விஜய் சேதுபதி – நித்யா மேனன் ‘ஜோடிப்பொருத்தம்’ எப்படி?
சமீபகாலமாகவே தமிழில் ‘பேமிலி சினிமா’க்கள் வெற்றி கண்டு வருகின்றன. பொதுப்படையாக இப்படிச் சொல்லும் அளவுக்கு டூரிஸ்ட் பேமிலி, மெட்ராஸ் மேட்னி, குடும்பஸ்தன் படங்களின் வெற்றிகள் அமைந்திருக்கின்றன. அந்த வரிசையில் மேலும் ஒரு படியைத் தொடுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகிபாபு, சரவணன், தீபா சங்கர், செம்பன் வினோத் ஜோஸ், ஜானகி சுரேஷ், ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கிற ‘தலைவன் தலைவி’.
சரி, எப்படி இருக்கிறது இப்படம் தரும் திரையனுபவம்?

ஏன் சண்டை.. எதுக்கு சண்டை..?
கரகாட்டக்காரன் படத்தில் வரும் வாழைப்பழ காமெடி நம் அனைவருக்குமே தெரியும். அதில் செந்திலை அடிக்கும் கவுண்டமணியைப் பார்த்து ‘ஏன் சண்டை.. எதுக்கு சண்டை..’ எனும் தொனியில் காரணம் கேட்பார் கோவை சரளா. கிட்டத்தட்ட அதே தொனியில் பார்வையாளர்களான நாம் கேட்கும் வகையில் ‘தலைவன் தலைவி’யில் விஜய் சேதுபதி – நித்யா மேனன் ஏற்றிருக்கும் ‘ஆகாச வீரன் – பேரரசி’ பாத்திரங்களுக்கு இடையேயான மோதலின் காரணத்தைத் திரைக்கதையில் பொதித்து வைத்திருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.
இப்படத்தின் கதை நாம் இதுவரை பார்க்காத ஒன்று எனச் சொல்லவே முடியாது. ஏனென்றால், எந்நேரமும் எதற்கெடுத்தாலும் சண்டையிட்டுக் கொண்டே இருக்கிற ஒரு இளம் தம்பதியைக் காட்டுகிறது இப்படம்.
வெளித்தோற்றத்தில் ‘ஏன் இப்படிக் காரணமின்றிச் சண்டையிடுகின்றனர்’ என்றே பார்ப்பவர்களுக்குத் தோன்றும். ஆனால், கொஞ்சம் உற்றுக் கவனித்தால் சின்னச் சின்ன விஷயங்கள் அவர்களுக்கு இடையேயான முரண்களை ஊதிப் பெரிதாக்குவது பிடிபடும்.
அப்படி ‘ஆகாச வீரன் – பேரரசி’ ஜோடிகளுக்கு இடையேயான முரண்கள் எப்போது, எப்படி முளைத்தன? அதன் பின்னிருப்பவர்கள் யார்? அவர்கள் ஏன் அதனைச் செய்கின்றனர்?
மெல்ல முருங்கை மரம் ஏறும் வேதாளம் போலப் பிரச்சனை தொடர்ந்து அடுத்தடுத்து முளைத்துக் கொண்டிருக்க, அந்த ஜோடியின் பிணக்கு தீர்ந்ததா என்று சொல்கிறது ‘தலைவன் தலைவி’யின் மீதி.
மதுரை வட்டாரத்தில் இருக்கிற மேலூர், வளநாடு, அங்கிருக்கிற நாயகன் மற்றும் நாயகியின் வீடுகள், நாயகன் குடும்பம் வைத்திருக்கிற பரோட்டா கடை, தூண்டி கருப்பசாமி கோயில் மற்றும் அப்பகுதிகளில் வாழ்கிற சில மனிதர்களைக் காட்டி, அவர்களது பார்வையில் நாயகன் நாயகியின் குடும்பப் பிரச்சனையை விவரித்த வகையில் வித்தியாசப்படுகிறது இப்படம்.

நாயகன் – நாயகி ‘கெமிஸ்ட்ரி’!
’இதுக்கெல்லாம் ரசிகர்கள் ஆரவாரம் செய்வாங்க’ என்று முன்கூட்டியே கணித்து சில காட்சிகளை, ஷாட்களை, வசனங்களை வடிவமைப்பது ஒரு கமர்ஷியல் திரைப்படத்தை ஆக்கும் கதாசிரியரின், இயக்குனரின் சிறப்பம்சம். ’பசங்க’வில் அதனைத் தொலைவில் இருந்து தொட்டாலும், ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’வில் சத்தம் அதிகமாக இருக்குமாறு பார்த்துக் கொண்டார். ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘நம்ம வீட்டுப் பிள்ளை’யில் ‘சென்டிமெண்ட்’ ததும்பியோடச் செய்தார்.
