நகராட்சி நிர்வாகத் துறையிலும் 1000 கோடிக்கு ஊழல் நடந்திருக்கிறது.
நம்ம பிள்ளைங்க படிச்சிட்டு வேலை தேடி அலையுறாங்க. ஆனால் லஞ்சம் வாங்கிட்டு தகுதியானர்வகளுக்கு வேலை இல்லாம பன்னிருக்காங்க. இதெல்லாம் எவ்வளவு பெரிய ஏமாத்து வேலை.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காத ஸ்டாலின் சார் அரசாங்கத்தை தூக்கி வீசி எறிவோமா..
அடுத்து வண்டி வண்டியா வச்சிருக்க பணத்த என்ன செய்வதுனு தெரியாம உங்ககிட்ட கொடுத்து எப்படியாவது ஜெயிச்சிடலாம்னு நினைச்சிட்டு இருப்பாங்க… அந்த பணத்தை வாங்கிக்குங்க… வாங்கிக்கிட்டு அவங்க காதுலேயே விசில ஊதி அனுப்புங்க.
எப்படி ஸ்மார்ட்டா ஏமாற்றி கொள்ளையடிச்சாங்களோ, நாமும் ஸ்மார்ட்டா வேட்டு வைக்கணும். வைப்பீங்க தானே… உங்களுக்கும் நமது ஜென்சி கிட்ஸ்களுக்கும் நான் சொல்லுவது ஒன்னே ஒன்னுதான் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி காலைல பக்காவ ரெடி ஆகிட்டு, பூத்துக்கு போய் விசில் சின்னத்தை அழுத்துங்க…
வெளியூர்ல சென்னைல இருக்கிறவங்க அசால்ட்டா இருந்துறாந்தீங்க. முன்கூட்டியே டிக்கெட் புக் பன்னிடுங்க. இது உங்க தலைமுறைக்கான தேர்தல்.
எவ்வளவு பெரிய வசதியான வாழ்க்கையாக இருந்தாலும் அதையெல்லாம் உதறி தள்ளிவிட்டு உங்களுக்காக வந்திருக்கிறேன். உங்களுக்கு நன்றி கடன் செலுத்த வந்திருக்கிறேன்.
எல்லா வலிகளையும் தாங்கிகிட்டு உங்களுக்காக மட்டுமே வந்திருக்கிறேன். ஒரு நாளும் பொய் சொல்லி உங்களை ஏமாத்த மாட்டேன். 4 முனை போட்டி என எத்தனை உருட்டு உருட்டுனாலும். இங்கு திமுக, தவெக இடையே தான் போட்டி.
மக்கள் விரோத ஆட்சி நடத்துற ஸ்டாலின் சார் வேணுமா, மக்களை விரும்பும் விஜய் வேணுமா… அவ்வளவுதான் இந்த தேர்தலே…
உங்க விஜய்க்கு, உங்க அண்ணனுக்கு, உங்க தம்பிக்கு, உங்க புள்ளைக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க. விசில் சின்னத்துக்கு ஓட்டு போடுங்க…
வேட்பாளர்களும், நானும் வேறு வேறு இல்லை… கான்பிடண்ட்டா இருங்க நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்” என்று தனக்காக வாக்கு சேகரித்தார்.
