வைஃபை ஆன் செய்ததும், ‘ ஒரு தலைவருக்கு இவ்வளவு தடுமாற்றம் பயம் இருக்கவே கூடாதே’ என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
கரூர் சம்பவத்துக்கு விஜய் ஏற்பட்டிருக்கிற குழப்பத்தை சொல்றீங்களாக்கும்?
ஆமாய்யா.. கரூர் சம்பவத்துக்கு பின்னர் என்னதான் செய்யப் போகிறோம் என்பது தெரியாமல் ரொம்பவே குழப்பத்தில் இருக்கிறாராம் நடிகர் விஜய்.
விஜய் என்னதான் செய்கிறார் என அவருக்கு நெருக்கமானவர்களிடம் நாம் பேசினோம். அவர்கள், “பனையூர் வீட்டில் இருந்து சில நாட்களுக்கு முன்னர் பட்டினப்பாக்கம் வந்த விஜய் வீடியோ வெளியிட்டார். அப்போதிருந்தே பட்டினப்பாக்கத்தில்தான் இருக்கிறார்.
இதுவரை இல்லாததாக,
தமக்கு நெருக்கமான நண்பர்களிடம் போனில் நேரடியாக விஜய்யே பேசினார்.
அப்படி விஜய் பேசும் போது அவங்களில் சில பேர், “வீடியோ ரிலீஸ் செஞ்சுத ஒருவகையில் செட் பேக்குன்னுதான் தெரியுது.. கரூர் சம்பவத்துக்கு ஏன் வருத்தம் கூட தெரிவிக்கலைன்னுதான் கேட்குறாங்க.. ஏன் கரூருக்கு போகலைன்னும் கேள்வி வருது.. அதனால கரூருக்கு கண்டிப்பாக போறதுதான் சரின்னு” சொல்லி இருக்காங்க..
தவெகவின் மாவட்ட நிர்வாகிகள் சிலரிடமும் விஜய் பேசியிருக்கார்.. அவங்க என்ன சொல்லியிருக்காங்கன்னா, “வீடியோ வெளியிட்டது நல்ல விஷயம்தான்.. ஆனா கொஞ்சம் விமர்சனமும் வரத்தான் செய்யுது..
நீங்க கரூருக்கு போய் ஆறுதல் சொன்னா நல்லா இருக்கும்..”னு அழுத்தமா சொல்லி இருக்காங்க.
இதற்கு விஜய், “அப்படி எல்லாம் இல்லையே.. வீடியோவை பல கோடி பேர் பார்த்துருக்காங்க.. மக்கள் மனநிலை அரசுக்கு எதிராகத்தான் இருக்குதுன்னு சொல்றாங்க” என பதில் சொல்லி இருக்கிறார்.
இப்படி விஜய் சீரியசாக பேசிகிட்டு இருக்கும் போதே அவங்க அப்பா எஸ்ஏ சந்திரசேகரும் லைனில் வந்தார்..
அவரும் கூட, “வீடியோ வெளியிட்டது வேற மாதிரி போயிருச்சுப்பா.. இதுக்கு முன்னாடி எப்படி நெல்லையில வெள்ளத்தால பாதிக்கப்பட்டவங்களுக்கு மண்டபத்தில் வைத்து உதவி செஞ்சோமோ அதே மாதிரி கரூரில் செய்யலாம்.. போலீஸ் கிட்ட பெர்மிஷன் கேளுங்க.. அவங்களும் தரத்தான் செய்வாங்க.. வீடியோவுல பேசுனது தெளிவு இல்லாத மாதிரியும் இருக்கு.. மக்களுக்கும் புரியலைன்னு சொல்றாங்க.. அதனால மக்களுக்கு புரியற மாதிரி விளக்கமா இன்னொரு வீடியோவோ அல்லது அறிக்கையோ வெளியிட்டா நல்லா இருக்கும்.. ரொம்ப கவனமா செய்யனும்பா” என அட்வைஸ் செஞ்சாராம்.
ஓஹோ.. விஜய் கரூருக்கு போவது என ‘தெளிவான’ முடிவுக்கு வந்துவிட்டாரா?
அதான் இல்லையாம்.. இப்படி நண்பர்கள், மாவட்ட நிர்வாகிகள் என பலரிடமும் பேசிவிட்டு பட்டினப்பாக்கம் ஆபீசுக்கு, ஆதவ் அர்ஜூனா, ஜான் ஆரோக்கியசாமி, அருண்ராஜ், நிர்மல்குமார், விஷ்ணு ரெட்டி என எல்லோரையும் வரவழைச்சு ரொம்ப நேரம் விஜய் ஆலோசனை நடத்தினாரு…
அப்ப, நண்பர்கள்- கட்சிக்காரங்க சொன்ன விஷயங்களை எல்லாம் விஜய் ஷேர் செஞ்சிருக்கார்.