‘தலைவன் தலைவி’யில் ஆக்ஷன், செண்டிமெண்டுக்கு ‘அளவாக’ இடம் தந்துவிட்டு, முழுக்க ‘காமெடியாக’ திரைக்கதை ட்ரீட்மெண்டை அமைத்திருக்கிறார் பாண்டிராஜ். அதற்கான பலனாக, பெரும்பாலான காட்சிகள் ரசிகர்கள் சிரித்து மகிழ்கின்றனர். அதிலும் ‘ரோலிங் டைட்டிலில்’ வரும் சில ஷாட்கள் கண்களில் நீரை வழிந்தோடச் செய்கின்றன. அந்த வகையில், பாண்டிராஜுக்கு ‘ஹேட்ஸ் ஆஃப்’!
இப்படத்தில் இருக்கும் லாஜிக் மீறல்களைத் தேடுவதைவிட, அதனால் விளைந்த ‘தியேட்டர் மொமண்ட்’களை ரசிப்பதே சாலச் சிறந்தது.
அமைதியின் சொரூபமாக இருக்கும் ஒரு தம்பதி, இப்படத்தைக் கண்டபிறகு ‘கூடலுக்கு ஊடல் அவசியமாமே’ என்று சண்டையிடத் தொடங்கும் அளவுக்கு இருக்கிறது இப்படத்தின் வீரியம்.
’யதார்த்தம்’ என்று சொல்ல முடியாவிட்டாலும், ‘சினிமாத்தனம்’ அளவாகத் திரையில் மிளிர்கிற அளவுக்கு ‘தலைவன் தலைவி’யின் காட்சியாக்கத்தை அமைத்திருக்கிறார் இயக்குனர். அதற்கு ஒளிப்பதிவாளர் சுகுமார், படத்தொகுப்பாளர் பிரதீப் ராகவ், கலை இயக்குனர் வீரசமர் உள்ளிட்ட பலர் உதவியிருக்கின்றனர்.
படத்தின் டிஐ, விஎஃப்எக்ஸ் குழுவினர் சிறப்பாக உழைத்திருக்கின்றனர். நாயகன் நாயகியின் வடிவத்தில் அமைந்த ’க்ளே அனிமேஷன்’ வருமிடங்கள் குழந்தைகளைக் கவரும் ரகம்.
சந்தோஷ் நாராயணன் இசையில் ‘பொட்டல முட்டாயி’ துள்ளியெழுந்து ஆடச் செய்கிற பாடல். வேறு சில பாடல்கள் கேட்டவுடன் பிடிக்கிற வகையில் ஈர்க்கின்றன.
அப்பாடல்கள் தந்த ஈர்ப்பை ‘ஜஸ்ட் லைக் தட்’ தாண்டும் வகையில் பின்னணி இசையில் பிரமாதப்படுத்தியிருக்கிறார் ச.நா.
திரைக்கதையின் நடுவே பல காட்சிகளில் சில பாத்திரங்கள் எந்நேரமும் ‘கத்திக்கொண்டே’ இருப்பதான உணர்வு சிலருக்கு எழலாம். அது நியாயமும் கூட. விஜய் சேதுபதி, நித்யா மேனன், தீபா மட்டுமல்லாமல் பல பாத்திரங்கள் அதனைச் செய்கின்றன.
கோயிலில் ஆடு முன்னே நிற்கிற பூசாரி பாத்திரமும் கூட, ஒருகட்டத்தில் கோபத்தில் பெருங்குரல் எழுப்புகிறது.
’ஓ மதுரக்காரய்ங்கன்னா இப்படித்தான் இருப்பாய்ங்களோ’ என்று பிற வட்டார ரசிகர்கள் சமாதானம் ஆகும் அளவுக்கு, மதுரைக்காரர்கள் ‘டென்ஷன்’ ஆகும் அளவுக்கு இருக்கிற அந்த சித்தரிப்பு. அமைதியை விரும்புபவர்களுக்கு அது நிச்சயம் ஆறாவது விரல் தான்.
