தவெக தலைவர் விஜய் கனவு உலகில் இருக்கிறார் என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் பாஜகவுக்கு 27 சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இன்னும் பாஜக வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.
இந்தநிலையில் மத்திய அமைச்சரும் பாஜக மேலிட பொறுப்பாளருமான பியூஷ் கோயல் இன்று (மார்ச் 31) சென்னை வந்தார்.
மாலை கமலாலயத்தில் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.
இதற்கிடையே விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஊழல் நிறைந்த திமுக அரசாங்கத்தை அகற்றி, தோற்கடித்து, அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான பிரச்சாரத்தை என்.டி.ஏ தொடங்கியுள்ளது.
அம்மா ஜெயலலிதா தமிழ்நாட்டிற்கு வழங்கிய நல்லாட்சியை தமிழக மக்கள் விரும்புகிறார்கள். இந்தத் தேர்தல் தமிழ்நாட்டு மக்களின் தலைவிதியையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும்.
நாங்கள் அனைவரும் குடும்பமாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். பாஜகவின் வேட்பாளர்கள் குறித்து நான் உள்ளூர் தலைவர்களுடன் ஆலோசித்து வருகிறேன். இன்னும் ஓரிரு நாட்களில் வேட்பாளர்களை முடிவு செய்து அறிவிப்போம்” என்றார்.
விஜய் குறித்த கேள்விக்கு பதிலளித்த பியூஷ் கோயல், “விஜய்க்கு தமிழ்நாட்டு மக்கள், கலாச்சாரம் மற்றும் அரசியல் பற்றி எந்தப் புரிதலும் இல்லை. கடந்த காலத்தில் பல திரை நட்சத்திரங்கள் வந்துள்ளார்கள், அவர்களைத் தமிழக மக்கள் நிராகரித்துள்ளனர்.
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா இருவரும் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள். பல ஆண்டுகள் மக்களுக்குச் சேவை செய்த பிறகே அவர்கள் முதலமைச்சரானார்கள். விஜய்க்கு ரசிகர்கள் இருக்கலாம். ஆனால் அந்தப் புகழ் வாக்குகளாக மாறாது என்பதை விஜயகாந்த் மற்றும் கமல்ஹாசன் விஷயத்தில் பார்த்தோம்.
விஜய் மூன்று அல்லது நான்கு இடங்களைக் கூடத் தாண்டுவார் என்று நான் நினைக்கவில்லை. அவர் கனவு உலகில் இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.
