”விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை ஏமாற்றும் திமுக அரசு மேம்படுத்தாத காரணத்தால் தான் அவர்கள் கிட்னியை விற்பதற்கு தள்ளப்பட்டனர்” என விஜய் குற்றஞ்சாட்டியுள்ளார்.
2026 தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி மூன்றாவது வார பயணமாக நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் இன்று (செப்டம்பர் 27) பிரச்சாரம் மேற்கொள்கிறார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்.
அதற்காக நாமக்கல் கே.எஸ்.திரையரங்கம் பகுதியில் காலை 8.45 மணிக்கு பிரச்சாரம் மேற்கொள்ள போலீசார் அனுமதி வழங்கியிருந்தனர். ஆனால் பிரச்சார வாகனத்தை தொண்டர்கள் சூழ்ந்ததால், சுமார் 6 மணி நேர தாமதமாகவே கே.எஸ்.திரையரங்கம் பகுதிக்கு வந்தார்.
அங்கு தொண்டர்கள் முன்பு விஜய் பேசுகையில், “திமுக எம்.எல்.ஏவுக்கு சொந்தமான மருத்துவமனையில் கிட்னி திருட்டு. இது நாடறிந்த விஷயம். அதை நான் திருச்சியிலேயே பேசியிருந்தேன். அதில் அதிகம் பாதிக்கப்பட்டது நாமக்கல் பகுதி மக்களே. அதிலும் குறிப்பாக ஏழைப் பெண்களை குறிவைத்தே அந்த கிட்னி திருட்டு நடந்துள்ளது என சொல்கிறார்கள். இதில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் நம் ஆட்சி அமைந்ததும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.
இந்த கொடுமைக்கு ஆரம்பம் எதுவென்றால் கந்துவட்டி கொடுமை. அதாவது விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை ஏமாற்றும் திமுக அரசு மேம்படுத்தாத காரணத்தால் அவர்கள் கிட்னியை விற்பதற்கு தள்ளப்பட்டுள்ளனர். இது எவ்வளவு பெரிய கொடுமை. விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த தேவையான தீர்வுகளை நம் கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொல்வோம்” என விஜய் பேசினார்.