ADVERTISEMENT

ஆள் வைத்து பொய்யான கதையாடல்களை பரப்புகிறார்கள் – விஜய் குற்றச்சாட்டு

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay accuses people of spreading lies

நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் நேற்று நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மக்களை சந்தித்து பரப்புரையில் ஈடுபட்டார். இந்நிலையில் இன்று நம்மைப் பற்றி, ஆள் வைத்துப் பொய்யான கதையாடல்களைச் செய்தோர், செய்வோர், ஒவ்வொரு நாளும் மக்களிடையே நமக்குப் பெருகி வரும் அங்கீகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர் என விஜய் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று (செப்டம்பர் 21) விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்” என்ற நம் மக்கள் சந்திப்பை, பல்வேறு அரசியல் திருப்புமுனைகளை அமைத்துத் தந்த திருச்சியில் திக்கெட்டும் கேட்கும் வகையில் கடந்த வாரம் (13.09.2025) தொடங்கினோம்.

ADVERTISEMENT

இரண்டாவது வாரமாக, மீனவச் சொந்தங்கள் மற்றும் மும்மதங்களையும் போற்றி, மத நல்லிணக்கத்தைப் பேணிக் காக்கும் நம் நாகப்பட்டினம் மாவட்ட மக்களையும், உலகுக்கே உணவூட்டும் உழவர் பெருமக்களாகிய திருவாரூர் மாவட்ட மக்களையும் நேற்று சந்தித்தோம்.

நம்மைப் பற்றி, ஆள் வைத்துப் பொய்யான கதையாடல்களைச் செய்தோர், செய்வோர், ஒவ்வொரு நாளும் மக்களிடையே நமக்குப் பெருகி வரும் அங்கீகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர். இந்த நடுக்கத்தினாலேயே நாம் நமது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்கும் பொழுதெல்லாம் யாருக்கும் விதிக்காத கடுமையான விதிமுறைகளை நமக்கு விதிக்கின்றனர்.

ADVERTISEMENT

ஆனால், நாம் நம் கொள்கைத் தலைவர்களின் வழியில் முதன்மைச் சக்தியாக, உண்மையான மக்களாட்சியை அமைத்திட நம் பணிகளை இன்னும் தீவிரப்படுத்துவோம்.

இந்த எழுச்சிமிகு தருணத்தைச் சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றி. நேற்றைய மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது, முழு ஒத்துழைப்பு நல்கிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குழு, தன்னார்வலர்கள் குழு, தனியார் பாதுகாவலர்கள் குழு, மருத்துவக் குழு ஆகியவற்றுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகின்றேன்.

ADVERTISEMENT

மேலும் நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட மக்கள் நமக்களித்த வரவேற்பும் நம் மீது காட்டிய அன்பும் பாசமும் நிகரில்லாதவை. இவை எக்காலத்திற்கும் என் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்திருக்கும். இவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளேன். இதற்காக எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.

தமிழ்நாட்டு மக்களுக்கான முதன்மைச் சக்தியான நாம், அவர்களுக்காக எதிலும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். 1967 மற்றும் 1977 தேர்தல்களின் வெற்றி விளைவை 2026 தேர்தலிலும் நிகழ்த்திக் காட்டுவோம்!

புதியதோர் உலகு செய்வோம் – கெட்ட

போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்” என கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share