அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் இன்று (பிப்ரவரி 25) காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். vigilance raid at admk mla house
கோவை வடக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அம்மன் அர்ஜுனன். இவர் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளராகவும் உள்ளார். இவர் கடந்த 2016ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையிலான காலத்தில், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ ஆக இருந்தார்.
இந்த காலக்கட்டத்தில் அவர் தனது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக கோவையைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் லஞ்ச ஒழிப்பு துறையினரிடன் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் கோவை லஞ்ச ஒழிப்பு துறையினர் இவர் மீது வழக்கு பதிவு செய்தனர். எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜுனன் மட்டுமின்றி அவரது மனைவி விஜயலட்சுமி பெயரிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அவர் தன் வருவாயைக் காட்டிலும் 2 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையும் அசையா சொத்துக்களை கூடுதலாக குவித்ததாக அர்ஜுனன் மீது வழக்கு பதியப்பட்டது.
இந்த நிலையில், கோவை செல்வபுரம் அசோக் நகர் பகுதியில் உள்ள அம்மன் அர்ஜுனனில் வீட்டில் இன்று காலை 6.30 மணி முதல் லஞ்ச ஒழிப்பு துறையைச் சேர்ந்த 8 பேர் கொண்ட அதிகாரிகள் குழு தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
சோதனை நிறைவடைந்த பிறகே அவரின் வீட்டில் ஏதேனும் ஆவணங்கள் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டதா? என்பது குறித்து தெரியப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அர்ஜூனன் வீட்டின் முன்பாக அவரது ஆதரவளார்கள் வீட்டின் முன்பாக குவிந்து வருகின்றனர்.