ஆர்.எஸ்.எஸ்-ன் பி டீம்தான் விஜய்.. ஏன் தெரியுமா? விவரிக்கும் திருச்சி கிழக்கு திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ்- வீடியோ பேட்டி

Published On:

| By Mathi

Inigo Interview

திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதியிலும் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஆர்.எஸ்.ஸ். இயக்கத்தின் பி டீம்மாக, சிறுபான்மையினர் வாக்குகளைப் பிரிப்பதற்காக களமிறக்கப்பட்டுள்ளார் என திருச்சி கிழக்கு தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ.வும் திமுக வேட்பாளருமான இனிகோ இருதயராஜ் விமர்சித்துள்ளார்.

நமது மின்னம்பலம் யூடியூப் சேனலுக்கு இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. அளித்த பேட்டி:

ADVERTISEMENT

கேள்வி: கடந்த முறை திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்று MLA-வாக இருந்தவர், இந்த முறை அதே தொகுதியில் திமுக வேட்பாளராக களம் இறங்கியிருக்கிறார் முனைவர் இனிகோ இருதயராஜ் அவர்கள், அவரோடு பேச இருக்கின்றோம்.

கேள்வி: பரபரப்பா அடுத்த ஃபீல்டுக்கு போக ரெடி ஆயிட்டீங்க.

ADVERTISEMENT

இனிகோ இருதயராஜ்: ஆமா, முதலில மின்னம்பலம் நிர்வாகத்திற்கும், மின்னம்பலம் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிற நேயர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். இந்த வாய்ப்பை மீண்டும் எனக்குத் தந்த தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்களுக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் நான் மிகுந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கேள்வி: மதுரை மேற்கு – விஜய், மதுரை கிழக்கு – விஜய், திருமங்கலம் – விஜய் – இப்படி ஒவ்வொரு தொகுதியிலும் நான் தான் நிக்கிறேன் அப்படின்னு ஓட்டு போடணும்னு மதுரை மாநாட்டில் பேசினார் தமிழக வெற்றிக் கழகத்தினுடைய தலைவர் விஜய்.. இப்போ பெரம்பூர் விஜய், திருச்சி கிழக்கு விஜய்-னு நேரடியாக களம் இறங்குகிறார் உங்க தொகுதியில. இது உங்களுக்கு சவாலா?

ADVERTISEMENT

இனிகோ இருதயராஜ்: அவர் இன்னொன்னு சொன்னதை விட்டுட்டீங்க. ஒவ்வொரு வீட்டுலயும் விஜய், இன்னொரு வீட்டுல லேடிஸா இருந்தா விஜி அப்படின்னு சொன்னாரு. அதான் இன்னொன்னு எங்க பேராசிரியர் அவர்கள் கூட சொன்னாங்க… என்ன சொன்னாங்க? அப்படிலாம் இருந்தா வீடு நாசமாப் போயிரும்னாங்க. சரியா? 2 தொகுதியில நிற்கிறது வந்து எதைக் காட்டுகிறது? நீங்களே சொல்லுங்க, எதைக் காட்டுகிறது?

தோல்வியைத் தழுவப் போகிறார் என்கின்ற மனநிலையில் இருப்பதனால் தானே 2 தொகுதியில நிற்கிறார்? மக்களை நம்பி நிற்கிறோம், மக்கள் தான் எங்க பக்கம் அப்படின்னு சொல்கிற ஒரு தலைவர், துணிவிருந்தால் ஒரு தொகுதியில நிற்கணும்.

கேள்வி: இப்ப அவர் திருச்சி கிழக்கு இந்தத் தொகுதியைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம்னு நீங்க நினைக்கிறீங்க?

இனிகோ இருதயராஜ்: அவர் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று எனக்குத் தெரியாது. ஆனால், ஊடகங்களும் அவர் நினைத்துக் கொண்டிருப்பதாக எழுதப்படுகிற செயல்களும் பார்த்தோம் என்று சொன்னால், அவர் ஒரு கிறிஸ்தவர்; கிறிஸ்தவ வாக்குகளைப் பெறுவதற்காக வந்திருக்கிறார். ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர், அதனால் அந்தச் சமூகத்து மக்கள் இங்கே இருக்கிறார்கள் என்று ஒரு எழுதிக்கொண்டிருக்கிறது – ஊடகங்கள் தான் எழுதிக்கொண்டிருக்கிறது, அவர் வாயால அவர் எதனால இந்தத் தொகுதியைத் தேர்ந்தெடுத்தார் என்று சொல்லல.

