போதையில்லா தமிழகம் அமைப்போம் என தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த விஜய், கஞ்சா வழக்கில் கைதாகி 10 நாட்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்தவரை வேட்பாளராக அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் முதல் முறையாக தேர்தல் களம் காணும் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், நேற்று (மார்ச் 29) சென்னையில் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தார். அதைத் தொடர்ந்து இளைஞர்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார். முதல் வாக்குறுதியாக, “போதைப்பொருள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவோம்” என்று அறிவித்தார்.போதைப்பொருட்கள் உள்வரவை தடுக்கவும், போதைப்பொருள் விற்பனை மற்றும் விளக்கத்தை கட்டுப்படுத்தவும் கடுமையான சட்டங்களை கொண்டு வருவோம். சமூக காவல் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை முழு அர்ப்பணிப்புடன் மேற்கொள்வோம். போதைப்பொருட்களால் ஏற்படும் மோசமான விளைவுகள் குறித்து பொது விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதைத் தடுக்கவும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதை எதிர்ப்பு மன்றங்களை நிறுவுவோம் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், விஜய் வேட்பாளராக அறிவித்த பேராவூரணி தொகுதி வேட்பாளர் சந்திரகாண்டீபன் மீது கஞ்சா கடத்தல் வழக்கு இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு 13 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்ட இவர், 10 நாட்களுக்கு முன்புதான் சிறையிலிருந்து ஜாமினில் வெளியே வந்துள்ளார். இவர் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி, ஆள்கடத்தல் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜாமினில் வெளிவந்த சில நாட்களுக்குள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து சீட் பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது. முன்னதாக சந்திரகாண்டீபன் பாஜக மாவட்ட விவசாய அணி செயலாளராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
