NDA-வில் விஜய்? பேச்சுவார்த்தை? எடப்பாடி சொன்ன ‘திட்டவட்ட’ பதில் என்ன? பேட்டி முழுமையாக!

Published On:

| By Mathi

NDA Vijay EPS

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா? என்ற கேள்விக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT


இதனைத் தொடர்ந்து மூவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இச்சந்திப்பின் போது எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விரைவில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடக்கும். தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து முடிந்த பிறகு, செய்தியாளர்களை அழைத்து விவரமாக உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.

ஏற்கனவே சொல்லியிருக்கின்றேன், இன்னும் 15 நாள் இருக்கின்றது. எப்போது நாமினேஷன் ஆரம்பம்? வருகின்ற 30-ஆம் தேதிதான் ஆரம்பம். காலம் நிறைய இருக்கின்றது. அதனாலே பொறுமையாக எங்களுடைய கூட்டணிக் கட்சிகளுடைய தலைவர்கள் எல்லாம் ஒன்றிணைந்து, உணர்வுப்பூர்வமாக நாங்கள் நிறுத்தப்படுகின்ற வேட்பாளர்கள் அத்தனை பேரும் வெற்றி பெறக்கூடிய சூழ்நிலையிலே தொகுதிப் பங்கீடு அமையும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

ADVERTISEMENT

இதன் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்கள்:

செய்தியாளர்: பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர் தாக்கப்படுவது குறித்து முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளாரே?

ADVERTISEMENT

எடப்பாடி: அவர் அப்படித்தான் தொடர்ந்து சொல்லிட்டு இருக்கார். இன்றைக்கும் சொல்றார், எப்பொழுது பார்த்தாலும் தேர்தல் வருகின்ற பொழுது இந்த வார்த்தையைத்தான் பயன்படுத்துவார். ஆனால், இந்த இஸ்லாமிய சமுதாய மக்களுக்காக இந்த அரசாங்கம் என்ன செய்தது? அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் இருக்கும் பொழுது பல்வேறு திட்டங்களை ஜெயலலிதா அறிவித்துச் செயல்படுத்தினார்கள்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்தான் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டது. சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பாக விளங்கிய அரசாங்கம் அதிமுக அரசாங்கம். இன்றைக்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கே பாதுகாப்பு இல்லை, அப்படிப்பட்ட நிகழ்வுதான் இப்பொழுது நடந்து கொண்டிருக்கின்றது. இன்றைய முதலமைச்சரைப் பொறுத்தவரைக்கும் சிறுபான்மை மக்களுக்கு திமுகதான் பாதுகாப்பாக இருக்கும் என்ற ஒரு உணர்வைத் தூண்டிவிட்டு, ஒரு தோற்றத்தை வெளிப்படுத்தி அவர்களுடைய வாக்குகளை வாங்குவதற்காகப் பேசுகின்ற பேச்சு.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலே எங்க அணியை விரும்பி வருகின்ற இஸ்லாமியர்களுக்கு நிச்சயமாக வாய்ப்பு வழங்கப்படும்.

செய்தியாளர்: திமுகவின் பலத்தை எப்படி எதிர்கொள்வீர்கள்?

எடப்பாடி: திமுகவுக்கு எங்கே பலம் இருக்கிறது? பலம் இருந்தால் ஏன் அவசர அவசரமாக புதிய புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்? இதுவரை 5 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த அரசாங்கம் மக்களுக்குத் தேவையான திட்டங்களைக் கொடுத்ததா? இல்லையே. இந்த ஒரு 15 நாள்ல புதிய புதிய திட்டத்தை அறிவிக்கிறார், அதற்கு நிதியும் ஒதுக்கீடு இல்லை, ஆனால் அடிக்கல் நாட்டுகிறார். இப்படி மக்களை ஏமாற்றுகின்ற அரசுதான் விடியா திமுக அரசு.

