முன்னால் முதல்வர் ஜெயலலிதா சொன்னதை மறந்துவிட்டு பாஜகவோடு அதிமுக கூட்டணி வைத்திருப்பதாக தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
நாமக்கல்லில் நடைபெற்று வரும் தவெக பிரச்சார கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் விஜய் பேசி வருகிறார்.
அப்போது அவர், ‘என்னப்பா இந்த விஜய் எங்க போனாலும் கேள்வியா கேக்குறாரு. இவரு வந்தா என்ன செய்வாருனு கேக்குறாங்க… கல்வி, மருத்துவம் ,குடிநீர், ரேஷன், மின்சாரம், போக்குவரத்து, பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு என அடிப்படை விஷயங்களில் எந்த சமரசமும் இல்லாமல் சரியாக செய்வோம்னு சொன்னோம் .
இதைத்தானே எல்லோரும் சொல்றாங்க… இவரு புதுசா என்ன சொல்லிட்டாருனு கேக்குறாங்க…
அய்யா, அரசியல் மேதைகளே, பெரியவர்களே ஒரு மனிதனுக்கு சாப்பிடுறதுக்கு நல்ல சோறு, நல்ல கல்வி, நல்ல குடிநீர், நல்ல மருத்துவ வசதி, போக்குவரத்து, அதற்கான சாலை வசதி, பாதுகாப்பான வாழ்க்கை… இதுதானே அடிப்படை தேவை.
இன்றக்கும் எல்லோருக்கும் தேவைதானே. அப்படியானால் அதை சரியாக செய்வோம் என்று சொன்னது சரிதானே.. எது நடைக்கு சாத்தியமோ, எது உண்மையோ அதை மட்டும்தான் செய்வோம்.
திமுகமாதிரி பொய்யான வாக்குறுதிகளை எப்போதும் கொடுக்கமாட்டோம். புதுசா சொல்லுங்கனா என்னத்த புதுசா சொல்றது.
செய்வாய் கிரகத்தில் ஐடி கம்பெனி கட்டப்படும், காத்துல கல்வீடு கட்டப்படும், அமெரிக்காவுக்கு ஒத்தையடி பாதை போடப்படும். வீட்டுக்குள்ளே ஏரோப்ளைன் ஓட்டப்படும் என்று அடிச்சிவிடுவோமா..
சிஎம் அடிச்சு விடுவாரே அந்த மாதிரி அடிச்சு விடுவோமா…
நான் ஏற்கனவே சொன்னதுதான், இந்த பாசிச பாஜக அரசோட நாங்க ஒத்துபோகமாட்டோம். திமுக அரசு மாதிரி மறைமுக உறவுக்காரர்களா பாஜகவுடன் நாம் இருக்கமாட்டோம். மூச்சுக்கு முன்னூறு தடவை அம்மா… அம்மா என்று சொல்லிவிட்டு ஜெயலலிதா மேடம் சொன்னதையெல்லாம் மறந்து பொருந்தா கூட்டணியை அமைத்துக்கொண்டு… கேட்டால் தமிழ்நாட்டின் நலனுக்காக பாஜகவோடு கூட்டணி வைத்திருக்கிறோம் என்று சொல்கிறார்களே. அவர்கள் மாதிரியும் நாம் இருக்கமாட்டோம்.
நான் தெரியாமத்தான் கேட்கிறேன் பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு என்ன செய்தது. நீட்டை ஒழித்துவிட்டார்களா… கல்வி நிதியை முழுசா கொடுத்துவிட்டார்களா… தமிழ்நாட்டுக்கு தேவையான எல்லாத்தையும் செய்துவிட்டார்களா…
பிறகு எதற்கு இந்த சந்தர்ப்பவாத கூட்டணி என்று நான் கேட்கவில்லை. எம்.ஜி.ஆரின் தொண்டர்கள் கேட்கிறார்கள்.
சரிப்பா, அவங்க கூட்டு, பொறியல், அப்பளம்னு எதையாவது கிண்டிக்கிடட்டும் நமக்கு எதற்கு?
மக்களே நல்லா கேளுங்க… அதிமுக பாஜக நேரடி உறவுக்காரர்கள் என்று எல்லோருக்கும் தெரியும். அவங்களோட கூட்டணி மேல மக்களுக்கு நம்பிக்கை இல்லனும் தெரியும்.
ஆனால் இந்த திமுக குடும்பம் பாஜகவோட மறைமுக கூட்டணி வைத்திருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.
வருகிற தேர்தலில் திமுகவுக்கு ஓட்டுபோட்டால், அது பாஜகவுக்கு ஓட்டு போட்ட மாதிரி. 2026ல் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையில் தான் போட்டியே.
இப்படி மோசமான ஆட்சியை நடத்தும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டுமா… அல்லது தவெக ஆட்சி அமைக்க வேண்டுமா…
என் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறீர்களா… பார்த்திடலாம்… இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்பு என்னமோ, ஏதோனு நினைச்சேன்… ஒருகை பார்த்திடலாம். நம்பிக்கையாக இருங்கள் வெற்றி நிச்சயம்” என்று கூறிவிட்டு கரூர் புறப்பட்டார் விஜய்.