பனையூர் அலுவலகத்தில் தேவருக்கு விஜய் மரியாதை!

Published On:

| By Kavi

பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் முத்துராமலிங்க தேவர் புகைப்படத்தை வைத்து அக்கட்சித் தலைவர் விஜய் மரியாதை செலுத்தியுள்ளார்

முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா இன்று (அக்டோபர் 30) அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

ADVERTISEMENT

துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன், டிடிவி தினகரன் என பல்வேறு கட்சி தலைவர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் அக்கட்சி நிர்வாகிகள் இன்று மரியாதை செலுத்தினர்.

ADVERTISEMENT

இந்தசூழலில் அக்கட்சித் தலைவர் விஜய் அவரது பனையூர் அலுவலகத்தில் முத்துராமலிங்க தேவர் புகைப்படத்தை வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‘விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர், ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகத் தமது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர், அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.

ADVERTISEMENT

சமூக ஒற்றுமை, மத நல்லிணக்கத்திற்காகத் தன்னை அர்ப்பணித்த அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் மற்றும் குரு பூஜை தினத்தில், எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

கரூர் சம்பவத்தை தொடர்ந்து அக்கட்சி தலைவர்கள் யாரும் கடந்த ஒரு மாதமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவில்லை. புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் தலைமறைவாக இருந்தனர்.

இந்தநிலையில் நேற்று தவெக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அப்போது நவம்பர் 5ஆம் தேதி தவெக சிறப்பு பொதுக்குழுவை கூட்ட முடிவெடுக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தின் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மீண்டும் பொதுவெளிக்கு வந்துள்ளது கவனம் பெற்றுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share