ஆனால் இருந்தாலும், எப்படி அவர் நினைத்துக்கொண்டு இந்தத் தொகுதியில் நின்றாலும், இந்தத் தொகுதி மக்கள் சாதாரண மக்கள் அல்ல, படித்தவர்கள். பண்பாடு தெரிந்தவர்கள், அதுவும் குறிப்பாக தமிழ் பண்பாடு தெரிந்தவர்கள் ஒரு குடும்பத்தை எப்படி நிர்வகிக்க வேண்டும் என்கின்ற உணர்வைப் பெற்றவர்கள். தமிழ்ப் பெண்கள் அதிகமாக வாழுகின்ற பகுதி, கல்லூரிகளும் பள்ளிகளும் நிறைந்த பகுதி, ஆன்மீகக் கோயில்களும் தேவாலயங்களும் மசூதிகளும் நிறைய இருக்கிற பகுதி, ஆன்மீக விழாக்கள் அதிகமாக நடைபெறுகிற பகுதி, மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் அமர்ந்திருக்கிற பகுதி. எனவே என் தொகுதியைப் பற்றி எனக்குத் தெரியும். நான் இந்த திருச்சி கிழக்குத் தொகுதியிலே பிறந்தவன். இந்த திருச்சி கிழக்குத் தொகுதியிலே வாழ்ந்தவன். ஒவ்வொரு தெருவாக வலம் வந்தவன். சிறுவயதிலிருந்து இந்தப் பகுதியினுடைய மக்களின் தேவைகளை அறிந்தவன். இங்கு ஏழை எளிய மாணவனாக இருந்து நானும் ஒரு சாதாரணத் தொழிலைச் செய்து நான் படிக்கிற காலத்திலே இங்கு இருக்கக்கூடிய மைக் ஐஸ்கிரீம் என்கின்ற ஒரு கடை சாதாரண ஐஸ்கிரீம் கடை அந்தக்கடையில் பணிபுரிந்து அதிலே வந்த வருமானத்தை வைத்து ஸ்கூல் பீஸ் கட்டி கஷ்டப்பட்டு படித்தவன். அதுவும் பல்வேறு நிலைகளில் இருந்து இன்றைக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறேன், படித்துப் பட்டம் பெற்றவன், PhD பெற்றவன், அதனால் எனக்கு இந்த திருச்சித் தொகுதியைப் பற்றி நன்றாகத் தெரியும்.

விஜய் எந்தக் கணிப்பில் வருகிறார் என்று சொன்னால் நம் ஊடகங்கள் சொல்வது போன்று சமுதாயத்தைப் பற்றி, மதத்தைப் பற்றி இங்கு வருகிறார். நானும் அதே மதத்தைச் சார்ந்தவன் தான், அந்த கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்து அவர் வருகிறார் என்று சொன்னால் 20 வருடகாலமாக கிறிஸ்துவ மக்களுக்காகத் தமிழகத்தில் வாழுகின்ற ஒட்டுமொத்த கிறிஸ்துவ சமுதாயத்திற்காகக் குரல் எழுப்பியவன் நான்.

கேள்வி: ஒரு தலைவர் ஒரு தொகுதியைத் தேர்ந்தெடுக்கிறார் அப்படின்னு சொன்னா அங்க நமக்கு பலம் இருக்கணும், அங்க இருக்கக்கூடிய சிட்டிங் MLA-கிட்ட இருக்கிற குறைபாடு இருக்கணும், இவருக்குப் பலமா இருக்கணும். அந்த மாதிரி ஒரு சூழ்நிலையில தான் அந்தத் தொகுதியைத் தேர்ந்தெடுப்பார். அதுல நின்னா நாம வெற்றி பெறணும் அப்படின்னு. அப்போ இந்த இடத்துல அவர் நினைக்கிறது வெறும் சமுதாய மக்கள் மட்டும் அப்படின்னு நம்ம வந்து ஒதுக்கிட முடியாது. நான் முன்னாடியே சொன்ன மாதிரியே அதே சமுதாய மக்கள் தமிழ்நாட்டுல பல தொகுதிகள்ல இருக்காங்க, ஆனா அதையும் தாண்டி இங்க வர்றாங்க அப்படின்னா இங்க ஏதாவது குறைகள் இருக்கு அப்படிங்கிற மாதிரி ஏதாவது எடுத்துக்கலாமா?

இனிகோ இருதயராஜ்: அவருடைய பார்வையை அவரிடம்தான் கேட்கணும் நீங்க. என்னுடைய பார்வையிலே அவர் இந்த பர்பஸுக்காக வேண்டி வர்றேன்னு சொல்லட்டும், அதுக்கப்புறம் அதுக்கான விளக்கங்களை முழுமையாகத் தருகிறேன். ஆனால் அவருடைய எந்தப் பார்வையில் அவர் வருகிறார், அவர் எந்த நோக்கத்திற்காக வருகிறார் என்பதையெல்லாம் மக்கள் அறிவார்கள். யாருடைய உந்துசக்தியினால் இங்கு வந்து நிற்கச் சொல்லியிருக்கிறார்களோ அதற்காக அவர் வருகிறாரா என்றும் தெரியவில்லை.

கேள்வி: அந்த சந்தேகத்தையும் சொல்லிடுங்க மக்களும் தெரிஞ்சுக்குவாங்க யாரோட உந்துசக்தின்னு.

இனிகோ இருதயராஜ்: நீங்கள் தெளிவாகச் சொன்னால் மக்கள் புரிந்து கொள்வார்கள். அவரைப் பொறுத்தவரை என் மக்கள் நம்புகிறதைப் பொறுத்தவரை அவர் RSS-னுடைய B-Team தான். நீங்க எப்படி வேணா எடுத்துக்கலாம். ஏனென்றால் ஒரு IRS அதிகாரி அவர் வீட்டில ரைடு பண்றாங்க, அதே IRS அதிகாரி இளம் IRS அதிகாரி அவர் அந்த வேலைவாய்ப்பைத் துறந்துவிட்டு அவருடைய மாநிலக் கட்சியிலே அதுவும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கட்சியிலே எப்படி வந்து சேர்ந்திருப்பார்? அவருடைய மாத சம்பளம் எவ்வளவு? 10, 12 வருடங்களாக அவரோடு பணிபுரிந்து கொண்டிருக்கிறாரே அவர் அந்த 12 வருடங்களில் எப்படி அவருடைய குடும்பத்தை ஓட்டியிருப்பார்? ஒரு அதிகாரி எப்படி மாதம் வருகிற சம்பளத்தை வைத்துத்தான் ஓட்டுவார், குடும்பத்தை நடத்த முடியும். ஆனா இவர் கட்சியிலே சேர்ந்து மாதம் அங்கே ஏதாவது சம்பளம் வாங்குறாரா? மக்கள் பணியாற்றுவதற்காகத்தான் வந்திருக்கிறேன் என்று சொல்கிறார். எப்படி அவர் குடும்பத்தை கவனிக்கிறார்? அவருடைய குடும்பச் சூழ்நிலை என்ன? அவருடைய குடும்பம் எப்படி வாழ்கிறது என்பதையெல்லாம் மக்கள் அறிவார்கள். அதெல்லாம் கொஞ்சம் சிந்திச்சுப் பாக்கணும்.

