தமிழக வெற்றிக் கழகத்தின் 3 ஆவது ஆண்டு துவக்கவிழா நிகழ்ச்சியில் நடிகரும், அக்கட்சியின் தலைவருமான விஜய் கலந்து கொண்டார். விழாவில் தவெக கொடியை ஏற்றி வைத்த விஜய் கொள்கை தலைவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய விஜய், “1977 ஜூன் மாதம் புரட்சி தலைவர் எம்ஜிஆர் ரேடியோவில் ஒரு பேட்டி கொடுத்தார்.அதில் பேரறிஞர் அண்ணா இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களும் அமர்கின்ற ஒரு நிலை ஏற்பட்டுவிட்டதே என்று எண்ணி எண்ணி கண்ணீர் வடித்தேன். அன்று அந்த கண்ணீரை துடைக்க ஆரம்பித்த இயக்கம்தான் அதிமுக.
அதேபோல், 2017-க்குப் பின், 2021-க்குப் பிறகு தமிழ்நாட்டின் நிலையைப் பற்றி யோசித்துப் பார்த்த நமது தமிழக மக்கள், “காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களும் அமரும் ஒரு நிலைமை ஏற்பட்டுவிட்டதே” என்று கண்ணீர் வடித்தனர். இன்று இந்தக் கண்ணீரைத் துடைக்க ஆரம்பித்த இயக்கம் தான் தமிழக வெற்றிக் கழகம். இப்படி எல்லாம் நாம் பேசுவதால் கண்டிப்பாக சிலர் கொந்தளிப்பார்கள். அது பற்றியெல்லாம் நாம் கவலைப்படக் கூடாது. ஏனென்றால், கொந்தளிப்பது தான் அவர்களுக்கு வேலையே!
எம்ஜிஆர் அவர்கள் கட்சி ஆரம்பித்து ஜெயித்த பிறகு கூட, சட்டசபையில் கூட “ஏதோ ஒரு நடிகர் கட்சி வந்திருக்கிறதாம், ஏதோ புதிய கட்சி வந்திருக்கிறது, புரட்சித் தலைவர் என்று ஒருத்தர் வந்துள்ளார்” என்று கேலியும் கிண்டலுமாக சிலர் பேசினார்கள்.யார் அரசியலுக்கு வந்தாலும் இப்படிக் கொந்தளிப்பது தான் அவர்களுடைய வேலையே.
அப்படித்தான் நாம் அரசியலுக்கு வந்த பிறகும் கூட, “இந்த விஜய்க்கு என்ன அனுபவம் இருக்கிறது? எம்ஜிஆருக்கு எவ்வளவு அனுபவம் இருக்குது தெரியுமா? 52-லிருந்து 72 வரை 20 ஆண்டுகள் திமுகவில் இருந்த ஒரு அரசியல் அனுபவம் எவ்வளவு இருக்கிறது தெரியுமா? விஜய்க்கு என்ன பெரிய அனுபவம் இருக்கிறது?” என்று கேட்ட அதே வாய்தான் அன்று எம்ஜிஆர் அவர்களைப் பார்த்து, “அரசியல் அரிச்சுவடி தெரியாதவர், கவர்ச்சியை மட்டுமே நம்பியிருப்பவர், அட்டகத்தி, வாய் விளம்பர வள்ளல், இவருக்கு கேள்வி மட்டும் தான் கேட்கத் தெரியும், பதில் சொல்லத் தெரியாது, நிருபர்களைச் சந்திக்க மாட்டார், டெல்லியைப் பகைத்துக் கொள்ள மாட்டார், மேலே இருந்து அவருக்கு அவ்வளவு அழுத்தம் இருக்கிறது” என்று சொன்னதும் அதே வாய்தான். அதனால் எம்ஜிஆர் அவர்களை மட்டுமல்ல, அவர்களுடைய தொண்டர்களைக் கூட விட்டுவைக்கவில்லை. பளபளப்பு ஜொலிஜொலிப்பு பார்த்தால் பல் இளிப்பவர்கள்.. என்றெல்லாம்.. கிண்டலும் கேலியுமாகப் பேசினார்கள். இதெல்லாம் சைலண்டாகப் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் என்ன செய்தார்கள் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும்.
அரசியலில் “பழந்தின்னு கொட்டை போட்டு அனுபவித்தவர்கள்” என்று சொல்பவர்கள் எல்லோருக்கும் அந்தக் “கோட்டை” ஒரு பகல் கனவாகவே மாறிவிட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 1977 மாதிரியே இப்போதும் அந்தப் பழைய தேய்ந்து போன, துருப்பிடித்துப் போன, நைந்து போன அதே பழைய வெப்பனையே இப்போதும் கையில் எடுக்கிறார்கள். மை டியர் ஜெண்டில் மேன்.. டெக்னாலஜி எல்லாம் வளர்ந்து வேறு எங்கோ போய்க் கொண்டிருக்கிறது. அட்லீஸ்ட் உங்கள் டெக்னிக்கையாவது கொஞ்சம் மாத்துங்கள் பாஸ்!
