சட்டப்படிதான் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை வாதம் முன்வைத்துள்ளது.
கடந்த 2016-17 நிதியாண்டில், நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய், வருமான வரி தாக்கலின் போது 35.42 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதாக குறிப்பிட்டிருந்தார்.
இதற்கான மதிப்பீட்டு நடவடிக்கையை வருமானவரித்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு விஜய் தொடர்புடைய இடங்களில் சோதனை செய்தபோது கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்ததில், புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை விஜய் கணக்கில் காட்டவில்லை என்று கண்டறியப்பட்டது.
எனவே வருமானத்தை மறைத்ததற்காக ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டது.
2022 ஆம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் விஜய் தாக்கல் செய்த வழக்கு இன்று (செப்டம்பர் 23) நீதிபதி சரவணன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது விஜய் சார்பில், நடிகர் விஜய்க்கு அபராதம் செலுத்த கோரி 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன்னதாகவே உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். ஆனால் கால வரம்பை மீறி வருமானவரித்துறை 2022 ஆம் ஆண்டு நோட்டீஸ் வழங்கியுள்ளது. இதனால் அந்த அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும் என்று வாதம் முன்வைக்கப்பட்டது.
வருமானவரித்துறை சார்பில், ஐடி சட்டப்பிரிவு 271AAB(1)ன் படி, தான் விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டது. அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதம் முன்வைக்கப்பட்டது.
அப்போது விஜய் சார்பில் இது போன்ற நடவடிக்கைகளில் அபராதம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதி சம்பந்தப்பட்ட வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நகல்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.