கேள்வி: இல்ல சார், ஆனா நீங்க இப்ப…

இனிகோ இருதயராஜ்: இல்ல, நான் ஒன்னே ஒன்னு சொல்றேன் அப்புறம். நீங்க நல்ல மக்கள் பார்வையில பாருங்க. ஒரு கட்சிய ஆரம்பிக்கிறேன்னு சொன்ன உடனே CRPF போலீஸ் குடுக்குறாங்க. இன்னொன்னு என்னன்னா, அவர் என்னமோ சிபிஐ ஆபீஸ்ல போய் சிபிஐ ஆபீசரை இவர் என்கொயரி பண்ண மாதிரி, சிபிஐ ஆபீஸ்ல இருந்து வெளியே வரப்ப, கார்ல ஏறி நின்னுட்டு கையாட்டிட்டு சிபிஐ ஆபீசருக்கும் கையாட்டிட்டு வர்றதுன்னா, இங்க ஒரு போலீஸ் ஸ்டேஷன்ல என்கொயரி கூப்பிட்டா, அவர் வெளிய வரப்ப கையை ஆட்டிட்டு வந்தா போலீஸ்காரன் விடுவானா? கொஞ்சம் யோசிச்சுப் பாக்கணும். அப்ப அவர் ஏதோ மாமியார் வீட்டுக்கு போயிட்டு வர்ற மாதிரி கையாட்டிட்டு வந்தாருன்னா, என்ன நினைக்கிறீங்க? அப்ப என்ன டீம்னு நினைக்கச் சொல்லுது? யாருடைய உந்து சக்தின்னு உங்களுக்குத் தெரியாதா? இப்ப ஏன் வந்து சென்ட்ரல் கவர்ன்மென்ட் டேக் ஓவர் பண்ணி அங்க டெல்லிக்கு என்கொயரி கூப்பிடுறாங்க? என்ன காரணம்?

கேள்வி: அப்ப ஆர்எஸ்எஸ்-ஓட பி டீம் தான் அவரு அப்படின்னா, இந்த ஆர்எஸ்எஸ்-ஓட பி டீமுக்காகவா உங்க கூட்டணியில இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சி எம்.பி-யும் சரி, டேட்டா அனலிஸ்ட்-ம் சரி பேசுனது? ஒரு குறிப்பிட்ட காங்கிரஸ்காரர்கள் துடிச்சாங்க…

இனிகோ இருதயராஜ்: எல்லா இடங்களிலும் ஒன்னு ரெண்டு பேர் அவர்களுடைய கருத்துக்களைப் பரிமாறுவது பத்தி நான் குறிப்பிட்டுப் பேசவில்லை. முடிவு என்ன ஆகிவிட்டது? அவர்களுடைய கட்சித் தலைமை என்ன ஆகிவிட்டது? அதெல்லாம் கட்சித் தலைமை என்ன முடிவெடுத்தது? இன்னொன்னு, அதனால கட்சித் தலைமை என்ன முடிவெடுக்கிறதுதான் முக்கியமே ஒழிய, கட்சியில ஒரு குறிப்பிட்ட பொறுப்பு போட்டதற்காக அவர்கள் பேசுவது கருத்துக்கள் எல்லாம் கட்சியினுடைய கருத்துக்களாக எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்பதுதானே முடிவினுடைய நிலைமை? அதனால அதைப் பற்றி நம்ம தெளிவா உள்ள போக வேண்டாம். இன்னைக்கு காங்கிரஸ் கட்சி எங்களோடு கூட்டணியிலே பல வருடகாலமாக இருந்து கொண்டிருக்கிறது. மனம் ஒத்து தான் எங்களோடு இருந்து பல்வேறு அவர்களுடைய கருத்துக்களையும் எங்களுடைய மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் எவ்வாறு அரவணைத்துச் செல்கிறார்? குடும்பத்துல இருக்க நாலு பேர அரவணைச்சுச் செல்றதே குடும்பம் எவ்ளோ கஷ்டப்படுறாங்க. இங்க 23 கட்சிகளை அரவணைத்து அவர்களுடைய திருப்தியையும் பார்த்து ஒவ்வொருத்தரையும் மனத்திருப்தியோடு அவர்களுக்கு வேண்டப்பட்ட எல்லா செயல்களையும் செய்கிறது எவ்வளவு ஒரு தாயுள்ளத்தோடு எங்களுடைய தமிழ்நாடு முதலமைச்சர் செய்திருக்கிறார்? அத நீங்க பாராட்டலையே!