காமராஜர் அவர்களையும் விட்டுவைக்கவில்லை. “அவருக்கு இலக்கியம் என்றால் என்ன தெரியும்?” என்று கிண்டலும் கேலியுமாகப் பேசினார்கள். இப்படி அவர்கள் செய்யும் தப்பை எல்லாம் நாம் எடுத்துச் சொன்னால், அவர்கள் செய்யும் ஊழலை எல்லாம் நாம் எடுத்துச் சொன்னால், 50 வருடத்திற்கு முன்னால் இருந்த அதே தகர டப்பாவை எடுத்து உருட்ட ஆரம்பித்துவிடுவார்கள்.
திருவள்ளுவர் இருந்திருந்தால்..
“பவள விழா பாப்பாவிற்கு வேறு என்ன தெரியும்? பழைய டப்பாவை உருட்டத்தானே தெரியும்!” அதற்காக நாம் அவர்கள் செய்யும் தப்பை எல்லாம் வெளியில் சொல்லாமல் இருக்க முடியுமா? சொல்லுவோம்! சொல்லிக்கொண்டே இருப்போம்! நம்மைத் தவிர யாரு அவர்களை எதிர்த்து நின்று கேள்வி கேட்பது? யாருக்கு அந்தத் தில் இருக்கிறது? மக்களுடைய ஒரே பிரதிநிதி நான் மட்டும்தான். இப்படி இருக்கும் நிலையில், இன்று டிஜிட்டல் உலகத்தில் திருவள்ளுவர் இருந்திருந்தால், இந்தத் தீய சக்தியைப் பற்றி என்ன திருக்குறள் எழுதியிருப்பார் என்று ஒரு கற்பனையாக நினைத்துப் பாருங்கள். அநீதி, அராஜகம், தில்லுமுல்லு – இவையெல்லாம் திமுக முதற்றே உலகு (கூட்டத்தில் இருந்தவர்கள் ஒன்மோர் கேட்டதால் மீண்டும் சொன்னார்.)
மும்முனைப் போட்டி, நான்கு முனைப் போட்டி அப்படியெல்லாம் சொல்கிறார்கள். அப்படியே இருக்கட்டும். மாபெரும் மக்கள் சக்தியாக நம் அணி ஒரு பக்கம். அடுத்து திமுக தலைமையிலான மற்ற கூட்டணிக் கட்சிகள் ஒரு பக்கம். அடுத்து பாஜக தலைமையில் மற்றும் பலர். (என்ன சிரிக்கிறீர்கள்? உண்மையைத் தானே சொன்னேன்!)இப்படி எத்தனை சக்திகள் வந்தாலும், எத்தனை பேர் வந்தாலும், திமுகவை வீழ்த்துவதற்கு மாபெரும் மக்கள் சக்தியான நம்மால் மட்டும்தான் முடியும். நமது தவெகவால் மட்டும்தான் முடியும்.
இந்த நிலைமையில் “ஏய் விஜய், வீட்டை விட்டு வெளியே வா” என்றெல்லாம் கேட்கும்போது எனக்கு ஒன்று தோன்றும். இப்படி எல்லாம் கூப்பிடும்போது எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், “ஐயோ, இவர்கள் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கக்கூடிய ஒவ்வொரு விஜய்யும் இவர்கள் கூப்பிடுவது மாதிரியே இருக்கிறது” என்றுதான் எனக்குத் தோன்றும்.
அதனால் பொறுங்க பாஸ்! வருவாங்க, முறையாக வருவார்கள். ஓட்டுப் போடும் அன்று ஓட்டர் ஐடியை கையில் எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் ஒவ்வொரு விஜய்யும், ஒவ்வொரு விஜியும் பூத் பூத்தாக் காலையிலேயே வந்து நிற்பார்கள். பாருங்கள், அன்று தெரியும் பாருங்கள். ஏண்டா இந்த விஜயை கூப்பிட்டோம்” என்று…
நான் சினிமாவை விட்டாலும்..
இப்படிப் பேசினால் உடனே “இது என்ன சினிமாவா?” என்று பேச ஆரம்பித்துவிடுவார்கள். நான் சினிமாவை விட்டாலும் நீங்கள் சினிமாவை விட மாட்டீங்களே பா!
மேலும், கருத்துக்கணிப்பு, கருத்துக்கணிப்பு என்கிறார்கள். அதில் நிறைய பேர் உண்மையான கணிப்புகளை எல்லாம் சொல்கிறார்கள். அதையும் நான் தப்பு சொல்லவில்லை. சில பேர் கடுப்பில் விட்ட கணிப்பாகவும் இருக்கிறது. அதையும் நான் தப்பு சொல்லவில்லை. இந்தக் கடுப்பில் விட்ட கணிப்பாளர்களுக்கு நான் சொல்வது என்னவென்றால், ஒவ்வொரு ஊராக, தெருத்தெருவாக, வீடு வீடாகப் போய் நீங்கள் கருத்துக்கணிப்பை எடுத்துப் பாருங்கள். ஒவ்வொரு வீட்டிலும் தவெக இருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள்.