அந்த ஆலோசனைக் கூட்டத்துல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கருத்துன்னு பல விஷயங்களை முன்வைச்சிருக்காங்க.
ஆதவ் அர்ஜூனாவும் ஜான் ஆரோக்கியசாமியும்.
“நீங்க வீடியோ போட்டது நல்லாவே ரீச் ஆகியிருக்கு.. மக்கள் ஆதரவு நமக்குதான் இருக்குது.. திமுக அரசு மீதுதான் மக்கள் அதிருப்தியாக இருக்காங்க.. மெஜாரிட்டி பீப்பிள் கன்வீன்ஸ் ஆகிட்டாங்க” என சொல்லி இருக்கின்றனர்.
அதேநேரத்தில், “மக்களிடம் நம்ம மீது வருத்தங்கள் இருக்கிறது” என்பதை மற்ற சிலர் வெளிப்படையாக சொல்லாமல் மறைமுகமாகவும் சொல்லி இருக்கின்றனர்.
சரி விஜய் கரூருக்கு போறாரா இல்லையா? இந்த டிஸ்கஷனில் முடிவு செஞ்சுட்டாங்களா.. அதை சொல்லுமய்யா?
இந்த நீண்ட டிஸ்கஷனில், “கரூரில் பாதிக்கப்பட்ட நம்ம கட்சிக்காரங்களுக்கு தமிழக அரசின் நிதி போய் சேர்ந்துருச்சு.. பிரதமர் மோடி நிதியும் கொடுத்துட்டாங்க.. ..
ஆனால் நாமதான் இன்னமும் போய் பார்க்கலை.. நிதியும் தரலை.. கரூருக்கு போலீஸ்கிட்ட பெர்மிஷன் வாங்கிட்டு போகலாம்” என சிலர் சொன்னாங்க..
ஆனால் ஆதவ் அர்ஜுனா, ஜான் ஆரோக்கியசாமிதான்.. “அதெல்லாம் போக வேண்டாம்.. திரும்பவும் கரூருக்கு போனா பிரச்சனை பெரிசாகும்.. திமுககாரங்க மக்களை தூண்டிவிட்டு கலாட்டா பண்ணுவாங்க”ன்னு சொன்னாங்களாம்..
கட்சியில கிரவுண்ட்ல இருக்கிற நிர்வாகிங்க, “நீங்க வந்தே ஆகனும்னு” விஜய்கிட்ட கண்டிப்பாக சொல்றாங்க.. ஆனா மேலே இருக்கிற இந்த ரெண்டு பேரும் ரொம்பவே முட்டுக்கட்டை போட்டுகிட்டே இருக்காங்க” என சலித்துக் கொள்கின்றனர் விஜய்க்கு நெருக்கமானவர்கள்.
சரிப்பா.. கட்சிக்காக உசுரு கொடுத்துருக்காங்க.. அதுக்கு கட்சி ஏதாவது செஞ்சுதானே ஆகனும்..
நிச்சயமா.. அதுபற்றியும் இந்த டிஸ்கஷனில் பேசுனாங்களாம்.. “பொதுவாக கட்சிகளில் இந்த மாதிரி துக்கம் நிகழ்ந்துவிட்டால் முதல்ல கட்சியோட கொடிகளை அரைக் கம்பத்துல பறக்கவிடுவாங்க; கட்சி நிகழ்ச்சிகளை ரத்து செய்வாங்க.. ஆனால் நாம இதுவரைக்கும் கட்சி கொடிகளை அரைக்கம்பத்தில் விடனும்னு சொல்லவே இல்லை..
அதனால, கட்சி கொடிகளை அரைக்கம்பத்துல பறக்கவிடனும்.. அன்னைக்கு அத்தனை தவெக உறுப்பினர்களும் வீட்டுல இருந்தபடியே மெழுகுவர்த்தி ஏந்தி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தனும்னு வேண்டுகோள் வைக்க லாம்னு பேசினாங்களாம்” என்கின்றனர்.
சரிய்யா.. கோர்ட், கேஸ்னு சீரியசாக பேசுனாங்களே..
புஸ்ஸி ஆனந்தும் நிர்மல் குமாரும் தாக்கல் செஞ்ச முன்ஜாமீன் கேஸ் நாளைக்கு (அக்டோபர் 3 வெள்ளிக்கிழமை) கோர்ட்டுல விசாரணைக்கு வருது..
புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீது நடக்கும் விசாரணையில் அரசு தரப்பு ரொம்பவே கடுமையாக எதிர்க்க இருக்குதாம். புஸ்ஸியையும் நிர்மலையும் கைது செய்தாகனும்னு அரசு நினைக்குது.. அதுக்கு தகுந்த மாதிரி வாதங்களை முன்வைக்க போறாங்க..
