ஏன் இந்த ‘கொலவெறி’..?
பெல்லி சூப்புலு, அர்ஜுன் ரெட்டி, கீத கோவிந்தம் தெலுங்கு படங்களின் வழியே நாடு முழுவதும் பல ரசிகர் ரசிகைகளைப் பெற்றவர் விஜய் தேவரகொண்டா. அதனாலேயே தெலுங்கு தாண்டி தமிழ், மலையாளம், இந்தி மொழிகளிலும் வெற்றி பெறுகிற வண்ணம் அவரது படங்கள் ‘பான் இந்தியா’ அந்தஸ்தை எட்ட முயற்சித்து வருகின்றன. அதற்கேற்ப டியர் காம்ரேட், வேர்ல்ட் பேமஸ் லவ்வர், லைகர், குஷி, தி பேமிலி ஸ்டார் படங்களைத் தந்து வருகிறார் விஜய் தேவரகொண்டா. அந்த வரிசையில் இன்னொன்றாகச் சேர்ந்திருக்கிறது ‘கிங்டம்’.
கௌதம் தின்னனூரி இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். மலையாளத் திரையுலகைச் சேர்ந்த முன்னணி ஒளிப்பதிவாளர்களான கிரிஷ் கங்காதரன், ஜோமோன் டி ஜான் இதில் பணியாற்றியிருக்கின்றனர். பாபுராஜ், வெங்கடேஷ் வி.பி. ஆகியோர் இதில் வில்லன்களாக நடித்திருக்கின்றனர்.

சரி, ‘கிங்டம்’ தரும் திரையனுபவம் எத்தகையது?

‘என்ன’ பிரச்சனை?
1920களில் விசாகப்பட்டினம் கடலோரப் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் வெள்ளையர்களின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிடுகின்றனர். தாங்கள் வாழும் பகுதியில் இருக்கும் தங்க வளம் கொழிக்கும் மலைகளைச் சுரண்ட அனுமதி மறுக்கின்றனர். அப்போது நடக்கிற போரில், அந்த மக்களுக்கு வழிகாட்டியாகத் திகழும் அரசன் மரணிக்கிறார்.
குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்படச் சிலர் மட்டும் ஒரு கப்பலில் ஏறித் தப்பிக்கின்றனர்.
பிறகு, ‘கிங்டம்’ கதை 1990க்கு தாவுகிறது.
ஆந்திராவில் ஒரு நகரத்திலுள்ள காவல்நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றுகிற சூரி எனும் இளைஞரை, ஒரு ’அண்டர்கவர் ஆபரேஷனுக்காக’ இலங்கைக்கு அனுப்புகிறார் விஸ்வ சிங் எனும் உளவுத்துறை அதிகாரி.
ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் ஏன் இப்படியொரு செயலில் ஈடுபட வேண்டும்? அதற்குச் சம்மதிக்க வேண்டும்?
சிறு வயதில் சூரியின் அண்ணன் சிவா காணாமல் போகிறார். உண்மையைச் சொன்னால், தந்தையைக் கொலை செய்த வழக்கில் கைதாகிவிடக் கூடாது எனும் பயத்தில் ஊரை விட்டு ஓடிச் செல்கிறார்.
கடல் கடந்து சென்ற அவர், யாழ்ப்பாணம் அருகேயுள்ள தீவொன்றில் இருக்கிறார். வெள்ளையர்களின் பிடியில் இருந்து தப்பி வந்த விசாகப்பட்டினம் பழங்குடியினரும் அங்குதான் வாழ்ந்து வருகின்றனர்.
வெள்ளையர்கள் ஆதிக்கம் வீழ்ந்தாலும், அந்த மக்களின் மீதான அடிமைத்தளைகள் அகல்வதாக இல்லை.
யாழ்ப்பாணம் பகுதியில் கடத்தல் வேலைகளில் ஈடுபடும் ஒண்டியப்பன், அவரது மகன் முருகன் உள்ளிட்ட சிலர் அவர்கள் மீது கடும் அடக்குமுறைகளைப் பிரயோகிக்கின்றனர்.
அண்ணன் சிவாவை நீண்டநாட்கள் கழித்துச் சந்திக்கும் சூரிக்கு அந்த விஷயங்கள் முதலில் வினோதமாகத் தெரிகின்றன. மெல்ல, அவர்களைச் சுதந்திர மனிதர்களாக ஆக்கும் எண்ணம் அவரைப் பீடிக்கிறது. அதன்படி, அவர் சில செயல்களைச் செய்கிறார்.
அது குறித்த தகவல்கள் சூரியை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிய உளவுத்துறைக்குத் தெரிய வருகிறது. அவர் ஆத்திரமடைகிறார்.
அதேவேளையில், இந்தியாவில் இருந்து வந்த உளவாளி ஒருவன் தங்களோடு இருப்பதாக முருகனுக்குத் தகவல் கிடைக்கிறது.
ஏற்கனவே பழங்குடியின மக்களை அடிமைப்படுத்திச் சிதைக்கும் தனது எண்ணத்திற்குத் தடையாகச் சூரியும் சிவாவும் இருப்பதை எண்ணிப் பொருமும் முருகன், அதன்பின் என்ன செய்தார்?
