நோ ..நோ… நோ… அப்படி இல்ல.. அப்படி இல்ல.. மனக் காயம்தான்.
1997 ஆம் ஆண்டு பாரதி கண்ணம்மா படத்தின் மூலம் இயக்குனரான சேரன் 2019 வரை இயக்கியது பதினோரு படங்கள்தான்.
2019 ஆண்டு திருமணம் படத்தை அவர் இயக்கி முடித்த சமயம் விஜய் சேதுபதியை வைத்து அவர் இயக்குவதாக ஒரு படம் தொடங்கப்பட்டது . சேரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் என்பது அப்போது பெரிய பேசு பொருளாக இருந்தது . இன்னொரு ஆட்டோகிராப் வரப் போகிறது என்று எல்லாம் எதிர்பார்க்கப்பட்டது .
தனி அலுவலகம் , திரைக்கதை அமைப்பு என்று பரபரப்பாக வேலைகள் நடந்த சூழலில் திடீரென்று அந்தப் படம் நின்று போனது . பலருக்கும் அது ஒரு அதிர்சசியான செய்தியாகவே இருந்தது.
காரணம் என்னவென்று அப்போது யாரும் சொல்லாத நிலையில், இப்போது ஆட்டோகிராப் படத்தின் மேம்படுத்தப்பட்ட மறுவெளியீட்டையொட்டி சேரன் கொடுத்த பேட்டி ஒன்றில் அதற்கான காரணத்தை சொல்லி இருக்கிறார் சேரன்.
”விஜய் சேதுபதிக்காக நான் எழுதிய கதை ரொம்பவே சிறப்பான ஒன்று. அதை அவர் வேணாம்ன்னு சொன்னதுக்கான காரணம் இன்று வரை எனக்குப் புரியல. அந்தப் படம் இல்லங்கிறப்ப அவருக்கு அது ஒண்ணும் பிரச்னை கிடையாது . ஆனா எனக்கு அது பெரிய ஏமாற்றம்.
என் மன நிலையே பாதிக்கப்பட்டது. அதில் இருந்து நார்மலுக்கு வர ரொம்ப கஷ்டப்பட்டேன்.
ஒரு கதையை யோசிச்சு எழுதி அதை டெவலப் பண்ணி வச்சா, அந்த கஷ்டத்தை உணராத ஒருத்தன் திடீர்ன்னு வேணாம்ன்னு சொல்லிட்டு போறது கஷ்டமா இருக்கு. சினிமாவுல கதையை நேசிச்சு வர்றவங்க ரொம்ப கம்மியா ஆகிட்டாங்க ” என்று சொல்லி இருக்கிறார் .
நமக்கு என்ன தோணுதுன்னா , வேற யாரும் நடிக்க முடியாதுங்கறதுக்கு அது என்ன அன்புள்ள ரஜினிகாந்த் படம் மாதிரி அன்புள்ள விஜய் சேதுபதி என்ற படமா என்ன? அப்படி இருந்தா கூட ஒரு ஜாடையில் விஜய் சேதுபதி போல இருக்கிற வேற ஒருத்தர் கூட நடிக்கலாமே .
அப்படி இருக்க விஜய் சேதுபதி வேண்டாம் என்று சொன்ன அந்த சிறந்த கதையை, சேரன் ஏன் அவர் வேறு எந்த ஹீரோவுக்கும் சொல்லல? இனிமேலாவது சேரன் முயற்சி செய்யட்டும் . அந்த நல்ல கதைப் படம் வரட்டும் .
சேரனின் புதிய ஆட்டோகிராப் , ஒரு கோடி ரூபாய்க்கு ஓ டி டி யில் விலை போயிருக்கிறது என்கிறார்கள் .
ஆக, பழைய வெற்றி படங்களை கொஞ்சம் கூட்டியோ குறைத்தோ தொழில் நுட்ப நகாசு வேலைகள் செய்தால் அதையும் ஓ டி டி க்கு தள்ளி விட்டு காசு பார்க்காமல் போல இருக்கு.
இப்படியும் ஒரு புது வியாபாரம்
- ராஜ திருமகன்
