கரூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தவெக தலைவர் விஜய், ‘பாட்டிலுக்கு பத்து ரூபா… பாட்டிலுக்கு பத்து ரூபா’ என செந்தில் பாலஜியை கடுமையாக விமர்சித்தார்.
நாமக்கல்லை தொடர்ந்து இன்று (செப்டம்பர் 27) கரூர் மாவட்டத்துக்கு மக்கள் கூட்டத்துக்கு நடுவே விஜய்யின் பிரச்சார வாகனம் ஊர்ந்து வந்தது.
இந்தநிலையில் வேலுசாமிபுரத்தில் உரையாற்றிய விஜய், ‘ இங்கிருக்ககூடிய ஒருவரை பற்றி பேசாமல் போனால் நல்லாருக்குமா.. கரூர் வரை வந்துவிட்டு பேசாமல் போனால் நல்லாருக்குமா…
எதற்கு சுற்றி வளைத்து பேச வேண்டும். நேரடியாகவே பேசுகிறேன். இந்த மாவட்டத்தில் மந்திரி மந்திரி என ஒருத்தர் இருந்தார். இப்போது அவர் மந்திரி இல்லை. ஆனாலும் மந்திரி மாதிரி.
யாரென்று நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டுமா என்ன…. ‘பாட்டிலுக்கு பத்து ரூபா…பாட்டிலுக்கு பத்து ரூபா… பாட்டிலுக்கு பத்து ரூபா’” என பாட்டுப்பாடி கடுமையாக விமர்சித்தார்.
மேலும் அவர், “சமீபத்தில் கரூரில் ஒரு விழா நடத்தினார்களே…. அதென்னப்பா முப்பது பேர் விழாவா… சாரிப்பா கன்ஃபியூஸ் ஆயிட்டேன் முப்பெரும் விழா. இந்த விழாவில் மாண்புமிகு சிஎம் அவர்கள், மாஜி மந்திரியை உச்சி மேல தூக்கி வைத்து மெச்சினதை எல்லாம் காதார கேட்டோம்.
இதே சிஎம் எதிர்க்கட்சியாக இருந்த போது அந்த மாஜி மந்திரியை பற்றி என்னவெல்லாம் சொன்னார்… என்னவெல்லாம் கேட்டார். factcheck நண்பர்களே இதையெல்லாம் நீங்கள் பெரிதாக ரிசர்ச் பண்ண வேண்டியதில்லை. யூடியூபை ஓபன் செய்து பாருங்கள். தெறித்து போய்விடுவீர்கள்.
இந்த மாஜி மந்திரி இப்போது என்னவாக இருக்கிறார் என்று மக்கள் பேசுகிறார்கள் தெரியுமா… திமுக குடும்பத்துக்கு ஊழல் செய்கிற பணத்தையெல்லாம் 24*7 டெலிவரி செய்யும் ஏடிஎம் மிஷினாக இருக்கிறார். இதை நான் சொல்லவில்லை. ஊருக்குள்ள பேசுகிறார்கள்.
இன்னொரு முக்கியமான விஷயம்… இங்க போலீஸ் பாதுகாப்பெல்லாம் இருக்கிறதா இல்லையா… போலீஸ் கைகள் எல்லாம் கட்டப்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். போலீசாரே மக்கள்தான் எஜமானர்கள். மக்களுக்குதான் பயப்பட வேண்டும். வேறு யாருக்கும் பயப்படக்கூடாது.
இன்னும் ஆறு மாதம் தான். ஆட்சி மாறும். காட்சி மாறும். அதிகாரம் கை மாறும். உண்மையான மக்களாட்சி அமையும். அப்போது தெரியும்…. எல்லோருக்கும் சுதந்திரமும் பாதுகாப்பும்100 சதவிகிதம் கொடுக்கப்படும்” என்று கூறினார்.