கூப்பிட்டீங்களே! முதல் மாநாட்டுலயே நாங்க கூட்டணி வரலாமல்லவா அப்படி எல்லாம் பேசுனீங்களே, என்ன ஆச்சு? வந்தார்களா? உங்களை நம்பவில்லை இல்ல? உங்களை நம்பவில்லை இல்ல! ஒரே ஒரு கட்சியாவது, சின்ன ஒரு லெட்டர் பேட் கட்சியாவது உங்களை பார்த்து வந்தாங்களா? இல்லை. ஏன்னா, எல்லோரும் புரிந்து கொண்டது என்னவென்றால், நீங்கள் கிறிஸ்தவ வாக்குகளையும், இஸ்லாமிய வாக்குகளையும் பிரிப்பதற்காக வருகை தந்திருக்கிறீர்கள். ஆர்எஸ்எஸ்-ஆல் அனுப்பப்பட்ட பி டீம் அப்படிங்கிறதுதான் என்னுடைய குற்றச்சாட்டு. ஏனென்றால் எதற்காக ஜோசப் விஜய் என்று சொன்ன ஹெச். ராஜா அவர்கள் சொன்னபோது நீங்கள் என்ன பண்ணீங்க? அது எப்படி ஜோசப் விஜய்ன்னு சொல்லலாம் அப்படின்னு கத்திய அதே வாய், இன்னைக்கு வேட்பாளரை அனௌன்ஸ் பண்றப்ப என்ன சொல்றாரு? சி. ஜோசப் விஜய், ஜோசப் விஜய் அப்படின்னு ரெண்டு தடவை அழுத்தித் திருத்தமா…

கேள்வி: அவர் மறுப்பு தெரிவிச்சாரே ஹெச். ராஜா சொல்லும்போது.

இனிகோ இருதயராஜ்: அவருடைய கட்சித் தோழர்கள் தெரிவிச்சாங்க.

கேள்வி: அவர் ஒன்னும் சொல்லலையே. அவர் பேர் என்னவோ அதைத்தான் இன்னவரைக்கும் இருக்கிறார். கையெழுத்து போடுறதே ஜோசப் விஜய்ன்னு தானே போடுறாரு?

இனிகோ இருதயராஜ்: இப்ப மட்டும் என்ன சொல்றீங்க? இப்ப என்ட கேள்வி கேட்டீங்களே, என்ன சொன்னீங்க? அங்க ஒன்று காங்கிரஸ்ல உள்ள ஒருத்தர் கேக்குறாரு, அவர் ஒருத்தர் கேக்குறாருன்னு சொன்னீங்கள்ள? அப்ப அதே மாதிரிதான் அங்க, அதே தளத்துல இருந்து தவாக தளத்துல இருந்து ஜோசப் விஜய் என்று சொல்லி எங்களை குறுகிய வட்டத்துக்குள்ள கொண்டு வரப் பார்க்கிறாங்க அப்படின்னு சொன்னவங்க இருக்காங்க.

கேள்வி: இல்ல உள்ள இருக்கக்கூடிய சாதாரணத் தொண்டர்களுக்கும் ஒரு குழுத் தலைவருக்கும் வித்தியாசம் இருக்குல்ல?

இனிகோ இருதயராஜ்: இது மட்டும் என்ன அங்க தொண்டர்களா அவங்க? பொறுப்புல இருந்தவங்கதானே பேசுனாங்க? சரியா? அதனால அந்த கருத்து அப்படி நீங்க கேட்டீங்கன்னா, இதையும் நீங்க அதை ஏற்றுக் கொள்ளணும்.

கேள்வி: சரி. சரி, நீங்க சொன்னீங்களே கிறிஸ்தவ வாக்குகள், அந்த வாக்குகளை பிரிப்பதற்காக ஆர்எஸ்எஸ்-ன் பி டீமாக வரப்ப அனுப்பப்பட்டிருக்கிறார் விஜய் அப்படின்னு சொன்னீங்க. இப்போ இவ்வளவு நாளா சிறுபான்மைப் பாதுகாவலரா திமுகதான் இருந்துகிட்டு இருக்கு. எந்த அடிப்படையில விஜய் சிறுபான்மை வாக்குகளைப் பிரிப்பார்னு நம்ம சொல்றோம்? இப்ப வந்த விஜய நம்பி சிறுபான்மை மக்கள் போயிடுவாங்களா?

இனிகோ இருதயராஜ்: எப்படிப் போவாங்க?

கேள்வி: நீங்கதானே சொன்னீங்க பிரிக்க அனுப்புறாங்க அப்படின்னு…

இனிகோ இருதயராஜ்: பிரிக்கிறதுக்காக வேண்டி அனுப்பப்பட்டவர்தான் சொன்னேனே ஒழிய எங்களுடைய சிறுபான்மை…

கேள்வி: இல்ல நம்பிக்கையிருந்து அனுப்பப்பட்டிருக்கிறார்னா, அவர் பிரிப்பார்ங்கற ஒரு நம்பிக்கையில அனுப்பப்பட்டிருக்கிறார். அவர் பிரிப்பாரு.

இனிகோ இருதயராஜ்: பிரிப்பார்னு ஏன் சொல்றீங்க?

கேள்வி: நீங்கதானே சொன்னீங்க.

இனிகோ இருதயராஜ்: பிரிப்பார்ங்கிற ஒரு நம்பிக்கையில அவங்க ஆர்எஸ்எஸ்-ஆல அனுப்பப்பட்ட பி டீம் தான் சொல்லப்பட்டிருக்கப்பட்டதே ஒழிய, அவர் பிரிப்பார்னு எப்ப சொன்னேன்? சொல்லலையே. ஏன் அப்படின்னா…

சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்கக்கூடிய காலங்காலமாக என் பிணத்தின் மீது தாண்டித்தான் என்னுடைய சிறுபான்மை மக்களைத் தொடணும்னு சொன்னவர் யாரு? முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். நல்லா மறந்துட வேண்டாம். இந்த வார்த்தையை யாராச்சும் சொல்லுவாங்களா? எந்த தலைவராச்சும் சொல்லுவாங்களா? என்னைய அடிச்சுட்டு தாண்டா அடுத்தது என் சிறுபான்மை மக்களைக் கை வைக்கணும்னு சொன்னது யாரு? முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்.

