தவெக பிரச்சார கூட்டத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், விஜய் சொல்லொண்ணாத் துயரில் ஆழ்ந்திருக்கிறார் என்று அக்கட்சி வழக்கறிஞர் பேட்டி அளித்துள்ளார்.
கரூர் பரப்புரை கூட்டத்தில் 38 பேர் உயிரிழந்த நிலையில், பிரச்சாரத்தை முடித்த கையோடு திருச்சி மற்றும் சென்னை விமான நிலையங்களில் அவரது கருத்தை கேட்டறிய காத்திருந்த செய்தியாளர்களிடம் பேசாமல் தவிர்த்து சென்றார்.
சென்னை விமான நிலையத்துக்கு தனி விமானம் மூலம் வந்த விஜய், அங்கிருந்து தனது கார் மூலம் தீவிர பாதுகாப்புடன் பனையூரில் உள்ள வீட்டுக்கு சென்றார்.
இந்நிலையில் கரூரில் இன்றிரவு தவெக வழக்கறிஞர் அறிவழகன் அளித்த பேட்டியில், ’விஜய் மிகுந்த துயரத்தில் இருக்கிறார். உயிரிழந்த குடும்பத்தினருக்கு தவெக துணை நிற்கிறது. தலைவர் விஜய் தமிழக மக்களை நேசிக்கக்கூடியவர். இந்த துயர சம்பவம் அவரை மிகவும் பாதித்திருக்கிறது.
எங்களிடம் இன்னும் தலைவர் பேசவில்லை. அவர் இந்த துயத்திலிருந்து மீண்டு வரவேண்டும். இதுதொடர்பாக விசாரணை செய்ய வேண்டும்.
செய்தி அறிந்த உடனேயே தனது வருத்தத்தை பதிவு செய்தார் விஜய். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தவெக துணை நிற்கும். காவல்துறை நிபந்தனைகளை எல்லா இடங்களிலும் தவெக பின்பற்றியது. மக்களை சரியான முறையில் சந்தித்துவிட்டுதான் வந்திருக்கிறார்’ என்று கூறினார்.