ஆனால், அரசு தரப்புக்கு ஸ்டிராங்கா கவுண்ட்டர் கொடுக்கத்தான் புஸ்ஸி- நிர்மல் சைடில் ஆட்கள் வலுவில்லாம இருக்காங்களாம்..
ஓஹோ.. அப்படியா..
ஆதவ் அர்ஜூனா திடீர்னு டெல்லி போயிருக்காரே எதுக்காம்?
பட்டினப்பாக்கம் ஆபீஸில் டிஸ்கஷன் நடந்தப்ப, விஜய்கிட்ட தனிப்பட்ட முறையில் ஆதவ் அர்ஜூனா பேசினாரு.. அப்ப “Basket Ball சங்கத்தின் ஆல் இண்டியா பிரசிடெண்ட் என்பதால அது விஷயமா டெல்லிக்கு நான் போக வேண்டியது இருக்கு.. இது ஏற்கனவே பிளான் செஞ்சதுதான்.. அதோட கரூர் சம்பவம் தொடர்பாக கோர்ட்டுக்குப் போயிட்டோம்.. கோர்ட்டு என்ன முடிவு எடுக்கும்.. அடுத்து என்ன செய்யலாம்.. சுப்ரீம் கோர்ட்டுல போய் ஆர்டர் வாங்கலாமான்னு? சீனியர் அட்வகேட்களிடம் ஆலோசிச்சுட்டு வர்றேன்.
அப்படியே, பாஜக சைடுலயும் காங்கிரஸில் ராகுல் காந்தி சைடுலயும் என்ன நினைக்கிறாங்க.. நாம என்ன செய்யலாம்னும் பேசிட்டு வர்றேன்” என
சொன்னாராம்.
ஓஹோ.. விஜய்க்கு சிஆர்பிஎப் பாதுகாப்பு தர டெல்லி முன்வந்துச்சே.. அது என்னாச்சு?
ஆமாய்யா.. டெல்லி, விஜய்க்கு கூடுதலாக சிஆர்பிஎப் பாதுகாப்பு கொடுத்து தங்கள் பக்கம் வெச்சுக்கனும்னு நினைக்குது.. இதுக்குதானே அமித்ஷா டிரை பண்ணினாரு..
ஆனால் விஜய், “கொள்கை எதிரின்னு சொல்லிட்டு அவங்களோட சேர்ந்தா பி டீம்னு முத்திரை குத்துவாங்கன்னு” ரொம்பவே தயங்கிட்டு இருக்காரு..
அதனால ஆந்திரா துணை முதல்வர் நடிகர் பவன் கல்யாணை விஜய்கிட்ட பேச சொல்லி இருக்கு டெல்லி..
சக நடிகர் என்பதால் இது ஒர்க் அவுட் ஆகும் என டெல்லி இந்த ரூட்டை பிடிச்சிருக்காம்..
சரிய்யா… இவ்வளவு பேசுறாங்களே விஜய் கரூர் போறதுக்கு போலீஸ்கிட்ட பெர்மிஷன் கேட்டாங்களா? இல்லையா?
இதுபற்றி போலீஸ் அதிகாரிகளிடம் நாம பேசினோம்.. அவங்களோ, “இதுல என்னங்க இருக்கு.. எல்லா கட்சிகாரங்களும் வந்து போற மாதிரி அவங்களும் வரலாம் போலாமே.. அவங்க முதல்ல பெர்மிஷன், பாதுகாப்பு கேட்டு மனு கொடுக்கனுமே.. அதை செய்யாம பெர்மிஷனே தரலைன்னு சொன்னா எப்படி?
விஜய்தான் வர முடியலைன்னா அவங்க கட்சியில மாவட்ட நிர்வாகிகள் இருக்காங்களே.. அவங்களாவது எங்ககிட்ட இதை பற்றி பேசி இருக்கலாம்.. பாதிக்கப்பட்டவங்களை போய் பார்த்திருக்கலாமே.. ரொம்பவே பயந்துகிட்டே போலீஸ் மேல பழியை தூக்கிப் போட்டா எப்படி? ன்னு கேட்கிறார்கள்
“போலீஸ் இவ்வளவு கிளியராக இருந்தாலும் தளபதிக்கு ரொம்பவே பயம் வந்துருச்சு.. அதனாலதான இன்னமும் குழப்பத்துலேயே யோசிச்சுகிட்டே இருக்காரு” என தவெக நிர்வாகிகளே ஆதங்கப்படுவதாக டைப் செய்தபடியே சென்ட்பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.