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரைக்கும் அவருடைய கவர்ச்சிகரமான பேச்சு எடுபடாது. ஏற்கனவே 2021 சட்டமன்றப் பொதுத்தேர்தல்ல திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகக் கொடுக்கப்பட்ட அறிவிப்புகள், நான்கில் ஒரு பங்கு அறிவிப்புகளைக் கூட நிறைவேற்றல. மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த பிறகு இன்றைக்கு ஏதேதோ கவர்ச்சிகரமாகப் பேசிட்டு இருக்காங்க, அதெல்லாம் மக்களிடத்திலே எடுபடாது.

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரைக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தையும் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியையும் மக்கள் நம்பப் போவதில்லை. அதிமுக ஆட்சியில் இருக்கும் வரை சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டது. விலைவாசி உயராமல் பார்த்துக்கிட்டோம், மின்சாரக் கட்டணம் ஏறல, சொத்து வரி ஏறல, மக்கள் பாதிக்கல. இன்றைக்கு எல்லாத் துறைகளிலும் ஊழல், ஊழல் இல்லாத துறையே கிடையாது.

அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறியும் கூட இன்னும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசாங்கம் தான் விடியா திமுக அரசாங்கம். இந்த ஆட்சியில பார்ப்பது ஊழல் மட்டும்தான்.

விஜய் தவெகவுடன் பேச்சுவார்த்தையா?

செய்தியாளர்: கூட்டணிக்கு இன்னும் சில கட்சிகள் வர வாய்ப்புள்ளதா?

எடப்பாடி: வருவதற்கு வாய்ப்பு இருக்குது, சூழல் இருக்குது.

செய்தியாளர்: விஜய் கட்சி கூட்டணிக்கு வர வேண்டும் என விரும்புகிறீர்களா?

எடப்பாடி: சார் நான் ஏற்கனவே சொல்லிட்டேன், அதாவது இதுவரை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அல்லது எங்க கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் நீங்கள் குறிப்பிடுகின்ற அந்த கட்சியோடு (விஜய் தவெக) எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.

வேல்முருகன் கருத்து..

செய்தியாளர்: ஆளும் கட்சியின் அதிகார பலத்தை எப்படி எதிர்கொள்வீர்கள்?

எடப்பாடி: இன்றைக்கு கோட் ஆஃப் காண்டக்ட் (Code of Conduct) வந்த பிறகு எல்லாம் தேர்தல் கமிஷன்கிட்ட போய்விடுகிறடுது. நீங்க அதிகாரம்னு சொல்வதே தவறு, அப்படி அதிகாரத்தைச் செலுத்துனா அது ஒரு சர்வாதிகாரம்தான். இன்றைக்கு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் ஆணையம்தான் இதையெல்லாம் மேற்பார்வை செய்யும், ஆட்சி அதிகாரமே அவர்களுக்குக் கிடையாது.

செய்தியாளர்: திமுகவிடம் முன்வைத்த கோரிக்கைகளை அதிமுக ஏற்க முன்வந்தால் அதுபற்றி ஆலோசிப்போம் என பண்ருட்டி வேல்முருகன் கூறியுள்ளாரே?

எடப்பாடி: நான் இன்னும் அந்தச் செய்தியைப் பார்க்கல, அதனால அதுக்குண்டான பதில் என்கிட்ட இல்ல.

செய்தியாளர்: கூட்டணிக்கு வந்தால் ஏற்பீர்களா?

எடப்பாடி: நான்தான் சொல்லிட்டேன், எங்க இயக்கத்தை அணுகுகின்றவர்கள், எங்களுடைய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்ன கொள்கை இருக்கிறதோ அதை ஏற்றுக் கொள்ளக்கூடியவர்கள் வந்தால் நிச்சயமாக அவர்களுக்கு உரிய வாய்ப்பு கிடைப்பதற்கு நாங்கள் முயற்சி செய்வோம். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share