நம்மளுடைய முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்கள் எப்படியெல்லாம் காப்பாத்திட்டு வர்றாரு. நல்லா திருப்புரங்குன்றம் ஒரு எக்ஸாம்பிளாகத்தான். இதே மாதிரி சிறுபான்மை மக்களுக்கு ஸ்டேன் சாமி, பாதர் ஸ்டேன் சாமி, மலைவாழ் மக்களுக்காகக் குரல் கொடுத்து பல்வேறு சம்பவங்களிலே மிகப்பெரிய ஒரு போராட்டத்தை நடத்தி, அந்த பாசிச சக்திகளுக்கு எதிராக இருந்தவர். அவருக்காக அவரை யுஏபிஏ (UAPA) கருப்புச் சட்டத்திலே கைது செய்து, ஒரு குடிக்கத் தண்ணி கூடக் கொடுக்காம, அவருடைய பார்கின்சன் வியாதியால பாதிக்கப்பட்டவர். தண்ணி குடிக்கிறப்ப கையில பாதி கிளாஸ் தண்ணி ஆட்டி பாதி கிளாஸைக் கீழே ஊத்திடுறாரு. அதனால பக்கத்துல இருந்த ஒரு கைதி ஒரு ஸ்ட்ரா (straw) எடுத்துக்கொடுத்தான். அந்த ஒரு காலத்தையும் அவன் அந்த கைதிக்கும் ஸ்ட்ரா கிடையாது, உனக்கும் ஸ்ட்ரா கிடையாதுன்னு சொல்லி இன்னைக்கு அவருடைய உயிர் பிரிந்ததே, யாரு? ஸ்டேன் சாமி. அவர் இறந்துவிட்டார். அவருடைய அஸ்தி வந்துச்சு.

அவரைக் கைது செய்தப்ப இந்தியாவிலேயே முதல் கண்டனக் குரல் எழுப்பியவர் நம்முடைய மாண்புமிகு தமிழகத்தினுடைய முதலமைச்சர். முதலமைச்சர் என்கின்ற பதவியிலிருந்தப்ப. அது மட்டும் இல்ல, அவருடைய அஸ்தியைக் கொடுத்தாங்கங்க. பாடி கேட்டோம். எங்களுடைய மத முறைப்படி நாங்க பாடியைப் புதைப்போம் அப்படின்னு கேட்டோம். என்ன பண்ணாங்க? அப்படிலாம் முடியாது, இந்த கருப்புச் சட்டத்துல கைது பண்ண பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துல கைது பண்ணா, அதை நாங்க எரிச்சு நாங்க அஸ்தியாதான் தருவோம்னு சொன்னாங்க. அஸ்தியா தருவாங்க. அந்த அஸ்தி நம்முடைய லயோலா கல்லூரியிலே வரவழைக்கப்பட்டிருந்த பொழுது, அங்க எல்லாரும் மரியாதை செலுத்துவதற்காக அந்த அஸ்தி இந்தியா முழுவதும் போச்சு. லயோலா கல்லூரியில வைக்கப்பட்டிருக்குன்னு நான்தான் முதலமைச்சர் அவர்கிட்ட சொன்ன உடனே, உடனே காலையிலேயே நேரா கிளம்பி வந்து அஸ்திக்கு மரியாதை செலுத்தியவர் யாரு? நம்முடைய மாண்புமிகு தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்கள்.

அப்போ இவர் கட்சி ஆரம்பிச்சிட்டாரு. ரெண்டு வருஷம் ஆச்சு கட்சி ஆரம்பிச்சு. ஒரே ஒரு கண்டன அறிக்கை? ஏன்? கிறிஸ்மஸ் விழா 2025-ல என்ன நடந்துச்சு? ஏங்க, கிறிஸ்மஸ் விழாவுக்குக் கிறிஸ்மஸ் தாத்தா தொப்பி வித்தாங்கறதுக்கெல்லாம் அடிச்சு நொறுக்குன வட மாநிலங்கள்ல நடந்துச்சே. ஒவ்வொரு மாநில கிறிஸ்மஸ் விழாவை உலகம் முழுவதும் ஆட்கள்ல மிகப்பெரிய டெக்கரேட் பண்ணி ஒரு மிகப்பெரிய பரபரப்பா வச்சிருப்பாங்க. தேவாலயங்கள்ல கிறிஸ்மஸ் குடில் கட்டுவாங்க. அதெல்லாம் அடிச்சு நொறுக்குனப்ப, இதே கிறிஸ்தவர்னு சொல்றீங்களே, கிறிஸ்தவர்னு… அவர் ஏன் வந்து ஒரே ஒரு கண்டன அறிக்கை கொடுக்கல? அனுப்பப்பட்ட ஆர்எஸ்எஸ் (RSS) வழி வாங்கி இது ஆயிரும்னு சொல்லி அவர் கண்டனக் குரல் எழுப்பல

கேள்வி: சரி, இப்ப இதெல்லாத்தையுமே சிறுபான்மை மக்கள் சீர்தூக்கிப் பார்ப்பாங்க?

இனிகோ இருதயராஜ்: கண்டிப்பா பார்ப்பாங்க. கண்டிப்பா பார்ப்பாங்க. ஏன்னா இன்னைக்குச் சிறுபான்மையினருடைய பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்திருக்கிறார். சும்மா வந்து நாங்க சொல்லல.

