நடிகர் விஜய் நேற்று (செப்டம்பர் 20) நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மக்களை சந்தித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் ஆளும் திமுக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இந்நிலையில் தமிழகத்தில் அண்ணாமலை , ஆர்.என்.ரவி இடத்தை நிரப்ப நடிகர் விஜய் துடிக்கிறார் என ஆளூர் ஷாநவாஸ் குற்றம் சாட்டி உள்ளார்.
இது குறித்து இன்று (செப்டம்பர் 21) நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், அரசு நிறைவேற்றாத மக்களின் தேவையை புதிய கட்சியாக வந்து விஜய் பேசினால் அது மக்கள் நலன் சார்ந்தது. ஏற்கனவே மக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் மக்கள் பிரதிநிதிகளாகிய நாங்கள் அரசிடம் முறையிட்டபின், அரசு ஏற்றுக்கொண்டு நிதி ஒதுக்கீடு செய்து நிறைவேற்றப்பட்ட, நிறைவேற்றப்படுகிற திட்டங்களை எல்லாம் செய்யவே இல்லை என்று சொல்வதன் பின்னணி என்ன? அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த நினைக்கிறார் விஜய். இப்படி பொய் பேசுவதன் மூலம் விஜய் சாதிக்க நினைப்பது என்ன?
உண்மையில் அந்த மண்ணிற்கு என்ன வேண்டுமோ அதை சொல்லுங்கள். நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனை 40 ஆண்டுகளாக பழுதடைந்து இருந்த நிலையில் தற்போதைய அரசு பழைய கட்டிடங்களை இடித்து விட்டு 5 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது. கட்டுமான பணி காரணமாக வேறு ஒரு கட்டிடத்தில் தற்போது அந்த மருத்துவமனை இயங்கி வருகிறது. அங்கும் மருத்துவ பணியாளர்கள் உள்ளனர். இதுவெல்லாம் தெரியாமல் விஜய் பேசுகிறார்.
ஒட்டுமொத்த நாகப்பட்டினம் மாவட்டத்திற்கும் மருத்துவர்கள் பற்றாக்குறை என்பது நீண்ட கால பிரச்சனை. அங்கு வந்து பணியாற்ற மருத்துவர்கள் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. அந்த நிலையில் தற்போதைய அரசு முடிந்தவரை பணியாளர்களை நிரப்பி வருகிறது. கோட்டைவாசல் பகுதியில் உள்ள பாலம் பழுதடைந்து விட்டது என்று குற்றம் சாட்டுகிறார் விஜய். கோட்டைவாசல் பாலம் பற்றி ஆய்வு செய்து அந்த பாலம் தரமாக உள்ளது. இன்னும் பல ஆண்டுகள் தாங்கும் என்று ஆய்வில் முடிவு வந்துள்ளது. பல ஆண்டுகள் தாங்கும் நிலையில் இருக்கும் வலிமை பொருந்திய பாலத்தை யாராவது இடிப்பார்களா? அரசிடம் கஜானாவில் பணம் நிரம்பி உள்ளதா என ஷாநவாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் விஜய்க்கு உண்மையைச் சொல்லி அரசியல் செய்ய ஏதும் இல்லாததால் அவதூறு அரசியலை, பொய் அரசியலை கையில் எடுத்திருக்கிறார். அது நீடிக்காது.. நிலைக்காது விஜய் நாகரீக அரசியல் செய்யட்டும். உண்மையிலேயே மக்களுக்கு தேவையான திட்டங்களை பேசட்டும். அதை விடுத்து அண்ணாமலை இடத்தை நிரப்ப அவர் தேவையில்லை. ஆர்.என்.ரவி இடத்தை நிரப்ப அவர் தேவை இல்லை. தமிழகத்தில் இதுபோல் நிறைய பேரை பார்த்து விட்டோம். அந்த இடத்தை பிடிப்பதற்கு விஜய் ஏன் துடியாய் துடிக்கிறார் என்பதுதான் நம்முடைய கேள்வி என்று தெரிவித்துள்ளார்.