மற்றபடி, ஒரு ‘கமர்ஷியல் காக்டெய்ல்’ ஆக ‘தலைவன் தலைவி’ அமைந்திருப்பதை ஏற்கத்தான் வேண்டும். இதில் இரட்டை அர்த்த வசனங்களோ, ஆபாச சித்தரிப்புகளோ நிச்சயம் இல்லை. அதேநேரத்தில் நாயகன் நாயகி சம்பந்தப்பட்ட நெருக்கமான காட்சிகள் சிறு குழந்தைகளை அழைத்துவரும் பெற்றோருக்குச் சற்றே சங்கடத்தை உருவாக்கலாம். அது மட்டுமே இப்படத்தில் நாம் காணக்கூடிய சில குறைகளில் ஒன்று.
நாயகன் நாயகியாக வரும் விஜய் சேதுபதியும் நித்யா மேனனும் திரையில் உண்மையான ‘கணவன் மனைவி’யாகவே தெரிகின்றனர். அந்த பிரமையை ஏற்படுத்துவது திரையில் முகிழ்த்த அவர்களது ஜோடிப் பொருத்தத்தின் ‘கெமிஸ்ட்ரி’. அது செயற்கை என்று மூளைக்குப் புரிந்தாலும் இதயம் அதனை ஏற்றுக்கொள்ளாத அளவுக்கு இருவரும் சிறப்பான நடிப்பைத் தந்திருக்கின்றனர்.
அதிலும் ‘இரண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்’ பாடல் பின்னணியில் ஒலிக்கிற காட்சியும் அதற்குப் பின் வரும் தீபாவின் ‘கமெண்டும்’ தியேட்டரில் கைத்தட்டலை அள்ளுகின்றன.
‘மாமியார் கொடுமை’ என்பதனை ‘மிகை’யாக இல்லாமல் யதார்த்தமாக வெளிப்படுத்திய வகையில் ஈர்க்கிறார் தீபா சங்கர். அவரது கணவனாக வரும் சரவணனுக்கு அந்த அளவுக்கு ‘ஸ்கோப்’ இல்லை. ஆனாலும், அளவெடுத்து தைத்த சட்டையாக அவரது ‘பெர்பார்மன்ஸ்’ இருக்கிறது.
அவர்களது இரண்டாவது மகனாக, அவரது ஜோடியாக வருபவர்கள் சில ஷாட்களே வந்தாலும் ஈர்க்கின்றனர்.
நித்யாவின் பெற்றோராக வரும் செம்பன் வினோத் ஜோஸ் – ஜானகி சுரேஷ் ஜோடி நல்ல தேர்வு. என்ன, டப்பிங்கில் அவர்கள் காட்டியிருக்கும் நிதானம் கொஞ்சம் ‘ஜெர்க்’ அடிக்கிறது.
ஆர்.கே.சுரேஷ் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்.
வினோத் சாகர் – ரோஷினி ஜோடிக்கு இப்படத்தில் பெரிதாக ‘விவரணைகள்’ இல்லை. ஆனால், அதனை ரசிகர்கள் யூகிக்கட்டும் என்று விட்டிருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.
கோயிலில் கருப்புவிடம் உத்தரவு கேட்க வந்தவராக வரும் யோகிபாபு, படத்தின் முதல் ஷாட்டில் முகம் காட்டுவதோடு இறுதி ஷாட்டிலும் தோன்றியிருக்கிறார். இடையிடையே அவர் அடிக்கிற ‘காமெடி’ பஞ்ச்கள் நம்மை வயிறு வலிக்கச் சிரிக்க வைக்கின்றன.
இவர்கள் தவிர்த்து காளி வெங்கட், மைனா நந்தினி, அருள்தாஸ், முத்துக்குமார், செண்ட்ராயன், பாபா பாஸ்கர் என்று பெரும் நட்சத்திரப் பட்டாளமே இதில் உண்டு.
அனைவருக்கும் திருப்தி தருகிற வகையில் அவர்களைத் திரையில் காட்டியிருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். ஐந்தாறு பாத்திரங்கள் வருகிற படங்களிலேயே அதனைச் சாதிக்க முடியாத சூழல் நிலவுகிறபோது, ’தலைவன் தலைவி’க்கான பாண்டிராஜின் அர்ப்பணிப்பும் நேசிப்பும் அதனைச் செயல்படுத்தியிருக்கிறது என்பதே சரி.
புதிதாகத் திரையனுபவத்தைத் தருகிறது என்று ‘தலைவன் தலைவி’யைப் பார்த்துவிட்டு எவராலும் சொல்ல இயலாது. அதேநேரத்தில், இது இரண்டரை மணி நேரம் பொழுதுபோக்கினைத் தரும் என்று தாராளமாகச் சொல்லலாம். ‘அதுதானே வேணும்’ என்பவர்களுக்கு ஏற்றது பாண்டிராஜின் ‘தலைவன் தலைவி’..