கேள்வி: சரி, அதே மாதிரி சார், நீங்க பட்டியல் சொல்றதுக்கு முன்னாடி சிறுபான்மையினர் நலன் அப்படிங்கிற தலைப்புல போன முறை தேர்தல் வாக்குறுதி கொடுத்தீங்க. அதுல பௌத்த மதத்தைத் தழுவிய தலித் மக்களுக்கு ஆதி திராவிடர் பெறுகிற அனைத்து சலுகைகளும் உரிமைகளும் அளிக்கப்பட்டது போல் தலித் கிறிஸ்தவர்களும் ஆதி திராவிடர் பட்டியலில் இடம் பெறுவதற்கும் இது குறித்து நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் அமைந்த ஆணையத்தின் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதற்கும் மத்திய அரசைத் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தும் அப்படின்னு போட்டீங்க. எத்தனை முறை வலியுறுத்தியிருக்கு? இதுக்கு ஏதாவது தீர்வு இருக்கா சார்?

இனிகோ இருதயராஜ்: ஒண்ணு சொல்றேன். 64 வருடகாலமாகத் தலித் கிறிஸ்தவர்களுக்காகப் போராடிக்கொண்டிருக்கிறோம். உச்ச நீதிமன்றத்துல வழக்கு இருக்கு. அது என்னமோ தெரியல, அந்த வழக்கை மட்டும் உச்ச நீதிமன்றம் பார்க்க மாட்டேங்குது. ரொம்ப நெருக்கிக் கொண்டு போனோம்னா உடனே கமிஷன் போட்டு அனுப்பிடுறாங்க. ரங்கநாத் மிஸ்ரா கமிஷனும் என்ன பரிந்துரை கொடுத்திருக்கு? தலித் கிறிஸ்தவர்களுக்கு அவர்கள் மதம் மாறிய ஒரே காரணத்தினால் அவர்களுடைய பொருளாதாரச் சூழ்நிலை எந்தக் காலத்திலும் மாறவில்லை. எனவே, அவர்களுக்கு இந்து தலித்துகளுக்கு என்ன சலுகைகள் வழங்கப்படுகிறதோ அதே சலுகைகள் கிறிஸ்தவ மதத்திற்குத் தழுவிய சலுகைகளும் வழங்கப்பட வேண்டும் என்று ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் எழுதியிருக்கு. இது மாதிரி ஏகப்பட்ட கமிஷன்கள், கிட்டத்தட்ட ஒரு ஏழு எட்டு கமிஷன் பெயர் சொல்லிடுவேன். ஆனா அந்த கமிஷன்கள் எல்லாம் போடப்பட்டு போடப்பட்டு அவங்க எல்லா கமிஷன்களும் ரெகமெண்டேஷன் கொடுத்தாச்சு. ஆனா உச்ச நீதிமன்றம் இன்னைக்கு வரைக்கும் தீர்ப்பு தரல. ஒண்ணு.

நாங்க எத்தனையோ முதலமைச்சர்களிடம் இந்த கோரிக்கையை வச்சிருக்கோம். ஏன்னா சட்டசபையில தீர்மானம் நிறைவேற்றி அதை ஒன்றிய அரசுக்கு வலியுறுத்துவதுதான் ஒரே ஒரு முறை. ஆனா பல்வேறு முதலமைச்சர்களிடம் வைத்த பொழுதும் அதை வந்து பாக்குறோம், பரிசீலிக்கிறோம் என்று சொன்னார்கள். ஆனால் நம்முடைய தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்கள் சட்டப் பேரவையிலே தீர்மானம் நிறைவேற்றி தந்தார். அந்த தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு வலியுறுத்துகின்ற தீர்மானம் மேற்கு வங்கத்திலே நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மம்தா பானர்ஜி அவர்கள் நிறைவேற்றினாங்க. மாயாவதி அவர்கள் உத்தரப்பிரதேசத்தில் இருந்தபோது தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆந்திரப்பிரதேசத்திலே அவர் ரெட்டி அவர் இருந்த பொழுது அவரும் நிறைவேற்றி தந்திருக்கிறார். இந்த தீர்ப்புகள் எப்படி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்ற காப்பிகளை எடுத்து முதலமைச்சர் அவர்களிடம் கொண்டு போய் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தோம். இன்னைக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒட்டுமொத்த… யார் தெரியுமா இது எங்களுக்கு எதிர்ப்பு தெரிவிச்சு பேசினாங்க? அப்ப சட்டமன்றத்திலே நான் இருந்தேன். சட்டப்பேரவையில் அவங்க சட்டப்பேரவை உறுப்பினராக பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் வெளிநடப்பு செய்தாங்க எதிர்ப்பு தெரிவிச்சு. நல்லா தெரிஞ்சுக்கங்க.

கேள்வி: பாஜக அதை எதிர்க்கத்தான் செய்றாங்க. நீங்க அதற்கான முன்னேற்பாடா அதுக்கு அடுத்து என்ன செஞ்சீங்க அப்படின்னு நான் கேட்கிறேன்.