உங்களுக்கு அது ஷாக்காக இருந்தால், ரப்பர் வைத்து அழித்துவிட்டு மறுபடியும் முதலிலிருந்து எடுத்துப் பாருங்கள். அதே ரிசல்ட் தான் வரும். இது என்னப்பா லாஜிக்? “அது எப்படி எல்லார் வீட்டிலும் தவெக இருக்கும்?” என்று நீங்கள் கேட்டால், சாம்பிளுக்கு ஒரு டெஸ்ட் எடுத்துப் பாருங்கள்.
இரண்டு ஆண்டுகள் இருக்கும் என்று நினைக்கிறேன். நமது சி.எம். ஸ்டாலின், அவரது கட்சிக்காரர்கள், மந்திரிகள், சில பேர் செய்யும் அட்ராசிட்டிஸ் எல்லாவற்றையும் பார்க்கும்போது எனக்குத் தூக்கமே வரவில்லை என்றார். அந்த வீடியோ கூட இருக்கிறது. அப்படி இருக்கும் அவர் என்றாவது ஒருநாள் அசந்து தூங்குவார் இல்லையா? அப்போது அவரிடம் போய், “சார் சார், எந்த சின்னத்திற்கு சார் ஓட்டு போடுவீர்கள்?” என்று கேட்டுப் பாருங்கள். அவர் விசில் சின்னத்திற்குத்தான் என்று சொல்வார்.
அப்படி இருக்கும் இந்த நிலையில், “தவெக சிட்டியில் மட்டும்தான் இருக்கிறது, டவுனில் தான் இருக்கிறது, வில்லேஜ் சைடு எல்லாம் இல்லை” என்று சொல்பவர்களுக்கு இந்த மாதிரி டெஸ்ட் எல்லாம் செய்து பாருங்கள் தெரியும். விசில் சின்னம் போகாத ஊரே இல்லை. விசில் சின்னம் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் தவெக இருக்கிறது என்று அர்த்தம்.
என்னுடைய அம்மா, அக்கா, தங்கைகள், தம்பிகள், அண்ணன் தவெகவிற்கு ஓட்டு போடுவதை யாராலும் தடுக்க முடியாது. ரத்த சொந்தமாக நினைக்கும் நம்முடைய வகையறாக்களை எந்தக் கட்சியாக இருந்தாலும், எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்கவே முடியாது.
நான் ஓவர் கான்ஃபிடன்டாகப் பேசுகிறேன் என்று நினைக்காதீர்கள். இதுதான் கள நிலவரம், கள எதார்த்தமும் இதுதான்.தீய சக்தியை வீழ்த்துவதற்கு தூய சக்தியான நம்மால் மட்டும்தான் முடியும். இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக தான் மக்களுடைய ஒரே ஆப்ஷன். அதர்வைஸ் நோ டைவர்ஷன். டப்பா இஞ்சின், ஓட்டை எஞ்சின் என எவ்வளவு எஞ்சின் வந்தாலும், டாப் எஞ்சின் நமது தவெக தான் என்பதை மக்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டார்கள்.
அதனால் நமது தோழர்கள் அதை மனதில் நன்றாக ஏற்றுக்கொண்டு இன்னும் சார்ஃபாக ஒர்க் பண்ணுங்கள். ஒன்றியம், நகரம், பேரூர் பகுதி, கிளை எல்லாவற்றிலும் பூத் பூத்தாக நம்முடைய வேட்பாளர்களுக்கு ஒற்றுமையாக இருந்து வேலை செய்யுங்கள். நமக்கு மாபெரும் கூட்டணியான மக்கள் சக்தி குடும்பம் குடும்பமாக நம்மோடு இருக்கிறார்கள்.
நம்முடைய விசில் சின்னத்திற்கு ஓட்டு போட வைக்க வேண்டியது மட்டும்தான் உங்களின் வேலை. மற்றதை எல்லாம் மக்களோடு சேர்ந்து நான் பார்த்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டின் அரசியலில் தி விசில் ப்ளேயர் இஸ் டிவிகே. நமது மக்கள் இந்த விசிலை ஊதுகிற ஊதில் இந்தத் தீய சக்தியும் ஊழல் சக்தியும் தெறிச்சு ஓட வேண்டும்.
அன்று செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தவெக ஆளும் கட்சியாக எழும். உங்களோடு நான் இருக்கிறேன். நம்மோடு நம் மக்கள் இருக்கிறார்கள். இதற்கு மேல் என்ன வேண்டும்? கான்ஃபிடன்டாக இருங்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம் என்று தெரிவித்தார்.
