வரும் 17ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கரூருக்கு செல்ல திட்டமிட்டிருக்கிறார் என தவெக மூத்த நிர்வாகிகள் தரப்பில் கூறுகிறார்கள்.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தை தொடர்ந்து நீலாங்கரை மற்றும் பட்டினம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டுக்கு மட்டும் மாறி மாறி சென்று வரும் விஜய், அருண்ராஜ், ஆதவ் அர்ஜூனா என முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறார்.
இதற்கிடையே தவெக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் எஸ்.ஐ.டி குழு அமைத்தது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இப்படி ஆலோசனை, நீதிமன்ற வழக்கு என கரூர் சம்பவம் தொடர்பான அடுத்தடுத்த நகர்வுகள் இருக்கும் நிலையில், விஜய் எப்போது பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க செல்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இதுதொடர்பாக டிஜிபி அலுவலகத்திலும் தவெக மனு கொடுத்து அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டுள்ளது.
இந்நிலையில் விஜய் கரூர் செல்வது குறித்து தவெக வட்டாரத்தில் விசாரித்த போது, ‘தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வரும் 17ஆம் தேதி கரூர் செல்ல இருக்கிறார். அன்றைய தினம் காலை 11 மணியில் இருந்து 3 மணி வரை இந்த சந்திப்பை நடத்தி முடித்துக்கொள்வோம் என்று கூறி, திருச்சி விமான நிலையத்தில் இருந்து கரூர் சென்று வருவது வரை பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று தவெக போலீசாரிடம் கேட்டிருக்கிறது.
இந்நிலையில் கரூரில் இருக்கும் த.வெ.க கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண் ராஜ் விஜய் வருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
கரூரில் உள்ள ஒரு மண்டபத்துக்கு உயிரிழந்தவர்களின் வீடுகளில் இருந்து தலா 5 பேர் அழைத்து வரப்படவிருக்கிறார்கள். விஜயுடன் 50 பேர் என மொத்தமாக சுமார் 250 பேர் மட்டும்தான் மண்டபத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். மண்டபத்துக்குள் வருபவர்களுக்கு ஒரு பேட்ச் ஏற்பாடு செய்து கொடுக்கப்படவுள்ளது.
அதுபோன்று எந்தசூழ்நிலையிலும் ரசிகர்களை அனுமதிக்கக் கூடாது. மிசியூசிக் எல்லாம் சத்தமாக வைக்கக்கூடாது என்று போலீசார் சார்பிலும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது’ என்கிறார்கள்
இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்றும் கூறுகிறார்கள்.
முன்னதாக 41 பேரை இழந்ததற்காக 16 நாட்கள் துக்கம் அனுசரிக்கிறோம். அதன் பிறகு என்ன நடந்தது என்று உண்மையை சொல்வோம் என்று தவெக தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.