இனிகோ இருதயராஜ்: சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசை வலியுறுத்துவது தான் எங்களுடைய முறை. ஏன்னா இது ஒன்றிய அரசுதான் இதற்கான தீர்வுகளை கொண்டு வர முடியுமே ஒழிய நாங்க மாநில அரசு கொண்டு வர்றதுங்கிறது முறை அல்ல. ஆனாலும் மாநில அரசு பல்வேறு வழிகளிலே நம்முடைய தலித் கிறிஸ்தவர்களுக்கு, இந்து தலித்துகளுக்கு என்ன சலுகைகள் கொடுக்கப்படுகிறதோ அதை கொடுத்திருக்காங்க. இவங்களுடைய கோரிக்கை என்னன்னா 3.5% இல்லன்னா 4.6% உள் இட ஒதுக்கீடு கொடுக்கணும் அப்படிங்கிறது அவர்கள் கேட்டிருக்காங்க. தலித் கிறிஸ்தவர்கள் கேட்டிருக்காங்க ஒன்றிய அரசு… நம்மளுடைய முதலமைச்சர் அவர்கள்ட்ட கொண்டு போய் அதையும் நாங்க கோரிக்கை வச்சிருக்கோம். அவர் என்ன சொன்னார்னா இந்த நம்ம சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து அதற்கான பொருளாதார சமூக சீர்திருத்தம் எடுத்து கொண்டு வருகிற பொழுது நிச்சயமாக அதை வந்து கோர்ட் நிராகரிக்க முடியாது. அதனால நம்ம சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கிறோங்கிறதை முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள் திராவிட மாடல் 2.0-ல நிச்சயமாக அது நிறைவேற்றப்படும் என்று சொல்லி இருக்காங்க. அப்படி எடுக்கிற சமயத்துல அந்த யாரு அவங்களுடைய பொருளாதார சூழ்நிலை மத்ததெல்லாம் ஆய்வுக்கு உட்படுகின்ற பொழுது பேக்வேர்டு கிளாஸ் கமிஷன் வழியாக அதை வந்து நாங்க நிறைவேற்றுகிற பொழுது நிச்சயமாக என்ன யாரும் தடுத்து நிறுத்த முடியாது. ஏற்கனவே வன்னிய கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வேணும் அப்படிங்கிற சூழ்நிலை இருக்கு. அந்ததும் வந்து பேக்வேர்டு கிளாஸ் கமிஷன் தான் நிறுத்தி வச்சிருக்காங்க. என்னன்னா அந்த பொருளாதார சூழ்நிலை வேணும்னு சொல்லி. அதை நாங்க எடுக்கப்போறோம். அதனால அது நிச்சயமாக…

கேள்வி: அது 2.0-ல இத நிறைவேற்றுவீங்க.

இனிகோ இருதயராஜ்: கண்டிப்பா நிறைவேற்றுவோம்.

கேள்வி: சரி. அடுத்து மாநிலத்தில் சிறுபான்மையினர் கல்வி அடிப்படையிலும் பொருளாதார அடிப்படையிலும் பின்தங்கியுள்ள பகுதிகளில் குறிப்பாக சிறுபான்மை சமுதாய பெண்கள் பயனடையும் வகையில் சிறப்பு சலுகைகளுடன் கல்வி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும். இது எந்த வகையில எல்லாம் நமக்கு இப்போ இம்ப்ளிமெண்டேஷன்ல இருக்கு சார், செயல்பாட்டுல இருக்கு?

இனிகோ இருதயராஜ்: நல்லா தெரிஞ்சுக்கங்க. அதாவது அரசு பள்ளிகளிலே காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டது. சரியா? அரசு உதவி பெறுகின்ற சிறுபான்மை பள்ளிகளுக்கும் அதை விரிவுபடுத்த வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரை வலியுறுத்தினேன். நான் தான் வலியுறுத்தினேன், தெரிஞ்சுக்கங்க. உடனே என்ன செய்தார்? விரிவுபடுத்தி தந்தார். இன்னைக்கு கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய எங்களுடைய கல்வி நிறுவனங்கள், சரியா? அது நாங்க போய் சொன்னோம். அந்த கல்வி நிறுவனங்கள்ல மாணவர் சேர்க்கை என்பது குறைவாக இருக்கிறது. காரணம் என்னன்னா அரசு பள்ளிகளில காலை உணவு திட்டம் போடுறாங்க. அதே மாதிரி தமிழ் புதல்வன் திட்டம், அதே மாதிரி புதுமைப்பெண் திட்டம். இந்த திட்டத்தையெல்லாம் அரசு பள்ளிகளுக்கு நீங்க பண்றதுனால எங்களுடைய அரசு சிறுபான்மை பள்ளிகளில் இருக்கக்கூடிய மாணவச் செல்வங்கள் அங்க போறாங்க. அதனால எங்களுடைய பள்ளிகள் மூடப்படுகிற சூழ்நிலை வருதுன்னு சொன்ன உடனே அப்படியான்னு கேட்டுட்டு உடனடியாக அதை நிறைவேற்றி தந்து, எந்த நாங்க குழுவினரோடு எங்களுடைய அருட்சகோதரிகள், பிஷப்மார்கள், அருட்தந்தையர்களோடு நாங்க சேர்ந்து சென்று நாங்க போய் முதலமைச்சர்ட்ட கேட்ட போது… அந்தத் திட்டத்தை இம்ப்ளிமெண்டேஷன் (Implementation) பண்றப்ப எனக்கு போன் பண்றாரு. பண்ணி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், யாரெல்லாம் கோரிக்கை கேட்டாங்களோ அவர்களை அழைத்துக் கொண்டு இந்தத் திட்டம் விரிவாக்கம் பண்ணப்படுகிற இடத்தில கூட்டிட்டு வான்னு சொல்லி, கூட்டிட்டு வர வைச்சு, போய் அவர்களைப் பார்த்து ‘உங்களுக்குத் திட்டம் நிறைவேத்திட்டோம், போதுமாம்மா?’ அப்படின்னு சொல்லி அந்த அருட்சகோதரியைக் கேட்டபோது அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லைங்க. வேற என்ன வேணும்? கல்வி மேம்பாட்டுக்கு உதவி செஞ்சிருக்காங்க.

