“தனது படங்களுக்கு கதை திரைக்கதை வசனம் யோசிப்பதை விட, தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு சிறப்பாக யோசித்துக் கொண்டு வந்து பேசுவார்” – என்று பார்த்திபனை சொல்லாத வாய் கோலிவுட்டில் எதுவும் கிடையாது. . அதிலும் படத்தின் கதாநாயகிகளைப் பற்றிப் பேசுவது என்றால் அவருக்கு பலப்பல ‘புதிய பாதை’கள் எல்லாம் புலப்படும்.
”பொதுவாக இரவில் கரண்ட் கட் ஆகி விட்டால் டியூப் லைட் எரியாது . அந்த இடமே இருண்டு விடும் . ஆனால் அதுவே தமன்னா உட்கார்ந்து இருந்தால் இருட்டு இருக்காது . தமன்னாவே டியூப் லைட்டாக மாறி அந்த இடத்துக்கு வெளிச்சம் கொடுப்பார் ” என்ற ரீதியில் அவர் பேசியது பிரசித்தம். இது மாதிரி நிறைய சொல்லலாம்.
ஆனானப்பட்ட வைரமுத்துவே இப்படிப் பேசினால் தான் நமக்கும் மரியாதை என்று யோசித்தோ என்னவோ ஒரு நிகழ்ச்சியில் , ” நாம் குதிரை ஏறி சவாரி செய்தால் நமக்கு சிலிர்ப்பு ஏற்படும் ; ஆனால் ராய் லட்சுமி சவாரி செய்த போது குதிரையே சிலிர்த்தது” என்றார் .
இப்போது இந்த வரிசையில் புதிதாக சேர்ந்திருக்கிறார் விஜய் சேதுபதி
இயக்குநர் வெற்றிமாறன் மேற்பார்வையில், கவின், ஆண்ட்ரியா ஜெரேமியா, ருஹானி சர்மா நடிப்பில், அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில் திரைக்கு வரவிருக்கும் மாஸ்க். படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசிய விஜய் சேதுபதி , “சின்ன வயசுல பீச்ல சிலைகளைப் பார்த்தேன். அப்புறம் ஆண்ட்ரியாவைப் பார்த்தேன் . சிலைகள் கூட பொலிவு குறைந்து போனது . ஆனால் ஆண்ட்ரியா இன்னும் சிலை போலவே இருக்கிறார்.
யார்றா இந்தப் பொண்ணு? அப்பவும் பாத்து இருக்கேன் . இப்பவும் அப்படியே பாக்குறேன். நிஜமாகவே அதே அழகு.
வீட்ல போய் நீங்க பெட்ல உட்காருவீங்களா? இல்ல ஃபிரிட்ஜில உட்காருவீங்களா?”
-என்று பேசியதை மட்டும் பார்த்திபன் கேட்டு இருந்தால் அப்படியே துடித்துப் போய் விடுவார்
அண்மையில் சில தோல்விப் படங்களைக் கொடுத்த கவின் தனது குருநாதர் இயக்குனர் நெல்சனின் உதவியோடு இந்தப் படத்தில் வெற்றி பெற திட்டமிட்டுள்ளார் .
படத்தின் முதன்மைத் தயாரிப்பாளர் ஆண்ட்ரியாவேதான் . நான் தயாரிக்க விரும்பும் கதை என்று இந்த ஸ்கிரிப்ட்டை வெற்றி மாறனுக்கு அனுப்பி ஓகே வாங்கி இருக்கிறார் .
ஆனால் இதில், ”கொடுமை சரவணா “..என்னவென்றால் படத்தின் ஆண்ட்ரியா கத்தியை எடுத்து பலரின் கையை வெட்டி ஜெயிலில் பந்தாவாக வலம் வரும் வில்லியாக நடித்துள்ளார்.
சொந்தக் காசைப் போட்டு ஆண்ட்ரியாவை வைத்துப் படமெடுப்பவர்களே ஆண்ட்ரியாவை அழகியாக , பாடகியாக , கனவுக் கன்னியாகக் காட்ட இன்னும் துடிக்கும் வேளையில், சொந்தக் காசில் எடுக்கும் படத்தில் அவர் வில்லியாக நடித்திருக்கிறார்.
பின்னே ? படம் ஓடுவதுதானே முக்கியம்.
— ராஜ திருமகன்
