நடிகர் அரசியல் தலைவர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சுபாஷ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஆக்ஷன் அட்வென்ச்சர் காமெடி திரைப்படம் என்று கூறப்படும் சிக்மா’ படப்பிடிப்பு முடியும் நிலைக்கு வந்திருக்கிறது.
நான்கு மாதங்கள் திட்டமிடப்பட்டு, 65 நாட்களுக்கான படப்பிடிப்பை நடத்தி 95% படத்தை முடித்து இருக்கிறார் விஜய் சன், ஜேசன்.
வசூல் நாயகன் விஜய்யின் மகன் ஜேசன் இயக்கும் படத்தின் நாயகன், தமிழில் பல சுமாரான படங்களைக் கொடுத்த சந்தீப் கிஷன். நாயகி சில தெலுங்குப் படங்களில் குறிப்பிடத்தக்க கேரக்டர்களில் நடித்த ஃபரியா அப்துல்லா(Faria Abdullah).
இவர்களோடு, ராஜு சுந்தரம், அன்புதாசன், யோக் ஜேபி, சம்பத் ராஜ், மகாலட்சுமி சுதர்சனன், கிரண் கொண்டா, ஆகியோரை கேட்டு நடிக்க வைத்திருக்கிறார் ஜேசன்.
“இயக்குநர் ஜேசன் சஞ்சய் எங்களிடம் சொன்ன கதையை அப்படியே படமாக்கியிருக்கிறார். திரைக்கதையை திட்டமிட்டபடி, சொன்ன நேரத்திற்குள் படமாக்குவது அவரை முழுமையான இயக்குநராக மாற்றியிருக்கிறது. குறிப்பிட்ட காலத்திற்குள்ளும் பட்ஜெட்டிற்குள்ளும் படமாக்குவதுதான் எந்தவொரு தயாரிப்பு நிறுவனத்தின் கனவு.இந்தப் படத்தில் அது நடந்திருக்கிறது லைகா நிறுவனத்தில் ஜேசன் சஞ்சயை இயக்குநராக அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம். அவரது எதிர்காலத்திற்கும் வாழ்த்துகிறோம்” என்கிறது லைகா தரப்பு.
“சிக்மா’ என்ற டைட்டில் பயமில்லாத, சுதந்திரமான, சமூகத்தால் முழுமையாக புரிந்து கொள்ள படாத ஒருவன் தன் இலக்குகளை நோக்கி நகர்வதை இந்தப் படம் பேசும். வேட்டை, கொள்ளை, காமெடி என இந்தப் படம் பரபரப்பான சினிமா அனுபவத்தைக் கொடுக்கும். ஒரு பாடல் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது. அது முடித்த பின்பு, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி விடும்.” என்கிறார் ஜேசன்.
தமிழ், தெலுங்குப் படமாக உருவாகும் ’சிக்மா’ சென்னை, சேலம், தலகோனா மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
காரணம் என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும் … !
த வெ க தலைவர், இளைய தளபதி , 2026 முதல்வர் வேட்பாளர், பாக்ஸ் ஆபீஸ் கில்லி என்றெல்லாம் பெயர் வாங்கிய விஜய்யின் கால்ஷீட் பல பேருக்கு அதிர்ஷ்ட லாட்டரியாக விழுந்திருகிறது.
எனில் அவர் மகன் இயக்குனராக வரும்போது அந்தப் படத்தில் யார் யாரெல்லாமோ இடம் பெற வாய்ப்பு உண்டு . அஜித் , சூர்யா, தனுஷ் , சிம்பு என்று யாரிடம் கால்ஷீட் கேட்டாலும் கிடைக்க வாய்ப்பு உண்டு .
அப்படி இருக்க , லைகா புரடக்ஷன்ஸ் என்ற பின்னணி மட்டுமே இருக்க, சந்தீப் கிஷன் , எளிமையான தெலுங்கு நடிகை இவர்களை வைத்து தனது முதல் படத்தை இயக்குவதன் மூலம் ஜேசன் சஞ்சய் என்ன சொல்ல வருகிறார்?
நல்ல படத்துக்கு பெரிய ஹீரோக்கள் தேவை இல்லை என்றா? கில்லி ! கில்லி!!
— ராஜ திருமகன்