அதுமட்டுமில்ல, இந்த 1000 ரூபாய் ஸ்கீம் (Scheme) இருக்குல்ல? அந்தப் புதுமைப் பெண்ணும் அந்த மகளிர் உரிமைத் தொகையும்… எல்லாமே விரிவாப்படுத்தியிருக்கோம் கிறிஸ்தவ மக்களுக்கும். கல்வி நிறுவனங்களுக்கும் விரிவாப்படுத்தியிருக்கோம்.

அதைவிட மெயினா இந்தச் சிறுபான்மைப் பள்ளிகள் பாதிக்கப்பட்டது என்னன்னா… ஒவ்வொரு தடவையும் நாங்கதான் சிறுபான்மைப் பள்ளிகள் நடத்துறோம், நாங்கதான் சிறுபான்மைப் பள்ளிகள் நடத்துறோம்னு ஒவ்வொரு வருடமும் போய் உச்ச நீதிமன்றத்திலயும் உயர் நீதிமன்றத்திலயும் போய் வழக்குத் தொடுத்து, அங்க கொடுக்கக்கூடிய டைரக்ஷன்ல (Direction) ‘சிறுபான்மை பெர்மனன்ட் ஸ்டேட்டஸ் சர்டிபிகேட்’ (Permanent Minority Status Certificate) அப்படிக் கொடுப்பாங்க. அதன் வழியாத்தான் இந்த கல்வி உதவித் தொகை, மற்ற உதவித் தொகைகள் எல்லாம் கிடைக்கும். அப்படித்தான் சம்பளமும் கூட அரசு உதவி பெறுகின்ற பள்ளியில் ஆசிரியர்களுக்குக் கிடைக்கும்.

ஆனால், அதுல என்ன பண்ணிட்டாரு? பெர்மனன்ட் மைனாரிட்டி ஸ்டேட்டஸ் சர்டிபிகேட் (Permanent Minority Status Certificate) – இப்ப லயோலா கல்லூரி இருக்கு, ஸ்டெல்லா மேரிஸ் இருக்கு, எங்களோட செயின்ட் ஜோசப் கல்லூரி இருக்கு, ஜமால் முகமது கல்லூரி இருக்கு அப்படின்னா, அவர்கள் இனிமேல் வருடா வருடம் இல்ல மூணு வருடத்திற்கு ஒரு தடவை மைனாரிட்டி ஸ்டேட்டஸ் சர்டிபிகேட் வாங்க வேணாம். ஒரே தடவை, அதுலயும் ஆப்ல (App) லோட் பண்ணி இன்னைக்கு பல எங்களுடைய கல்வி நிறுவனங்கள் எல்லாம் மைனாரிட்டி ஸ்டேட்டஸ் சர்டிபிகேட் வாங்கிருக்காங்க.

அதுமட்டுமல்ல, டெட் எக்ஸாம் (TET Exam) வேண்டாம் அப்படின்னு ஒரு உயர்நீதிமன்றம், அப்புறம் வேண்டும் அப்படின்னு உயர்நீதிமன்றம் – இப்படியே மாத்தி மாத்தி தீர்ப்பு கொடுத்துக்கிட்டே இருந்தாங்க ஒவ்வொரு வழக்குலயும். இன்னைக்கு உச்ச நீதிமன்றத்துல வழக்கு இருக்கு. வழக்கு என்ன பண்ணுச்சு? அரசுப் பள்ளிகளிலே இருக்கக்கூடிய ஆசிரியர்களுக்கு டெட் எக்ஸாம் வேண்டும் அப்படின்னு ஒரு இதை வச்சிருக்காங்க. அரசு உதவி பெறுகின்ற பள்ளி ஆசிரியர்களுக்கு டெட் எக்ஸாம் வேண்டுமா, வேண்டாமாங்கறது உச்ச நீதிமன்ற பெஞ்ச் (Bench) முடிவெடுக்கணும்னு சொல்லிருந்தாங்க.

அப்ப 2019-ல இருந்து அதிமுக ஆட்சிக் காலத்துல இது டெட் எக்ஸாம் வேணும்னு சொல்லிப் போட்ட உத்தரவின்படி என்ன பண்ணிட்டாங்க? ஜி.ஓ. நம்பர் 300-ல (G.O. No. 300) நிறுத்தி வச்சுட்டாங்க. நிறுத்தி வச்சுட்டு எங்களோட ஆசிரியர்கள் மிகுந்த பிரச்சினைக்கு உள்ளானாங்க. சம்பளம் கிடைக்கல. இன்னைக்கு வரைக்கும் பாதிப்பு. இன்னைக்கு எவ்வளவு தெரியுமா ஆசிரியர்கள் கிடைச்சிருக்கு? கிட்டத்தட்ட 3,615 ஆசிரியர்களுக்கு ஆசிரியர் நியமனம் செல்லும் என்று இன்னைக்கு நம்மளுடைய முதலமைச்சர் அவர்கள் தந்திருக்காங்க. டெட் எக்ஸாம் தேவையில்லை, 2024-க்கு அப்புறம்தான் டெட் எக்ஸாம் தேவை, இதுவரைக்கும் டெட் எக்ஸாம் தேவையில்லைன்னு இன்னைக்கு 3,615 ஆசிரியர்களுக்குத் தீர்வு கண்டிருக்கோம். இவ்வாறு இனிகோ இருதயராஜ் தெரிவித்தார்.

Inigo Irudayaraj Interview | விஜய் என்ன கிறிஸ்துவரா? | MKStalin | Vijay | TVK | Trichy East | DMK
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share