சூரி யார் என்ற விவரம் சிவாவுக்குத் தெரிய வந்ததா? மேலதிகாரியின் உத்தரவுகளுக்குச் சூரி கீழ்ப்படிந்தாரா என்பது போன்ற பல கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது ‘கிங்டம்’ படத்தின் மீதி.
’என்ன வேணும்’ என்று கேட்கும் சிங்கம்புலியிடம், ‘எண்ணெய் தான் வேணும்’ என்று வடிவேலு பதிலளிப்பதாக ஒர் ‘காமெடி’ காட்சி நம்மில் பலர் அறிந்ததே.
கிட்டத்தட்ட அந்த தொனியில் ‘கிங்டம்’ படத்தின் கதை திரையில் சொல்லப்பட்டிருக்கிறது. ’என்ன பிரச்சனை’ என்று ரசிகர்கள் மனதுக்குள் கேள்வி எழுப்ப, பதிலுக்கு ‘என்ன பிரச்சனை’ என்று கேட்கும் வகையிலேயே திரையில் காட்சிகள் நகர்கின்றன.
ரசிகர்கள் நினைப்பு ஒன்றாக இருக்க, ‘அது ஏன் அப்படி இருக்கு’ என்ற தொனியிலேயே கதை சொல்லியிருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் கௌதம் தின்னனூரி.
’ஓவர்’ வன்முறை தேவையா?
விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ போர்சே, சத்யதேவ், அய்யப்பா சர்மா ஆகியோருடன் வில்லன்களாக பாபுராஜ், வெங்கடேஷ் வி.பி., மனீஷ் சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ரோகிணி இதில் ஓரிரு காட்சிகளுக்கு வந்து போயிருக்கிறார்.
ஜென்ஸீ ரசிகர்களின் பேவரைட்டாக இருக்கும் பாக்யஸ்ரீ போர்சேவுக்கு இதில் பாடல்கள் இல்லை; தனிப்பட்ட முறையில் காட்சிகள் இல்லை; அவருக்கும் நாயகன் விஜய் தேவரகொண்டாவுக்குமான காதலே படத்தில் காட்டப்படவில்லை. ஆனால், கிளைமேக்ஸில் அவர் மடியில் முகம் புதைத்து அழுகிறார் விஜய் தேவரகொண்டா. ‘இதனை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் ரசிகர்கள்’ என்று இயக்குனரோ, இதர தொழில்நுட்பக் கலைஞர்களோ கொஞ்சம் கூடச் சிந்திக்கவில்லை.
வில்லனாக வரும் வெங்கடேஷ் வி.பி. திரையில் ரத்தத்தைத் தெறிக்க விட்டிருக்கிறார். ‘ஹாலோஹாஸ்ட்’ படங்களே மேல் எனும் அளவுக்கு இருக்கின்றன அக்காட்சிகள். ’ஏன் இந்த கொலவெறி’ என்று கேட்கிற வகையில் அவை இருக்கின்றன. தணிக்கைக் குழு எப்படி இதனை அனுமதித்தது? தெரியவில்லை.
படத்திற்கு இசை அனிருத்தாம். அவரே நேரில் வந்து சொன்னால் கூட ரசிகர்கள் நம்ப மாட்டார்கள். போனால் போகிறதென்று, பின்னணி இசை கொஞ்சமாக ‘பெப்’ ஏற்றுகிறது.
மற்றபடி ஒளிப்பதிவாளர்கள் ஜோமோன் டி ஜான், கிரிஷ் கங்காதரன், படத்தொகுப்பாளர் நவீன் நூலி, தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா என்று பலரது உழைப்பு வீணாக்கப்பட்டிருக்கிறது.
’தெலுங்கு திரையுலகுக்கு த்ருஷ்டி ஏற்பட்டுவிட்டதா’ என்று கேட்கும் அளவுக்கு, அங்கு பிரமாண்டமாகத் தயாரிக்கப்படுகிற படங்கள் வரிசையாக ரசிகர்களை ஏமாற்றி வருகின்றன. அவற்றில் ஒன்றாகச் சேர்ந்திருக்கிறது ‘கிங்டம்’.
தமிழ் டப்பிங் பணிகளில் ஈடுபட்ட குழுவினர் வசனங்களை முடிந்த அளவுக்குச் சிறப்பாகக் கையாண்டிருக்கின்றனர். வழக்கமான ‘டப்பிங்’ படங்களில் கேட்ட குரல்களாக இல்லாமல், புதிய குரல்களைக் கேட்க வகை செய்திருக்கின்றனர்.
அதனைத் தாண்டி ‘கிங்டம்’ பற்றிச் சொல்வதற்கு ஏதும் இல்லை.
படம் முடிகிற வேளையில், ‘அடுத்த பாகமும் இருக்கிறது’ என்று சில வசனங்கள், ஷாட்களை காட்டியிருக்கிறார் இயக்குனர். ஏற்கனவே ‘அரைப்படம்’ பார்த்த வருத்தத்தில் இருக்கும் நாம் அதனைக் கண்டதும், ’இடைவேளை வரை எடுத்த படத்தைத்தான் இரண்டரை மணி நேரமாகப் பார்த்தோமா’ என்று நினைக்க வேண்டியிருக்கிறது. பிறகு அந்த எண்ணம் மட்டுமே மனதை ஆக்கிரமிக்கிறது.